Thursday, 6 January 2022



இலங்கை பற்றிய செய்திகள் அங்குள்ள குழப்பநிலைகளை, குளறு படிகள் என ஒரே குழப்பமாகவே காண்பிக்கின்றன. குறைந்த பட்சம் பத்தாண்டுகளுக்காவது யாராலும் அசைக்க முடியாத ஒரு ஆட்சியை நடாத்திக் காட்ட முடியும் எனும் நம்பிக்கையோடு ஆட்சிக்கு வந்த சகோதரர்கள் அரசாங்கம் ஆட்டம் காணும் நிiயையே இந்தக் குழப்ப நிலைகள் காட்டுகின்றன. 
 நடப்பவை யாவும் நாடகமே …. முகுந்தமுரளி 

சந்தைக்குச் சென்ற அமைச்சர் பொருட்களின் விலை உயர்வு தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கோள்விக்கு பதிலளிக்கையில் அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சித்தாராம். இதனை அடுத்து சனாதிபதிக்கான நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி கல்வி இராஜாங்க அமைச்சராக  பதவி வகித்த சுசில் பிரேமஜயந்தவின் பதவி திடீர் நீக்கம் நடைபெற்றதாம். இதனைத் தொடர்ந்து ளுடுPP தலைமையிலான அரசாங்கத்தின் அங்கம் வகிக்கும் கட்சிகள் பரஸ்பர குற்றச்சாட்டுக்களுடன் ஆளும் கூட்டணியில் விரிசல் காணப்படுவதால், அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரத்துவத்தின் சாத்தியமான மறுசீரமைப்புடன் கூடிய அமைச்சரவை மறுசீரமைப்பும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


12 ஜனவரி 2022 அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள் மற்றும் சட்ட சபைகளின் தலைவர்கள் மாற்றப்படுவார்கள் என உள்ளக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவுடன் ஒப்பந்தமொன்றை இரவோடு இரவாக அமைச்சரவைக்கு அறிவிக்காமல் மேற்கொண்ட சனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக அமைச்சரவை அங்கத்தவர்களான மூவர் உயர் நீதி மன்றத்தை நாடியிருக்கிறார்கள். அவர்கள் வேறு யாருமல்ல கோட்டாவின் விசுவாசிகளும், அவரின் கடந்தகால வெற்றிக்காக இனவாதத் தீயை எழுப்பியவர்களுமான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில.  

அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாடுகளில் குளறுபடி, அரசாங்கத்தின் தோல்விகரமான கொள்கைகளால் நாடு வங்குரோத்து அடைந்துவிட்ட நிலை, கொவிட் பெருந்தொற்றுக் காரணமாக விளையும் நெருக்கடிகள், மீளச் செலுத்தவேண்டிய சர்வதேசக்கடன் நெருக்கடிகள் இவற்றிற்கு எதிரான சரியான கொள்கை நிலைப்பாட்டோடு இல்லாத எதிர்க்கட்சிகள் என்ற நிலையே காணப்படுகின்றது. 

இவ்வாறான நிலையில்தான் ஆளும் கட்சியின் அமைச்சர்களும், பங்காளிகளும் எதிர்க்கட்சிகள் செய்ய வேண்டிய வேலைகளை தாங்களே செய்கின்றனர். இவ்வாறு இவர்கள் செய்ய முற்படுவதை புலனாய்வுத் துறை தகவல்கள் சனாதிபதிக்கு அறியத்தரவே சனாதிபதியினால் கல்வி இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த சுசில் பிரேமஜயந்தவின் திடீர் நீக்கம் நடைபெற்றதாம் என இன்றைய செய்திகள் கூறுகின்றன. 

அரசாங்கத்தில் அங்கம் வகித்துக் கொண்டு அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிப்பதையோ அல்லது சனாதிபதி, நிதியமைச்சரின் கொள்கைத் திட்டங்களை விமர்சிப்பதையோ அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது. ஆகவே அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தும் நோக்கத்தில் விமர்சிக்கும் நபர்களுக்கெதிராக கடுமையான ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். அரசாங்கத்தின் மீது விமர்சனம் உள்ளதென்றால் கொள்கையுடன் இணைய முடியாதென்றால் அதனை எதிர்க்கும் நபர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறமுடியும் என ஸ்ரீலங்கா பொதுசன முன்னணியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். 

நிர்வாகக் கட்டமைப்பில் காணப்படும் குறைபாடுகளை சுட்டிக்காட்டுவது அரசாங்கத்திற்கு எதிரான கருத்தென்று கருதமுடியாது. கருத்துச் சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானது. அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு என்ற நிலையில் இருந்துகொண்டு கருத்துச் சுதந்திரத்தை முடக்கமுடியாது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். 

இதேதருணத்தில் பெற்றோல், டீசல் நிரப்பிய இரண்டு கப்பல்கள் வங்கியில் நாணய கடிதம் திறக்காததால் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அடுத்துவரும் 8 நாட்களுக்குள் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும். அதேபோன்று எதிர்வரும் 15 ஆம் திகதியில் இருந்து நாடு மின்துண்டிப்பை நோக்கிச் செல்லும் அபாயம் இருக்கிறது என்று ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் சம்புக்க ரணவத்தை தெரிவித்துள்ளார். 

இதேவேளை வலுச்சக்தி அமைச்சர் உதய கம்மன்பில  இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த திருகோணமலை எண்ணெய்க் களஞ்சிய நிலையத்தை மீண்டும் எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளமை எமக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகும். ஜனவரி மாதம் 12 ஆம் திகதி திருகோணமலை எண்ணெய்க் களஞ்சிய நிலையத்தில் இலங்கைக் கொடியைப் பறக்கவிடுவோம் என தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில் திருகோணமலை எண்ணெய்க் குதத்தை இந்தியாவிற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனப் பொய்யாக செய்திகள் பரப்பப்படுவதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நேரடிக்கட்டுப் பாட்டிலுள்ள 24 எண்ணெய்க்குதங்கள் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (ஊPஊ) துணை நிறுவனத்தின் மூலமாக நிர்வகிக்கப்படும் 61 எண்ணெய்க்குதங்களையும் இணைத்து 85 எண்ணெய்க் குதங்களின் நிர்வாக அதிகாரம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வசமே இருக்கும். இலங்கை ஐ.ஓ.சிக்கு 14 குதங்களே இருக்கும். 


2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த எண்ணெய்க் களஞ்சிய நிலையத்திற்குச் சென்ற எமது அதிகாரிகளை இந்திய அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதுடன், இந்தியாவின் நேரடித் தலையீட்டில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகளைக் கைது செய்தனர். இவ்வாறு தண்டிக்கப்பட்ட அதிகாரிகள் மூலமாகவே இலங்கைக் கொடி பறக்கவிடப்படும் என்றும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இவரும் இங்கு சனவரி 12ஆம் திகதியைக் குறிப்பிடுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கி அபிவிருத்தி ஒப்பந்தத்தின் - வீதிகள், புகையிரதங்கள் மற்றும் எரிசக்தித் திட்டங்களில் இருந்து மற்ற உள்கட்டமைப்பு அபிவிருத்தி பின்னடைவுகளை இந்திய அதிகாரிகள் தெளிவாகவே பார்க்கின்றனர். 

2003 ஆம் ஆண்டில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லங்கா ஐஓசி என்ற இலங்கை துணை நிறுவனத்தை நிறுவியது, இது இலங்கை அரசாங்கம் மற்றும் சிபிசி உடனான ஒப்பந்தத்தின் கீழ், 850 ஏக்கர் தொட்டி பண்ணையை 99 சேமிப்பு தொட்டிகளைக் கொண்ட வசதியை மேம்படுத்த 35 ஆண்டு குத்தகையைப் பெற்றது. 

எல்.ஐ.ஓ.சி வருடாந்தம் 100,000 டொலர்களை இலங்கை அரசாங்கத்திற்கு குத்தகைக்காக செலுத்தியது, ஆனால் சொத்துக்களை எதுவும் செய்யவில்லை. இலங்கையில் போர் நடந்து கொண்டிருந்த நிலையில், திருகோணமலையில் முதலீடு செய்வது சாத்தியமற்றதாகக் காணப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான காப்புறுதியாக கிழக்கில் ஒரு இந்திய வசதியைப் பெற்றதன் மூலம் இலங்கைக்கு நிம்மதி கிடைத்தது, ஆனால் கூட, ஒப்பந்தத்தை முறைப்படுத்துவதைத் தள்ளிப் போடுவதற்கான வழிகளை இலங்கை அரசாங்கம் கடைப்பிடித்தது. 

2005ஆம் ஆண்டுக்கு பின்னர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றதும் முறைப்படுத்தல் சாத்தியமற்றதாக மாறியது. இந்தியாவைப் பொறுத்தவரை, 2003 ஒப்பந்தத்தில் முடிவடையும் விதி இல்லாததுதான் ஒரே மீட்பர். ராஜபக்சேவுடன் இந்தியாவின் குளிர் உறவு இருந்தபோதிலும், சுத்திகரிப்பு மற்றும் எண்ணெய் சேமிப்பு வசதியை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் அவ்வப்போது வெளிப்பட்டன. ஆனால் இலங்கை ஐஓசி ஆர்வம் காட்டவில்லை. அம்பாந்தோட்டைக்கு ஒரு மூலோபாய எதிர்விளைவாக திருகோணமலையில் டில்லியின் சாத்தியக்கூறுகள் காணப்பட்டாலும் அதனை முன்னோக்கித் தள்ளும் இராஜ தந்திர ஆற்றல் அதற்கு இருப்பதாகத் தெரியவில்லை என்று கருதப்பட்டாலும் இந்தியா தனது மூலோபாயக் கொள்கை கூட்டு நாடுகளுடன் ஒரு தெளிவான நகர்வையே மேற்கொள்கின்றது. 

2009 இன்பின் தெற்கிலும், மேற்கிலும் சீனாவின் பிடி ஓங்கியிருப்பதும் அது வடக்கு நோக்கியும் நகர்வதும் சர்வதேசத்திற்கு ஒரு சவாலே. அதைத் தடுப்பதற்கான நகர்வுகள் சூட்சுமமான, திரைமறைவு நாடகங்களே.  அதேபோல் ராஜபக்ச சகோதரர்கள் கட்சியினுள் ஆடுவதும் நாடகங்களே… இந்நாடகங்கள் சனவரி 12 அல்லது மாத இறுதிக்குள் நாட்டில் ஆட்சியில் மாற்றம் ஒன்று ஏற்படப்போவதையே எடுத்துக் காட்டுகின்றன. பங்காளிகளே பகையாளியான நிலையில் கோட்டாவின் நகர்வு இராணுவ நகர்வாக முந்துமா அல்லது  இந்திய-மேற்குலகின் மூலோபாய நகர்வுகள் அறுவடைகளை வென்றெடுக்குமா? நாடகங்கள் விடும் வேளை உச்சக் காட்சியில்  குழப்பங்கள் அனைத்திற்கும் தீர்வு ஒன்று நிச்சயம் உண்டு. தமிழர்களுக்கான தீர்வும் காலத்தின் கைளில் உண்டு. 


No comments:

      முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்லர்..!             முகுந்தமுரளி உலகப் பொதுப் புத்தாண்டு வாழ்த்து உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும். 1.1....