மாய மாயைகள் ! முகுந்தமுரளி
மற்றவர்கள் உரிமைகளை நசுக்கி, நியாயத்தையும், தர்மத்தையும் குழிதோன்றிப் புதைத்து, தங்கள் கைப்பிடிக்குள் ஒரு முழுச் சமூகத்தையும் இறுக்கிப் பிடித்து, இயற்கை கொடுத்த சொத்தைப் பறித்து எடுத்து, கொள்ளையடித்து கொலைபுரிந்த அதர்மர்களை எதிர்த்து மக்களின் அரணாக விளங்கி நின்ற உத்தமர்களின் உயிர்களையும் உலகமே ஒன்று சேர்ந்து பறித்தெடுத்து உலக நீதியையே கொன்று புதைத்தது. இவ்வாறன அனர்த்தனத்தால் கொடிய வலியோடு வாழும் தமிழினம் மிகவும் ஒரு குழப்பகரமான காலகட்டத்தினுள் பயணித்தாலும் புலம்பெயர்ந்த தேசத்திலே ஒன்றுபட்டு நமக்கு நடந்த அக்கிரமங்களை மீண்டும், மீண்டும் வலியுறுத்தி தர்மத்தை நிலைநாட்டப் போராடி வருகின்றனர். இதன் மூலம் ஏற்படும் சர்வதேச மாற்றங்களை தடுக்க எதிரிகள் கோடிக்கணக்கில் பணத்தை வீசி எறிந்து எதிர்ப்பரப்புரைகளை மேற்கொண்டும் தடுத்திட முடியாமல் உண்மைகள் வெளிவருவதைக் கண்டும், நியாயத்தின் வெளிப்பாடுகளைச் சீரணிக்க முடியாமலும் பொய்ப் பரப்புரைகளை மேற்கொள்கிறனர்.
மக்கள் ஒவ்வொருவரும் நியாயத்திற்காகப் போராடும் மக்களுக்குத் துணை நிற்பதுதான் சமூகநீதி. இதனை மீறி அற்ப சுயலாபங்களுக்காக எதிரிகளுக்குத் துணைபோகும் வகையில் நடக்கும் ஒவ்வொருவரும் சமூகத்திற்கு அநீதியே புரிகின்றனர். இன்று எதிரி எம்மைத்;;;;; திசைதிருப்புவதற்காக பல குப்பைகளை நம்மவர்கள் துணையுடனேயே நம் மீது வீசி எறிகின்றான். அவை எவை? அவர்கள் யார்? ஈழத் தமிழர்களிடையே ஈனத்தனமாகச் செயற்படும் கோடாரிக் காம்புகள் பற்றிய விழிப்புணர்வுப் பதிவு இது!
ஆன்மீகம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. மெய்யான ஆன்மீகம் அரசியல் அழிவு வேலைகளுக்குத் துணை போகாதது, சமாதானத்தையும், சமத்துவத்தையும் கொண்ட மானிடத்தை வழிநடத்தக்கூடிய வல்லமை மிக்கது. ஆனால் அது மதம் எனும் குறுகிய வட்டத்தினுள் சிக்கிச் சீரழிகின்றது. கிறித்தவம், இசுலாமியம், இந்துத்துவம் இன்னும் உலகளாவிய எல்லா மதங்களும் ஆன்மீகத்தை போதிக்கிறது. இருப்பினும் ஆன்மீகம் என்ற பிரம்மாண்டமான உண்மையை அவரவர் கலாச்சாரத்திற்;கு ஏற்ப வளைத்துக் கொண்டார்கள். அதில்தான் பிரச்சனையே முளைத்தது. இன்னுமொரு மானிட இனத்தை கூறுபடுத்திப் பலவீனப்படுத்த பயன்படுத்தப்பட்ட இம்மதங்களே இன்றும் மனிதகுலத்துள் நிலவும் அரசியல் முதல் அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணமாக விளங்குகின்றன. மதம், மொழி, இனம், நாடு, கட்சி, இத்தனை பிரிவினைகளுக்கும் அடிப்படை காரணம் ஆன்மீக அறியாமைதான். ஆன்மீகத்தை உள்ளது உள்ளபடி சரியானபடி புரிந்து கொள்ளும் போதுதான் மதம், கடவுள், பிறப்பு, இறப்;பு, இம்மை, மறுமை, கொலை கொள்ளை, பாவம், பழி இப்படி எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு சாமான்யனாலேயே தீர்வு காணமுடியும். அறிவியலும் ஆன்மீகமும் சரியாக இருந்தால் அரசியலை எளிமையாக சீர்திருத்திவிட முடியும்.
ஆனால் ஆன்மீகவாதி என்று நெற்றியில் பட்டையுமிட்டு “படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில்” என்னும் பழமொழிக்கேற்ப கனடாவில் கடந்த காலங்களில் சிவத்தொண்டு செய்யும் மெய்யடியவராகத் தமை மாயத் தோற்றத்தில் காட்டிய ஒருவர், சிவத்தமிழ் மெய் அடியார்கள் துணையுடன் சிவாலயம் அமைத்து நடந்த ஆலயத்தை ஈற்றில் மூடி ஆலய உடமைகளை விற்றும், விற்காமலும் மக்களின் பணத்துடன் இலங்கை சென்றவர் பௌத்த-சைவ விருத்தி நாட்டின் அபிவிருத்தி எனப் பகிங்கரமாக பிரசங்கம் செய்தும், சாதிப்பிரிவினை பேசியும் மாயையின் பிடியில், அடியார் அவர்கள் புரிவது சமூக அநீதியே என்றால் மிகையாகாது.
எம்மை இனவழிப்புச் செய்துகொண்டிருக்கும் சிறீலங்கா அரசாங்கத்தினால் “தமிழ்மக்களைப் பிரித்தாள நடத்தப்படும் அரசியல் நாடகங்களுக்கு”; துணைபோகும் ஆலயநிர்வாகிகளும், போலி அறங்காவலர்களும் நமது சமூகத்தில் உள்ள நச்சுக் கிருமிகளே.
இதேபோல் இன்னும் எத்தனையோ துரோகங்கள் திரைமறைவில் நடக்கிறது மாயையின் பிடியில் மத அரசியல் என்றால் அடுத்த தளம் மாய சினெமா.
சினெமா அல்லது திரைப்படம் பொதுவாக ஒரு பொழுது போக்குச் சாதனமாக வெகுசன ஊடகமாக விளங்கினாலும் மிகச் சிறந்த ஒரு கலை மற்றும் ஒரு நுட்பமாகும். இது படங்களின் திட்டத்தின் மூலம் கதைகளை விவரிக்கும் கலை, இயக்கத்தின் மாயையை உருவாக்க, விரைவாகவும், அடுத்தடுத்து, சட்டகங்களைக் காண்பிக்கும் நுட்பமாகும். முழுநீளத் திரைப்படங்களும், குறுந் திரைப்படங்களும், ஆவணத்திரைப்படங்களும் இதனுள் அடக்கம்.
இத்தகைய சினெமாக் குறுந்திரைப்படம் இரண்டினைப் படைத்தவர் எழுத்தாளரும், இயக்குநருமாகிய மாயா பஸ்ரீன் ஆவார். ஆம், நமது கதைகளை நாமே சொல்வோம் எனும் தாரக மந்திரத்துடன் நமது வலிகளையும், வேதனையையும் உலகிற்கு எடுத்துக்காட்டுவது போல் பாசாங்கு செய்து “பெண்புலி” எனும் ஆங்கிலக் குறுந்திரைப்படத்தின் மூலம் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பொய்யாக சித்தரித்துள்ளார். இவரது படைப்புத் திறனுக்கும் கற்பனை வளத்திற்கும் இவர் பாராட்டைப் பெற்றாலும் தன் சொந்த இனத்திற்கே தீங்கை விளைவிக்கும் வகையில் அப்பட்டமான பொய்யை எதுவித ஆதாரமுமில்லாத ஒரு கற்பனை படைப்பை உருவாக்கியுள்ளார். பொன் போல இவர் மின்னுவதாகப்பட்டாலும் மாசுபடிந்த பித்தளையே. “மின்னுவதெல்லாம் பொன்னல்ல”
சிபிசி CBC என்பது கனடிய ஒலி/ஒளிபரப்பு கூட்டுத்தாபனம் என்று பொருள்படும். இதற்கு கனடிய அரசு நிதி ஆதரவு தருகிறது. வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் என பல ஊடக தளங்களில் இது இயங்குகிறது. இந்த சிபிசி மூலம் ஒளிபரப்பப்பட்ட “பெண்புலி” (TIGRESS) மிகவும் உண்மையை நேசிக்கும் தமிழ் மக்கள் அனைவரையும் வேதனையுற வைத்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட தமிழீழத்தில் தமிழ் இனப்படுகொலைக்கு எதிராகப் போராடிய உத்தமப் போராளிகளை பயங்கரவாதிகளாகச் சித்தரிப்பதையே நோக்கமாக, உண்மைக்கு மாறான ஒரு புனைவின் மூலம் குறிவைக்கப்பட்டுள்ளது.
பொறுப்புக்கூறலைத் தவிர்ப்பதற்காகவும், பாரிய படுகொலைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் சொத்துக்களைத் திருடுவதன் மூலம் அரசியல் மற்றும் பொருளாதார நன்மைகளைப் பாதுகாக்கவும், மாற்று வரலாற்றை உருவாக்குவதன் மூலம் புதிய யதார்த்தத்தை உறுதிப்படுத்தவும் இனப்படுகொலை குற்றவாளிகள் உண்மையை மறைக்கிறார்கள். இதன் பின்னணியில் இப்படத் தயாரிப்பை நாம் உற்றுநோக்கினால் தமிழ்நாட்டில் பதிவுசெய்யப்பட்ட ஒரு படநிறுவனமும், கனடாவிலுள்ள ஒரு படநிறுவனமும் நிதியை வழங்கியுள்ளது. பொருளாதார இலாப நோக்கற்ற இவ்வாறான நிதிப் பின்புல தயாரிப்பு நோக்கம் தமிழர் விடுதலைப்போராட்ட வரலாற்றை மாற்றியமைக்க உண்மையை அப்பட்டமாக மறைப்பதும், இதன் மூலம் உணர்ச்சி வசப்பட்டு தமிழ் இளைஞர்கள் கண்மூடித்தனமாக சிபிசி போன்ற சுயாதீன ஊடகங்களுடன் முரண்பட வைத்து ஆதாயம் காண்பதும் ஆகும்.
மாயா பஸ்ரின் அவரது படம் பற்றிய ரொறாண்ரோ நவ் (TORONTO NOW) உடனான நேர்காணல் ஆனது தீங்கிழைக்கும் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. புனைந்த பொய்க் கதையை காட்சிப்படுத்தி உள்ளமையானது, தமிழீழ மக்கள் அவர்களின் விடுதலைப் போராட்டம் போன்ற உண்மைகளை தவறாக சித்தரிப்பதையே நோக்காக கொண்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் 8 வயது சிறுமி ஒருத்தியை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றனர் என்றும்;; அச்செயல்பாட்டின் போது, தன் மகளை விடச்சொல்லிப் போராடிய அவளது அப்பாவி தந்தையை விடுதலைப்புலிகள் சுட்டுக் காயப்படுத்தினர் போன்றும் கதை சுழல்கின்றது. கச்சிதமாக விடுதலைப் போராளிகளின் சீருடை மற்றும் தமிழர்களையும் பயன்படுத்தி கூறப்பட்ட இந்தக் கதைக்கு வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் எந்தவிதமான ஆதாரங்கள் கிடையாது. இவ்வாறான சம்பவங்கள் நடக்கவில்லை. இது தெளிவாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் அரக்கத்தனமான செயலாகும். ஏனோ தெரியவில்லை புலம் பெயர் தேசத்தில் தமிழர்கள் விடுதலையை நோக்கிச்; செயற்படும் எந்த ஒரு அமைப்பும் இதுவரை இக்குறுந்திரைப் படத்திற்கு ஒரு கண்டன அறிக்கையைக் கூட வெளிப்படுத்தவில்லை.
மாயா பஸ்ரியானின் இத்திரைப்படம் ஒரு ஆவணத் திரைப்படமும் அல்ல. ஆவணத் திரைப்படங்கள் என்பது கற்பனை அல்லாத திரைப்படம் ஆகும். ஆவணத்திரைப்படங்கள் “உண்மையை ஆவணப்படுத்துதல், முதன்மையாக அறிவுறுத்தல், கல்வி அல்லது வரலாற்றுப் பதிவை பராமரிக்கும் நோக்கங்களுக்காக" எடுக்கப்படும் படங்கள் ஆகும்.
கண்டன அறிக்கைகளுக்கும், மறுப்புப் போராட்டங்களுக்கும் அப்பால் தமிழர்களாகிய நாம் எம் மக்கள் மத்தியில் இருக்கும் தேசியம் சார்ந்த படைப்பாளிகளை ஊக்குவிக்க வேண்டும். அடிமைப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டு வரும் ஒரு தேசிய இனத்தின் ஏக்கமும், பெருமூச்சும் கண்ணீரும் குருதியும், மரணமும் காயங்களும் பிரிவும் அலைவும் வீரமும் விடுதலை உணர்வும் போரும் நிமிர்வும் என எமது வலிகளையும், வேதனைகளையும் வரலாற்று உண்மைகளோடு, ஆதாரங்களோடு வெளிப்படுத்தும் படைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம் உலகையே அசைக்க எமக்கென்றோர் திரையுலகம் அவசியமானது. காலம் இதை நமக்கு உணர்த்துகிறது. கருத்தில் கொள்வோமா?
No comments:
Post a Comment