Thursday, 30 December 2021

 இறை தொண்டர்களா? இன விரோதிகளா?                    ---------------------------------------------------------------------------------------------------- முகுந்தமுரளி-   


தர்ம சாஸ்தாவே தர்மம் எங்கே? எனும் போராட்ட வாசகத்துடன் கனடா ஐயப்பன் ஆலயத்தின் முன்னாக நடந்த கவனயீர்ப்பு போராட்டம் பற்றியது இக்கட்டுரை. தவறுகளை  சுட்டிக் காட்டுவதல்ல நோக்கம் மாறாக சமூகத்தை பிரித்தாளும்   எதிரிகளின் தந்திரத்தில் தமிழர்கள் சிக்கிச் சீரழியாமல் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என்பதே பேரவா.  

மொன்றியல் திருமுருகன் கோவிலில் நடைபெற்ற இலங்கைத் தூதரின் ஆலய வருகைச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி நவம்பர் 11- ஈழமுரசில் எழுதப்பட்ட “தமிழினமே! நின்நிலையுணர்ந்து விழித்தெழுக! ” எனும் கட்டுரையில் ‘முழுத் தமிழ் சமூகமும் தங்களுடன் நிற்பதாக காட்டுவதற்கு இலங்கை அரசு புலம் பெயர்ந்த தேசத்தில் பல கபட நாடகங்கள் ஆடவுள்ளது. ஆலய வழிபாடு எனும் பெயரில் ஆலயங்களினுள் நுழைந்து தம் கபட நாடகங்களை அரங்கேற்றுவார்கள். சட்ட மூலம் 104ஐ எவ்வாறாவது சட்டரீதியாக வெற்றி கொண்டே ஆக வேண்டும் எனும் காரணம் ஒன்றிற்காக பல அற்ப சலுகைகளைத் தமிழ் மக்கள் மத்தியில் வீசி தாம் நல்லிணக்கத்துடன் செயற்படுவதாக காட்டுவதற்கு நடத்தும் நாடகத்திற்கு சுயநலத் தமிழர்கள் சிலரும் துணை போனாலும் ஆச்சரியம் இல்லை.’ என்று எழுதியிருந்தேன். 

கடந்த வாரம் எழுதிய ‘மாய மாயைகள்
எனும் கட்டுரையின் மூலம்  எம்மை இனவழிப்புச் செய்து கொண்டிருக்கும் சிறீலங்கா அரசாங்கத்தினால் “தமிழ் மக்களைப் பிரித்தாள நடத்தப்படும் அரசியல் நாடகங்களுக்கு”; துணைபோகும் ஆலய நிர்வாகிகளும், போலி அறங்காவலர்களும் நமது சமூகத்தில் செய்யும் சமூக அநீதிகள் பற்றிச் சுட்டிக்காட்டி எழுதினேன். 

இவ்வாரம் ஆலயத்தில் கார்த்திகைப் பூவை நிராகரித்த காரணம் அதன் விளைவான கவனயீர்ப்பு போராட்டம் பற்றி எழுதும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.  

ஆன்மீக வழிகாட்டல் தரும் அறிவின் பிரகாரம் சாத்வீக-நற்குண பண்புடைய வெண்மை நிறப் பூக்களால் இறைவனை பூசை செய்தால் முக்தி கிடைக்கும். ராஜச- தீவிரகுண பண்புடைய சிவப்பு நிறப்பூக்கள் பூக்களால் பூசை செய்தால் இகலோக இன்பங்களைத் தரும். பொன்மயமான மஞ்சள் நிறபூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்து வந்தால் போகத்தையும், மோகத்தையும் தரும். மேலும் எல்லாக் காரியங்களிலும் சித்தியடைய அவை உதவும். பரம்பரையை விருத்தியடைய வைக்கும் என்பது ஐதீகம்.

கருப்பு நிறம் கொண்ட பூக்கள் (தாமச) அறியாமைக் குணம் கொண்டவை ஆகையால் பூசைக்கு உபயோகம் செய்வதில்லை. ஏனைய எல்லா நிறங்களையும் கொண்ட பூக்கள் அனைத்தையும் பூசைக்கு உபயோகிக்கலாம். பூக்களை முழுமையாகவே பூசைக்கு பயன்படுத்த வேண்டும். மாறாக கைகளால் கிள்ளி பிச்சுப்பிச்சு உதிரிகளாய் வழிபாட்டிற்குப் பயன்படுத்தக்கூடாது.  

பூசைக்கு உகந்தவை அல்ல என்று விலக்கப்பட்ட பூக்கள் கூட சுவாமியின் அலங்காரத்திற்காக அதாவது சாத்துப்படியாக உபயோகிக்கலாம் என்கிறது பரார்த்த மற்றும் ஆத்மார்த்த வழிபாட்டு விதி. இவ்வாறு நியமங்கள் இருக்க ஐயப்பன் ஆலயத்தில் சாத்துப்படியாக அதாவது செங்காந்தள் மலர்களால் அலங்கார வடிவமாக 5 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்ட கார்த்திகைப் பூ அலங்காரத்தை நிராகரித்தமை என்பது எதுவித ஆத்மீக காரணங்களுக்காகவும் அல்ல என்பது புலனாகிறது. 

பகவத்கீதை ஒன்பதாம் அத்தியாயம் 26 ஆம் சுலோகத்தில் இறைவன் கூறுகின்றார்  “அன்புடனும் பக்தியுடனும் ஒருவன் எனக்கு ஓர் இலையோ, பூவோ, பழமோ, நீரோ அளித்தால் அதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன்” என்கின்றார். அதாவது பக்தனின் அன்பு பக்தியுடன் கூடிய காணிக்கையே இறைவனைத் திருப்திப்படுத்துகிறது. அதுவே பக்தனையும் திருப்திப்படுத்துகிறது. அதற்கு மாறாக அறியாமை இருளில் ஆணவத்தால் யாரைத் திருப்திப்படுத்த இச்செயலைப் புரிந்தவர்கள் செயற்பட்டார்களோ அப்பொழுது ஆன்மீகம் அல்லாது வேறுகாரணங்களுக்கான பின்னணியான செயலா எனும் பேசுபொருளாகியுள்ளது. 

அது மட்டுமல்லாது ஈழத்தமிழர்களின் தேசிய அடையாளமாக தமிழீழ மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழீழத் தேசியக் கொடியில் உள்ள புலி இலட்சனை கரையாக நெய்யப்பட்ட பட்டு அங்கவஸ்திரம்; நிராகரிக்கபட்டமைக்கும் ஆகம ரீதியான காரணங்கள் எதுவும் காட்டமுடியாது. போராட்டம் நடந்த இடத்திற்குச் சென்ற பொழுதுதான்  இந்த நிராகரிப்புக்கள்; அதிகாரத்திலுள்ள சிலரின்  சுயவிருப்பு வெறுப்பில் செயற்படும் அப்பட்டமான தமிழ் தேசிய விரோதச் செயற்பாடே என்றும் அதற்கு  எதிரான போராட்டம்தான் இது என்றும் ஆலயத்திற்கு எதிரான போராட்டம் அல்ல என்பதும் விளங்கிக் கொள்ள முடிந்தது. தமிழர்களின் வழிபாட்டுத் தலத்திலேயே தமிழர்களின் தேசிய அடையாளங்களைப் புறக்கணிக்கும் நிர்வாகத்தை மறுசீரமைக்க வேண்டும் என்பதே நோக்காகக் காணப்பட்டது. 

இந்தப் போராட்டத்தின் ஆணிவேராக 2019 ஆண்டு;  நிர்வாக சபைகூடி முடிவு எடுக்காமலே, சிறீலங்கா தூதரகத்தின் உயர் ஸ்தானிகருக்கு கோயில் கும்பாபிசேகத்திற்கு அழைப்பு விடுத்த சம்பவமே காணப்படுகிறது. அது தொடர்பான சர்ச்சைகளும், அது தொடர்பாக எதிர்த்து நியாயம் பேசிய அல்லது பேசமுற்பட்ட பல அங்கத்துவர்களின் அங்கத்துவத்தை நீக்கியமை போன்ற பல விடயங்கள் அமைந்திருந்தமையும், பொறுத்தது போதும் எனும் உச்சக்கட்டத்தில் தற்பொழுது போரட்ட வடிவமாக  உருப்பெற்றுள்ளது. மாலை போட்ட காரணத்தால் மௌனம் காக்கும் ஐயப்ப பக்தர்கள் மகரஜோதியின் பின் நியாhயத்தைப் பேசுவார்கள் என்பதும் அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. 

போராட்டக்காரர்களுக்கும் நிர்வாகசபையினருக்கும் இடையில் ஒரு தீர்வுகாணும் முயற்சியாக அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்த விரும்பிய ஊடகவியலாளனாக ஐயப்ப அடியவர்களின் ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட முயற்சியாக  போராடும் தரப்பின் கோரிக்கைகள் கையளிப்பு விடயமாக  ஐயப்பன் ஆலயத்தில் உபதலைவராக இருக்கும் குமரன் எனும் அடியவருடன் நான் பேசியபொழுது நற்பண்பும், பணிவும் அவரின் பதில்களின் சாந்தமும், அமைதியும் ஆலயம் தேசியத்திற்கு எதிரானது அல்ல எனத் தந்த விளக்கங்களும் எந்தப் பிரச்சைனயும் பேசித் தீர்க்கலாம் இன்றும், நாளையும் அதற்கான வாயு;ப்பு சற்றுச் சிக்கலே என்று கூறிய விதத்தின் மூலம் எனக்குள் நம்பிக்கையை விதைத்தது. அதன் தொடர்ச்சியாக அமைதி ஏற்படுத்த விரும்பிய ரூபன் அரியரட்ணம் ரஜிதன் எனும் இரு ஐயப்ப பக்தர்களின் அயராத முயற்சியால் மீண்டும்  உள் அழைக்கப்பட்ட பொழுது காந்தி என்றழைக்கப்படும் சௌந்தரநாயகம் மரியாம்பிள்ளை அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டோர் கையளிக்க வந்த கோரிக்கை மடலை ஏற்பதற்கு மாறாகப் ஊடகவியலாளர்களை கமராக்களுடன் வரவேண்டாம் என்று கூறி  அகன்று சென்றுவிட்டார்.  

அவ்வாறு அவர் விலகிச் சென்றதும் பக்தர்களுக்கு இடைஞ்சல் விளைவிக்கக் கூடாது எனும் நன்நோக்குடன் ஆலயத்தினுள் மேலும் தாமதிக்காது அவமதிக்கப்பட்ட பொழுதும் அமைதியாக கோரிக்கையைக் கையளிக்க வந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெண்மணியும் நானும் சக ஊடகவியலாளர்களும் ஆலய வளாகத்தில் இருந்து வெளியேறிவிட்டோம். 

போராட்டக்காரர்களுக்கும் ஆலய நிர்வாகத்திற்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தி அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்தும் நல்லெண்ணத்துடன செயற்பட்ட மற்றுமொரு ஊடகவியலாளர் தேடிப்பார்.கொம் குமார் தில்லைநாதன் ஆலய நிர்வாகத்துடனும் தொடர்பு கொண்டு காந்தி என்றழைக்கப்படும் சௌந்திரநாயகம் மரியாம்பிள்ளை (நிர்வாக சபைச் செயலாளர்) இடம் பேசியபொழுது நிர்வாகம் பேச்சுவார்த்தை எதனையும் போராட்டக்காரர்களுடன் நடத்தப்போவதில்லை என்றும் மாறாக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும்; தெரிவித்துள்ளார். சாத்வீகப் போராட்டத்திற்கு பதிலாக சட்டநடவடிக்கை எடுக்கும் இந்தச் செயலானது மிகப் பெரிய வெகுசனப் போராட்டத்தையே ஊக்குவிக்கப் போகின்றது.  இது ஸ்ரீலங்காவின் சூட்சும நிகழ்ச்சி நிரல் தமிழர்களைப் பிரித்தாளும் சதியில் வெற்றி காண்கிறது என்பதனையே எடுத்தியம்புகிறது. அமைதியாகப் பேசி தீர்க்கவேண்டிய ஒரு விடயத்தை அலட்சியப்படுத்தி எடுக்கும் சட்ட நடவடிக்கை முயற்சியானது நேர்மை, ஒழுக்கம் போன்ற பாதையில் செல்ல வலியுறுத்தும் விரதமான ஐயப்ப வழிபாட்டின் உயர் தத்துவத்தைப் புரிந்து கொள்ளாத அறியாமையின் வெளிப்பாடே! தத்-வ-மசி எனும் பொருள் விளங்காப் பேதமையே அன்றி வேறில்லை. தன்னை உணரும் மனிதன் தெய்வநிலைக்கு உயர்கின்றான். தன்னகந்தையில் செயற்படும் மனிதன் தன்னையும் தாழ்த்தி சமூகத்தையும் சீரழிக்கின்றான்.” ஓம் தத் சத்! 

இருளைப் போக்கும் ஒளி தீபம் தான் குரு. அத்தகைய குருவை நாடிச் சென்று விரதம் இருந்து, அந்த குருவின் மூலமாகவே சபரிமலை வாசனை வந்தடைய வேண்டும் என்பது சபரிமலைக்கு வருபவர்களுக்கு சபரிகிரீசன் விதித்திருக்கும் விதிகளில் ஒன்று. நேர்மை, ஒழுக்கம் போன்ற பாதையில் செல்ல வலியுறுத்தும் விரதமாக ஐயப்ப வழிபாடு விளங்குகின்றது. அத்தகைய உயரிய வழிபாட்டில் இருந்துகொண்டு நேர்மையற்ற முறையில் அதிகார அகங்காரத்தில் செயற்படும் அசுர குணம் உடையோர்களிடம் இருந்து மெய்யடியார்களை ஐயப்பனே காப்பாற்ற வேண்டும்!  சுவாமியே! சரணம் ஐயப்பா!                                                                         

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை                                                                       சுவாமியே! சரணம் ஐயப்பா!                                                                                    தில்லும் முல்லும் அழிவிற்கு வித்தே                                                                     சுவாமியே! சரணம் ஐயப்பா!


No comments:

      முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்லர்..!             முகுந்தமுரளி உலகப் பொதுப் புத்தாண்டு வாழ்த்து உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும். 1.1....