Sunday, 7 January 2024

      முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்லர்..!             முகுந்தமுரளி



உலகப் பொதுப் புத்தாண்டு வாழ்த்து உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும். 1.1.2024. ஆம் அங்கிலப் புத்தாண்டு என நம்மில் சிலர் கூறுகின்றோம். ஆனால் இன்று உலகிலுள்ள அனைத்து மானிடர்களும் ஏகமனதாக ஏற்று கொண்டாடும் பொதுப் புதுவருடம் ஆகையால் உலகப் பொதுப் புத்தாண்டு என்று விழித்தல் மிகையாகாது. 

நம்முன்னோர் ஆன்மீக (மெஞ்ஞான) அறிவியல் ரீதியாக ஒரு வருடப் பிறப்பை வானியல் அடிப்படையிலும்,  இன்னும் ஒரு வருட பிறப்பை பருவ காலங்களின் அடிப்டையிலும் சூரியச் சுழற்சியை மையமாக வைத்தே வகுத்துள்ளனர்.


தைப்பொங்கலும், தமிழ் புத்தாண்டும்



உண்மையில் எனக்கு அறிவு தெரிந்தநாள் முதல் “தைப்பொங்கல்” என்று அறிந்தே வந்த பொங்கல் திருநாள் அது உழவர் திருநாள் என்றும் கூறப்பட்டதை செவி வழி நான் அறிவேன். பின்னாளில் இதே தைப்பொங்கல் தமிழர் திருநாள் என விழிக்கப்படலாயிற்று. பின்னர் இது தமிழ்ப் புத்தாண்டு என கொண்டாடப்படலாயிற்று… இதனை நாம் தமிழ்புத்தாண்டாய்  ஏற்றுக்கொள்வதன் அவசியத்தையும் காலத்தின் கட்டாயம் என நாம் கருதுகின்றோம். 

ஆதி அந்தமற்ற ஒரு தர்மத்தை அல்லது மார்க்கத்தை கடைப்பிடித்து வந்த தமிழினம் இன்று இந்துக்கள் எனும் மத முத்திரைக்குள் முடக்கப்படுகின்றது. அதனுள்ளும் சைவம் வைஷ்ணவம் என்று பிரித்தாளப்படுகின்றது. அதையும் தாண்டி ஏகப்பட்ட ஆன்மீகக் குழுக்கள் போலித்தனமாக மக்களின் நம்பிக்கைகளை அடிப்படையாக வைத்து தமிழர்களது ஐக்கியத்தை சிதைக்கின்றது. ஏன் தமிழுக்கு பெருந்தொண்டாற்றிய றோமன் கத்தோலிக்கப் தமிழ்க்குடிப்பெருமக்களின் ஐக்கியம் கண்டு அங்கும் பிரிவினைகளை நம்பிக்கையின் அடிப்படையில் ஊக்குவித்து உலக அரசியல் சதித்திட்டங்கள்<, அதன்  நிதிப்பின்னணியில் பல பல புதிய புதிய சபைகளை உருவாக்கி இன்றும் மதமாற்றங்களைப் புரட்சிகரமாகத் தொடர்கின்றன. இது இன்று நேற்றல்ல அன்றே தொடங்கியது.

குடியேற்ற ஆட்சியாளர்களும் குடிகளைச் சிதைக்கச் செய்த சதியும் 

குடியேற்ற ஆட்சியாளர்கள் வியாபாரம் செய்ய வருவது போல் வந்து நம் மன்னர்களுடனும் மக்களுடனும் வியாபார உறவுடன் ஆரம்பித்து, எங்கள் சமூகத்தினுள் ஊடுருவி எமது பலம் பலவீனம் இரண்டும் அறிந்து எம்சமூகத்தில் திருமண உறவுகளையும் ஏற்படுத்தி தமது சூழ்ச்சி கோட்பாடுகளின் அடிப்படையில் எம்மைப் பிரித்தாளத் தொடங்கி எமது இராச்சியங்களைக் கைப்பற்றி குடியேற்ற ஆட்சியை நிலைநாட்டினர். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்றும் எம்மதமும் சம்மதமே எனும் உயர்கொள்கையில் வந்தாரை எல்லாம் அரவணைத்து வாழ வைத்தே வாழ்ந்த எங்கள் தமிழினம் தன்னினத்தை கருவறுக்க நடந்த சதிச்சூழ்ச்சி அறியாமல் வீழ்ச்சியடையத் தொடங்கியது. திட்டமிடப்பட்ட வகையில் மதங்களைப் பரப்பி தமிழர்களிடையே மத ரீதியான பிரிவினைதனை வெற்றிகரமாக உருவாக்கினர். இது தமிழினத்திற்கு மட்டும் நடந்ததல்ல. கிழக்கிந்திய கொம்பனி எனும் பெயரில் ஊடுருவி ஆட்சிகளைக் கைப்பற்றி ஒட்டு மொத்தத்தில் மூன்றாம் உலக நாடுகளைச் சிதைக்க உளவாளிகள் நடத்திய ஒரு சதி. இதற்கான ஆவணங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. துருக்கியில் உள்ள வக்ஃப் இக்லாஸ் பதிப்பகம் 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆங்கிலத்தில் வெளியிட்டது. இதே ஆவணம் தமிழிலும் பிரிட்டிஸ் உளவாளியின் ஒப்புதல் வாக்கு மூலம் என அடையாளம் பதிப்பகத்தால் 2022 இல் நாஞ்சிலான் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது. 

எம்மதமும் சம்மதமே

எனவே தமிழர்களிற்கிடையே அவரவர் நம்பிக்கைகளுக்கேற்ப தமிழர்கள் எம்மதமும் சம்மதம் என்ற கொள்கைவழி பிற மார்க்கங்களைத் தழுவத்தொடங்கினர். இலங்கையை எடுத்துக் கொண்டால் புத்தரின் வருகையின் பின் சங்கமித்திரை வருகையினால் தமிழர்களும் பௌத்தத்ததை தழுவினர், அரபியர்களுடன் வியாபார உறவாடலாலும் மற்றும் தமிழகத்தில் இருந்துவந்த   முகமதுவின் போதனையை ஏற்றுக் கொண்ட தமிழர்களாலும் இசுலாத்தைத் தழுவிய இசுலாமியத் தமிழர்கள் பின்னாளிள் குடியேற்ற ஆட்சியாளர்களால் கிறிஸ்தவத் தமிழர்கள் எனப்பிரிக்கப்பட்ட எமது இனத்தின் ஐக்கியத்தை வலுப்படுத்த உழவர் திருநாளான தமிழர் திருநாளை “தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடுவதே சாலப் பொருத்தம் ஆகும். அவரவர் தங்கள் நம்பிக்கைகளுக்கு ஏற்ப சூரியனுக்கு நன்றி கூறும் எங்கள் மரபுபேணி தமிழ் புத்தாண்டைக் கொண்டாலாம் என்பதே அடியேனின் கருத்தாகும். 

தைப்புத்தாண்டுதனை வெவ்வேறு மார்க்கங்களை பின்பற்றும் தமிழர்கள் தத்தமது  நம்பிக்கையின் அடிப்படையில் தத்தமது வழிபாடுகளுக்கு ஏற்ப கொண்டாடலாம். இதுவே வழிபாட்டு சுதந்திரம். 

சித்திரைப் புத்தாண்டும்  சிதம்பர ரகசியமும்

ஆன்மீக அல்லது மெஞ்ஞான அறிவியல் ரீதியான வருடப் பிறப்பு என்பது பிரபஞ்ச வெளியை 160 பாகைகளாகப் பிரித்து அந்த 360 பாகைகளையும் 12 பன்னிரண்டால் வகுத்து 30 பாகைகளுக்கும் அந்தப்பாகைகளுக்குள் காணப்படும் நட்சத்திரக் கூட்டத்தின் தோற்றத்தின் அடிப்படையில் காரணப்பெயர் சூட்டினர். 



சிதம்பர ரகசியம். சித் +அம்பரம் //சித் அறிவு - அம்பரம் - வெட்டவெளி (பிரபஞ்சம்) //       

                    சிதம்பர ஆலயத்தில் வட்ட வெளியை ( 360 பாகை டிகிரி ) கொண்டு பிரித்து மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் பெயரிட்டனர் . மேஷ ராசியினுள் சூரியன் காலத்தை வானியல் சாத்திரத்தின் அடிப்படையில் ஒரு வருடப் பிறப்பாக கொன்றாடினார்கள். அதாவது சுற்றுவட்ட பாதையை வைத்து கணிப்பது. அதேவேளை  பருவ காலங்கள் மையப்படுத்தி  பருவ காலங்களின் ஆரம்பங்களை பக்குவமாகப் பிரித்து 12 மாதங்களை அவர்கள் உருவாக்கினார்கள் நாலு பருவ காலங்களில் குளிர் கடந்து இளவேனிற் காலம்  தொடங்குகின்ற ஆரம்ப புள்ளியினிலே மகர ராசியின் உள்ளே சூரியன் பிரவேசிக்கின்ற தை மாத பகுதியில் சூரியனுக்கு நன்றி செலுத்தும் முகமாக அல்லது செலுத்துவதன் மூலம் அதை பொங்கல் திருநாளாக நன்றி திருநாளாக ஆண்டு பிறப்பாக கொண்டாடுகிறார்கள். ஏனென்றால் அறுவடை முடிந்து செழிக்கின்ற அந்த காலப்பகுதி வருட பிறப்பாகப்பாக கடைப்பிடிக்கப்பட்டு 12 மாதங்கள் அங்கு வகுக்கப்படுகின்றன. எனவே தமிழர் புத்தாண்டு என்பது வாழ்வியல் ரீதியாக கொண்டாடப்படுவது தை புத்தாண்டு. மற்றுமோர் தமிழர் புத்தாண்டு வானியல் அறிவு ஆன்மீக மெய்யறிவு ஊடாக ஆன்மீகத்திற்குரிய வான சாஸ்திரத்தின் அடிப்படையில் உருவான வானியல் அடிப்படையில் துல்லியமாகக் கணிக்கப்படும் சித்திரைப் புத்தாண்டு. சித்திரை வருடப்பிறப்பு சூரியனின் சுற்றுவட்ட பாதையில் மேச ராசி முதலாவது ராசிக்குள் 30 பாறை டிகிரிக்குள் சேருகின்ற காலகட்டத்தை சித்திரை வருட பிறப்பாக கொண்டாடுகின்றார்கள் இரண்டுமே தமிழர்களுடைய பாரம்பரியத்தை தான் எடுத்து இயம்புகின்றன. ஆரியர்கள் எங்களுடைய தருமத்தை எங்களுடைய வேதத்தை எங்களுடைய மெய் அறிவை தங்களது முத்திரையைக் குத்தி வைத்திருப்பதனால் எங்களுடைய அறிவை மற்றவர்களிடம்  கொடுத்துவிட்டு நாங்கள் அதை எதிர்த்து கொண்டு இருக்கின்றோம். அது மட்டுமல்ல எமக்கே எல்லாம் தெரியும் எனும் மனோநிலையில் உண்மைகளை சிதைத்து எம்நாக்கினால் நாமே தவளைகள் போல் கத்திக் குட்டிச்சுவராகின்றோம்.

மதங்களைக் கடந்து மனிதராய் வாழ்வோம். இறைவனை அடையும் மார்க்கங்களை மதித்து எம்மைப் போல் எம் அயலவனையும் நேசிப்போம்.  எப்பொருள் யார் யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. 
உண்மைக்காக எதையும் துறக்கலாம். ஆனால்  எதற்காகவும் உண்மையைத் துறக்காதே! - சுவாமி விவேகானந்தர். 




Friday, 5 January 2024


அறவழிப் போராட்டத்தின் மீது பாயும் அரச பயங்கரவாதம் !






ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தாயகத்தில் தன்னெழுச்சியுடன் நடந்து வரும் தமிழ் மக்களின் அறவழிப் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவை புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் நாம் வழங்க வேண்டியது கட்டாய கடமை. அதேவேளை  தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து வைத்துக்கொண்டு தமிழ் மக்களின்  அறவழிப்போராட்டத்திற்கு எதிராக அரச இயந்திரத்தின்   துணைகொண்டு அடக்கும் ஸ்ரீலங்கா இனவாத அரசின்  நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்பதனையும் இத்தால்  முழு உலகுக்கும் அறியத் தருவோம். புலம் பெயந்து வாழும் தமிழீழக் குடிமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஒற்றுமையாக ஆதரவற்ற எம் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்போம். ஓன்றாகு தமிழா! வென்றாடு! CTCJA -கனடாத் தமிழ் அமைப்புக்களின் நீதிக்கான கூட்டமைப்பு

It is an imperative duty for us Tamil people in the diaspora to provide moral support to the moral struggle of the Tamil people which is going on with self-restraint in the occupied Tamil homeland. At the same time, we will let the International communities'  know that we strongly condemn the actions of the Sri Lankan Racist Federal Government which is suppressing the moral struggle of the Tamil people by occupying the Tamil homeland with the help of the state machinery. All the citizens of Tamil Eelam who are living in the out of country (Diaspora) will gather together and raise their voices in support of our helpless people. 


இதுபற்றிய விரிவான கட்டுரை விரைவில் ...............முகுந்தமுரளி 


Wednesday, 27 December 2023

 வீழ்ச்சி என்பது வேதனை!                   எழுச்சி என்பது சாதனை!!                                                                                     - முகுந்தமுரளி

மனிதர்களாகிய நாமும் கேட்க நேரம் ஒதுக்க வேண்டும். கேட்க விரும்பாத பலர் இருக்கிறார்கள், ஆனால் எம்மைப் பற்றி பேசவோ அல்லது எம்மினத்தின் விடுதலை வேணவாக்களைப் பற்றி இழிவாகப் பேசவோ விட்டு விட்டு காத்திருக்க முடியாது. மானிடத்தின் ஓர் அலகாகிய ஈழத்தமிழினமும் நம் இதயங்களையும் மனதையும் திறக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.  

இனியொரு விதி செய்வோம். இதுவரை நம்மைப் பகடைகளாய்ப் பயன்படுத்தி முள்ளிவாய்க்காலில் முழுநிர்வாணமாக்கி அரசியல் அநாதைகளாக்கி நிர்க்கதிநிலையில் முடிவுரை எழுதமுற்பட்ட  பூகோள அரசியலை இனி நாம்தான் பயன்படுத்த வேண்டும். இனியும் பூகோள அரசியலில் பெரும்சக்திகள் எம்மைப் பயன்படுத்த அனுமதிக்க கூடாது.  பெருஞ்சக்திகள் ஆளுக்காள் தங்கள் தேவை கருதி தமிழினத்தின் போராடும் குணமறிந்து எம்மினத்தைப் பகடைகளாக உருட்டுகின்றன என்பதே  கடந்த காலங்களில் இருந்து கற்றபாடம். இனியும் பகடைக்காய்களாக இருப்பதை நிறுத்தி ஆட்டக்காரர்களாக களமிறங்க வேண்டும். அவர்களிடம் நாம் சொல்லாமல் சொல்ல வேண்டும் இத்துடன் நிறுத்து. இதோ கேள், இதுவே எங்கள் நிலைப்பாடு என்று!  

உலகில் எம்மினத்தை எடுத்துக் கொள்ளுங்கள், ஆதிமொழி தமிழ் என்பதனை உலக அறிஞர்கள் தெட்டத்தெளிவாக எடுத்தியம்புவதனை நாம் காண்கின்றோம். மனித நாகரீகத்தின் முன்னோடிகள். வந்தாரை வாழவைக்கும் தமிழினம் அந்தப் பண்பாலேயே உயர்ந்து நிற்கின்ற தேசியஇனம் அதற்கொரு வரலாறு உண்டு. அதற்கொரு குணம் உண்டு. அதற்கு என்று பூர்வீக நிலங்கள் இன்றும் உண்டு. ஆனால் எங்கள் மேன்மைகள் யாவும் பறிக்கப்பட்ட அவலநிலையில் எமக்கான அடையாளங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனைப் பற்றி நாம் நமக்குள் விவாதிக்க வேண்டும். நம்நிலையை ஆய்வுசெய்து அறிவுப்போர் புரிய ஆயத்தமாக வேண்டும். 

குறளி வித்தைகளும், கபட நாடகங்களும் 

அரசதரப்பு எதிர்வரும் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெல்வதற்காக வகுக்கின்ற கூட்டுநாடகம். 

1. துவாரக வருகை நாடக அரங்கேற்றம் - சிங்கள சிந்தனைக் குழாமால் அரங்கேற்றப்பட்ட அரிதார நாடகம். தென்னிலங்கை மக்களை மீண்டும் விடுதலைப் புலிகளின் வருகையெனக் காட்டி சிங்கள வாக்குகளை வென்றெடுக்கும் அதே பழைய யுக்தி. ஆனால் புலம் பெயர் தமிழர்களின் துணிந்த தாக்குதல்களால் முகத்திரை கிழிக்கப்பட்டது. 

2. இமாலயப் பிரகடனம் (இதுவரைபே அன்றி பிரகடனமாகாது)  - வருகின்ற ஐ.நா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக நேரிடக்கூடிய பாரிய போர்க்குற்றங்கள் விடயத்தில் இருந்து சிங்களத் தலைமைகளையும், சிங்கள இராணுவத்தையும் காத்துக் கொள்வதற்காக எடுக்கப்படும் தற்காப்புக் கவசமே இந்தப் பிரகடன நாடகம். மனித உரிமை மீறல், யுத்தக் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை என்பவற்றிற்கு ஆதாரமாக இருப்பது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரமாகும்.  இன்றும் சர்வதேச நீதி பொறிமுறைக்கு கொண்டு செல்வதற்கு ஆதாரங்களை திரட்டும் நடவடிக்கையில் அதற்கான பலமாக சாட்சியங்களோடு தமிழர் தரப்பும் ஈடுபட்டு வருகிறார்கள். தை மாதம் 28 அதற்கான வெட்டுத் திகதியாகும். அப்படியான சர்வதேச நீதிப் பொறிமுறைக்கு ஆதாரங்களைத் திரட்டுவதும் அதன் மூலம் ஒரு பொது பரிகார நீதியும் அரசியல் தீர்வுக்கான முயற்சியும் மட்டும்தான் எம்மக்களுக்கு நலன் தரும் பிரதான அம்சமாகும். அதை விடுத்து கடந்தகாலங்களில் அதற்குத் தீர்வாக தாங்கள் உள்ளக விசாரணைகளை ஆரம்பிக்கிறோம் என்று அரசு உறுதி மொழி வழங்கியமை  காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியை இல்லாமல் ஆக்குகின்ற செயலாகவே அமைந்தது. காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்குகிறேன் என்ற கோத்தாவின் பேச்சும் ஐ.நா மற்றும் தமிழர்களது முயற்சிகளை நீர்த்துப்போக வைக்கும் நடவடிக்கையாக அமைந்ததுபோலவே  இன்று நீலிக் கண்ணீர் வடிக்கும் அரசு ஒருபுறமும், இமாலயப் பிரகடனம் எனும் அண்டப்புழுகுடன் நல்லிணக்கம் சமாதானம் எனும் நாடகத்தைக்காட்டி சிக்கலில் இருந்து தப்புவதோடு மட்டுமல்லாது சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறக்கூடிய நிதியைப் பெற்றுக் கொள்வதையும் உள்நோக்கமாக நாம்  இனங்காணவேண்டும்.  

3. அதேவேளை தமிழ்மக்களை அவர்களுக்கு ஒரு தீர்வு ஒன்று வரப்போவதாகக் காட்டி காலங்காலமாக வாக்குறுதிகளை மட்டும் கொடுத்து வாக்குகளைப் பெற்று பெருவெற்றி காண்பதற்கு எடுக்கப்பட்ட அதே பழைய யுக்தி.

ஆறாந்திருத்தச்சட்டமும் ஐக்கியமும்.  

நாங்கள் இப்பொழுது ஒரு நிபந்தனையாக மனித உரிமைகளின் பிரதானமான கருத்துச் சுதந்திரத்தை மறுக்கும் ஆறாந்திருத்தச்சட்டத்தை  எடுத்தால் பேச்சுவார்த்தைகள் மேல் எமக்கு நம்பிக்கை பிறக்கும் என்ற முன்நிபந்தனையைத் தெரிவித்தோம். ஆயினும் சிந்தித்துப் பார்த்ததில் குணாகவியழகனின் அரசியல் அறிவு இயக்கத்தின் கருத்துக்கள் எம் சிந்தனையை மறுபரிசீலமைக்க உதவியது. 

ஆம் குண கவியழகனின் கூற்றுப் பிரகாரம் நாம் ஆறாந்திருத்தச்சட்டத்தை அகற்றக் கோரினால் மனித உரிமைகள் பற்றிப் பேசினால் அவர்கள் அதனை அரசியலாக்கி, தமிழீழக் கோரிக்கையை வலுவாக்க புலம்பெயர் தமிழர்கள் முயற்சிக்கின்றார்கள். நாம் ஒரு பொழுதும் அதற்கு இடம் கொடுக்கமாட்டோம் என்று சிங்கள மக்களிடம் காட்டி வாக்கு வேட்டைக்கு ஆயத்தமாவார்கள். இதற்கு மாறாக நாம் மாற்றி யோசிக்க வேண்டும். 

பயங்கரவாத தடைச்சட்டமும், பதின்மூன்றாம் திருத்தச்சட்டமும். 

பேச்சுவார்த்தை மூலம் ஒரு நிரந்தரத் தீர்வு காண முயலும் தாயக மக்கள் ஆறாந்திருத்தச்சட்டம் பற்றி பேசாது, மாறாக தங்கள் மீது இன்றும் தொடரும் பயங்கரவாதத் தடைச்சட்டம் பற்றி விசனமுறுகின்றார்கள். எனவே பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டோம் என உலகம் முழுவதும் தம்பட்டம் அடித்துவரும் சிறீலங்கா அரசானது, இன்றும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை தொடர் புதியவரைபுகள் மூலம் வலுப்படுத்துவதானது  “தன்னெழுச்சியுறும் பொதுமக்களை சிங்கள மக்கள் உட்பட குறிப்பாக வடக்கு-கிழக்கு மக்களையும் நசுக்கவே என்பதனைப் புரிந்துகொண்டு அரசிடம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விலக்கும்படி கோருவதன் மூலம் நல்லிணக்கத்திற்கான, உண்மையாகச் செயல்படுவதற்கான உத்தரவாதத்தை இந்த அரசாங்கம் வழங்கவேண்டும் என்ற வேண்டுகோளை அனைத்து தமிழ்க்;கட்சிகளும், தமிழ் சமூக அமைப்புக்களும் முன் வைக்கவேண்டும். 

அத்தோடு மட்டுமல்லாது இலங்கைத்தேசியத்தை அதன் ஐக்கியத்தைக் காக்க பிரிவினையைத் தடுக்க எனக் காரணங்காட்டி பாதுகாக்கவென (தமிழர்களை இரண்டாந்தரப் பிரசைகளாக்கி) ஆறாந்திருத்தச் சட்டத்தை எவ்வாறு இன்றுவரை நேர்மையாக நடைமுறைப்படுத்தும்  அரசு உண்மையில ஐக்கியத்தையும் சமாதானத்தையும் பேண இதயசுத்தியோடு பதின்மூன்றாம் திருத்தச்சட்டத்தையும் நடைமுறைப்படுத்தல் வேண்டும். 13 ஆந்திருத்தச் சட்டமானது ஒருபொழுதும் தமிழர் தரப்புக்கான ஓர் அரசியல் தீர்வைத் தரப்போவதில்லை. ஆயினும், இலங்கை அரசு சர்வதேச தளத்தில் அதன் நேர்மையான அரசியலை வெளிப்படுத்தும் வகையிலும் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்ட தமிழர் தாயகப் பரப்பை ஏற்றுக் கொண்ட 13 ஆந்திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் நாங்கள் ஒரு அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்குத் தயாராவோம் என தமிழ் மக்கள் சமூகக்கட்டமைப்புக்களும், தமிழ்தேசிய அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு முன்வைக்கவேண்டும்.

இலங்கை இனப்பிரச்சனையில்                                                                        இந்தியாவின் முக்கியத்துவம்...

ஆறாந்திருத்தச் சட்டத்தை நேர்மையாகக் பிரிவிiனையைத் தடுத்து இலங்கைத்தேசியத்தின் ஐக்கியத்தைக் காக்க இன்றுவரை நடைமுறைப்படுத்தும் சிறீலங்கா அரசு அதன் பின்னர் வந்த 13 ஆம்  திருத்தச் சட்டத்தையும் அதே நேர்மையுடனும் இதயசுத்தியுடனும் நடைமுறைப்படுத்தலாம் அல்லவா? ஏன் அவர்கள் தயங்குகின்றார்கள்? ஏனெனில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் என தமிழர்களின் தாயகபூமி என வடக்கும் கிழக்கும் குறிக்கப்படுவதை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாத சூழ்நிலையில் சிங்கள தீவிரவாத மதபீடங்களும், சிங்கள மக்களும் எதிர்ப்பதனால்தான் அவர்களால் நடைமுறைப்படுத்த முடியவில்லை எனக் கபடநாடகங்களை ஆடுகின்றார்கள். அதனால் இந்தியாவின் புரிந்துணர்வு ஒப்பந்தமான “ராஜீவ் - ஜெயவர்த்தனே” கைச்சாத்திடட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பை இந்தியாவிற்கும் உணர்த்தி அவர்களது வகிபாகத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடக்க வைக்கவேண்டும். 

  

Wednesday, 20 December 2023

 வீழ்வது என்பது விபத்து,  வீழ்ந்தே கிடப்பது பேராபத்து ! – முகுந்தமுரளி

 வரலாறு நமக்கு கற்றுத் தந்த வாழ்க்கைத் தத்துவம். நாம் எதிலும் தோற்பதேயில்லை. ஒன்று வெற்றி கொள்கின்றோம், இல்லையேல் கற்றுக் கொள்கின்றோம். வரலாற்றில் இருந்து நாம் கற்றுக் கொண்ட அனுபவப்பாடங்கள் நமக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கங்கள்.

 பற்றிழந்து, பாசமறுத்து, சுகபோகங்கள் துறந்து ஈழத்தமிழினத்தின் விடிவுக்காக, சத்தியவேள்வியில் ஆகுதியாகி, சாத்தியமில்லாத ஒரு விடயத்தை சாத்தியமாக்கி சரித்திரமாகிய மாவீரர்கள் வெற்றியின் விதைகள். அரசிழந்து போன தமிழர்கள் தமது அடையாளத்தை நிறுவி தாயகக் கோட்பாட்டை நடைமுறை அரசாக எழுந்து நிற்க வைத்தது சாதனை நாயகர்களும் அவர்தம் தியாகங்களும். சரித்திரத்தில் தரணியே, கண்டிராத ஒப்பற்ற, தன்னலமற்ற தேசியத் தலைமையின் வழிகாட்டலில் யாவும் தலைநிமிர்ந்த பொழுது அதுபொறுக்காது உலகமே திட்டமிட்டு அரங்கேற்றிய சூழ்ச்சி, அதனைச் சாதகமாக்கி நடந்தேறிய மாபெரும் இனப்படுகொலை, மனித உரிமைகளைச் சட்டமாக்கி மனித உயிர்களையே பகடைக்காய்களாக்கி வல்லாதிக்க சக்திகள் ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம், அதன் விளைவாக நடந்த முள்ளிவாய்க்கால் பேரவலம். நந்திக்கடல் கண்ட அனுபவம். அரசில்லாததால் இனக்கருவறுப்புக்குள்ளாகித் தவிக்கும் ஈழத் தமிழ் மக்கள் கேடுகெட்ட உலக - உள்நாட்டு அரசியலில் சிக்கித் தவிக்கும் மானிட இனமாகும். 

 தீராத துன்பச்சுழிக்குள் சிக்கித் தவிக்கும் ஈழத்தமிழினம் முள்ளிவாய்க்கால் முன் முள்ளிவாய்க்கால் (இனப்படுகொலை) பின் என பல பாடங்களைக் கற்றுக் கொண்டு நிமிர்கின்றது. இமாலயப் பிரகடனம் எனும் அரசியல் சூழ்ச்சியின் பின்னணி புரிந்து கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. முள்ளிவாய்க்கால் நமக்கு கற்றுத் தந்த பாடத்தில் முதன்மையானவற்றில் ஒரு புரிதல் “ அரசியல் மொழி பொய்களை உண்மையாகவும் கொலைகளை மரியாதைக்குரியதாகவும், தூயகாற்றிற்கு ஒற்றுமையின் தோற்றத்தை அளிக்கவும் வடிவமைக்கப்ட்டுள்ளது” என அறிஞர் ஜார்ஜ் ஆர்வல் கூறிய கூற்றின் மெய்த்தன்மையாகும். 


இத்தருணத்திலே வரப்போகும் முத்தரப்புத் தேர்தல் (இந்தியா-இலங்கை-நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்) தமிழர்கள் வாழ்வுரிமையை நிர்ணயிக்கப்போகும் அரிய சந்தர்ப்பம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இவ்வேளையிலே சூழ்ச்சிக்கோட்பாடுகளின் செயற்திட்டங்கள் அரங்கேறத் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. துவாரகாவின் வருகை, இமாலயப் பிரகடனம் என நாடகங்கள் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

 இமாலயப் பிரகடனம் என்பது தமிழினத்தின் நீதிக்கான போராட்டத்தை மழுங்கடிக்கும் சிங்களத்தின் சூழ்ச்சி நிகழ்ச்சி நிரலுக்குத்துணை போகின்றது. ஆயுதப் போராட்டத்துக்கு முன்னரே திட்டமிட்ட இன அழிப்பு ஆரம்பிக்கப்பட்ட வரலாற்றை இந்தப் பிரகடனம் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை. 
//ஆயுதப் போராட்டம் இனப்படுகொலையூடாக அழிக்கப்பட்ட பின்னரும் பண்பாட்டு இன அழிப்பும், கட்டமைக்கப்பட்ட இன அழிப்பும் இன்றுவரை தொடர்வதை இப்பிரகடனம் எடுத்துரைக்கவில்லை.// 
//ஈழத்தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பின் வரலாறு சொல்லப்படவில்லை.// //இனtழிப்பிற்கு சர்வதேச நீதி ஏன் அவசியம் என்பதும் சொல்லப்படவில்லை.//  //சுயநிர்ணய உரிமை பற்றி இம்மியளவும் இதில் எதுவும் இல்லை. //  அழிப்பிற்கு ஆளாகிக்கொண்டும், நில ஆக்கிரமிப்புக்குள்ளும் தவித்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழினத்தின் பாதுகாப்பிற்கு எந்தவித உத்தரவாதமும் வழங்காது சுயநிர்ணய உரிமையைக் கூட குப்பையில் போட்டு எமது தேசிய விடுதலைக்கான அடிப்படைகள் அனைத்தையும் அடியோடு பிரட்டிப் போடும் நோக்கோடு இந்த இமாலயப் பிரகடனம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. 
//மக்கள் தீர்ப்போடு மலர்ந்த வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை அடியோடு உதாசீனப்படுத்தியுள்ளது.//

ஆட்டுவிப்பவர்கள் யார் என்பதும் அவர்களின் திட்டம் எவ்வளவு ஆபத்தானது என்பதையும் வெளிப்படுத்த வேண்டியது ஊடகதர்மம். தமிழின அழிப்பிற்கெதிரான ஆதாரங்களைத் திரட்டவோ அல்லது சர்வதேச மானிடவியற் சட்டங்களாலும் பாதுகாக்கவோ தவறிய சர்வதேசங்களின் மனசாட்சியைக் கிளறி சர்வதேச மானிட உரிமைச் சட்ட நியதிகளுக்குட்பட்ட சர்வதேச விசாரணைப் பொறிமுறையை கோராமல் இன நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி என்ற பசப்பு வார்த்தைகளுடன் சிங்கள அரசை அனுசரித்துச் செல்ல முனைவது அவர்கள் தனிப்பட்ட சலுகைகளை இலங்கையிடமிருந்தும் சில வல்லாதிக்க அரசுகளிடமிருந்தும் பெற்றுக்கொள்வதற்கோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

 வல்லரசுகளிற்கு இடையிலான இப்பனிப்போரில் இடைத்தரகர்களின் முகத்திரைகளை ஆதாரங்களுடன் இனங்கண்டு உணர்ந்ததன் அடிப்படையில், இம் மே(ல்)தாவிகளின் செயற்பாட்டின் பின்னணியிலுள்ள சூட்சும சூத்திரதாரிகளின் பரிசோதனைக்குப் பலியாகி, நிற்கின்ற பலியாடுகளா இவர்கள் என்றால் இல்லை இல்லை இவர்கள் இனத்தையே அழிக்கும் கோடாரிக்காம்புகள் என்பதே பதிலாகும்;! 

கோடாரிக் காம்புகளே! சாட்சிகள் இல்லையென்று துள்ளாதீர்கள். இன்று உங்கள் பணப்பெட்டிகளை நிரப்பும் பொழுது இரண்டு சாட்சிகள் என்றும் உண்டு என்பதை எப்பொழுதும் மறந்துவிடாதீர்கள். ஓன்று உங்கள் மனச்சாட்சி. மற்றையது இறைசாட்சி. மனச்சாட்சி இப்பொழுது பேசாது நீங்கள் படுத்த படுக்கையாக மரணத்தின் பிடியில் இருக்கும் பொழுது அது பக்குவமாய்ப் பேசும். நீங்கள் செய்கின்ற அநியாயம், அநீதி உங்கள் சந்ததிக்கே அவப் பெயரைத் தேடித்தரும். 

ஈழத் தமிழினமே ! நல்லிணக்கம் என்ற போர்வையில் நமக்கு வர இருக்கும் ஆபத்தை உணராமல் செய்து ஈழத்தமிழர்களை அவர்களது அரசியல் அபிலாசைகளை நீதிக்கான போராட்டத்தை ஓரங்கட்ட ஈழத் தமிழருக்கு நடந்த நடந்துகொண்டிருக்கின்ற இனப்டுகொலையை அடியோடு மறுதலிக்க இந்தப் பிரகடனம் முயல்கிறது. 

பதின்நான்கு வருடங்கள் ஒதுங்கியது போதும் மக்களே! புல்லுருவிகளை இனங்கண்டு கொள்ளுங்கள்! இவர்களுக்கு நிதியுதவிகள் வழங்குவதால் இவர்கள் தொடர்ந்தும் இதே போன்ற இரண்டகங்களில் ஈடுபட, தொடர்ந்தும் உற்சாகமளிக்கின்ற பங்காளர்களாக நீங்கள் மாறுகின்றீர்கள். மக்கள் உங்களை இனங்கண்டு உங்கள் வியாபாரங்களுக்கான ஆதரவை கனடாவாழ் தமிழ் மக்கள் வழங்காத சூழ்நிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

 அதேபோல் அனுசரணை வழங்குகின்றார்கள் என்பதற்காக அவர்கள் பிற்புலம் அறியாது அவர்களது அனுசரணையைப் பெற்றுக்கொள்ளும் அமைப்புக்களே! இத்தகைய அனுசரணையார்களாக நடித்து தரகு வேலை பார்க்கும் இச் சூழ்சிக்கோட்பாட்டின், சூத்திரதாரிகளின் உளவாளிகளை இனங்கண்டு கொள்ளுங்கள். தாயகம், தேசியம் என்று பெயர் சூட்டுவதால் மட்டும் அவர்களை நம்பிவிடாதீர்கள். இளவரசன் மற்றும் இரத்தினமான குணம் எனும் பொருளுடைய பெயர் கொண்ட இடைத்தரகர் அரச விசுவாசியாகவும், சிங்கள ராஜதந்திரியும் மேற்குலகின் செல்லப்பிள்ளையுமான செஞ்சால்வைக் குடும்பத்தின் உறவினருக்கும் உற்ற தோழனாகச் செயற்படுபவர் ஆவார். 

இப்பேரம் பேசலின் பின்னணியில் சிங்கப்பூரில் 2015இல் பிள்ளையார் சுழியிடப்பட்டு மங்கள சமரவீரவினால் அரங்கேற்றப்பட்ட முதல் இரகசியச் சந்திப்பின் நகர்வு நேபாளத்தில் நடந்தேறிய இரகசியச் சந்திப்புக்கள் இரு சந்திப்புக்களிலும் பங்குபற்றிய ஒரே அணி அதை ஏற்பாடு செய்தவர்கள் பின்னணிகள், சொல் (கேம்) விளையாடும் பின்னணியுடன் பங்கேற்ற கற்றறிந்த அறிஞர்களாயும், சட்டத்தரணிகளாயும் தம்மைக்காட்டி தம் சுயலாபம் கருதிய கயவர்களின் கூட்டுச்சதிகள் யாவும் வெகுவிரைவில் ஆதாரங்களுடன் அம்பலத்திற்கு வரும். ஏனென்றால் உண்மைகள் உறங்குவதும் இல்லை. ஊமையாகிப் போவதும் இல்லை. 

பொய்யர்களே! பொய்கள் நிலைத்து நிற்க வைக்க நீங்கள் முயன்றாலும் அது ஒருபோதும் வெற்றி அடையாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எம் மக்களின் கோபமானது, உங்கள் எல்லோருக்கும் திமிராகத் தெரியலாம். அவர்களது உணர்ச்சிவசப்பட்டு ஆவேசப்படும் தன்மையை வைத்து அவர்களை வன்முறையாளர்கள் எனக்காட்ட முற்படும் படித்த மே(ல்)தாவிகளே உங்கள் யாருக்கும் புரிவதில்லை அக்கோபம் தார்மீகக் கோபம், அது வேதனையின் வெளிப்பாடு என்றுஇவையெல்லாம் தெரியாமல் நல்லெண்ணத்துடன் பயணிக்கும் ஏனைய உறுப்பினர்கள் இரண்டகம் செய்யும் கூட்டத்தில் இருந்து விலகிக் கொள்ளுங்கள். தன்னுடைய தவறுகளை உணர்ந்தவர்கள் திருந்திவிடுவார்கள், ஆனால் தன்னுடைய தவறுகளை நியாயப் படுத்துபவர்கள் திருந்தவே மாட்டார்கள். “மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் யார் தங்கள் பிரதிநிதிகள் என்று. சாதுமிரண்டால் காடு கொள்ளாது. தமிழர்கள் ஒன்று திரண்டால் உங்கள் பருப்பு வேகாது. பரிகாரங்களும் தீர்வுகளும் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களிலிருந்து உருவாக வேண்டுமே தவிர கைக்கூலிகளால் அவை முன்வைக்கப்பட முடியாது. தாயகத்தில் வாழும் மக்களின் வாழ்வியல் மற்றும் அரசியல் வேணவாக்களுக்கு எதிராக யார் செயற்பட்டாலும் அவர்கள் தமிழ் இனத்தை அழிக்க செயற்படும் உளவாளிகளே.”

“ அரசியலாலும் பண்பட்டாலும் உலகளாவிய அளவில் விரைந்து ஐக்கியப்படும் சமூகங்களை கண்டறிவதில் தொடங்கி அந்தச் சமூகத்தின் நம்பிக்கையிலும் பண்பாட்டிலும் பல புதிய பிரிவுகளை பிளவுகளை ஏற்படுத்தி எவ்வாறு தங்களுடைய ஆதிக்கத்தை நிலை நிறுத்தலாம் என்று பாடுபடுவது தான் வல்லாதிக்க சக்திகள். அத்தகைய வல்லாதிக்க சக்திகளின் சூழ்ச்சி கோட்பாட்டின் அடிப்படையில் செயற்படும் உளவாளிகளை மக்களே இனம் கண்டு கொள்ளுங்கள்.” 

மக்களே இவர்கள் நடத்துகின்ற கேளிக்கை களியாட்ட நிகழ்ச்சிகளுக்கு உங்கள் பொழுதுபோக்குகாகப் போவதனை வைத்து இவர்கள் கனடிய அரசிடமிருந்து திரட்டுகின்ற நிதிகளும் இவர்களின் இரண்டகச் செயல்களை ஊக்குவிக்கின்றது என்பதை மறந்து விடாதீர்கள். கனடியர்களாக சிந்தித்தால் கனடா தேசத்தின் விழுமியங்களையும் அல்லவா இவர்கள் மழுங்கடிக்கிறா-ர்கள். கனடாவாழ் தமிழினமே ! கனடாவின் வெளிவிவகாரக் கொள்கைக்கு முரணாக போர்க்குற்றவாளிகள் என உறுதிப்படுத்தப்பட்ட தனி நபர்களுடனான உறவுகளை வளர்ப்பதில் கனேடிய அரசால் பொது நிதியளிக்கப்பட்ட நிறுவனம் நெறிமுறை மீறல் சரியானதா? சிந்தியுங்கள். இவர்களுக்கு நாங்கள் உதவியதெல்லாம் எமது விடுதலைக்காக குரல் கொடுப்பார்கள் எனும் நம்பிக்கையின் அடிப்படையில்தானே…. இவர்கள் செய்யும் இரண்டகத்திற்கு உங்கள் நடவடிக்கை என்ன? இனியும் அரசியல் செய்யும் அமைப்புக்களை நாம் நம்பி நடக்கலாமா அல்லது நாமாக மக்கள் போரட்டக் களமாக மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் இனமாக நீதிக்காக குரல் கொடுக்க எழுக என் இனமே! முள்ளிவாய்க்கால் வீழ்ச்சி என்பது பாரிய பெருவிபத்து. அதன் பின்னர் தமிழினம் வீழ்ந்தே கிடப்பது என்பது தேர்வு…. நாமே நம்மை ஏமாற்றி வீழ்ந்தே கிடக்கின்றோம்! சூழ்ச்சிவலை பின்னும் சூத்திரதாரிகள் நம்மத்தியில் நம்மவர்களை வைத்தே நம்மை எழுந்திருக்க விடாமல் சதி செய்கின்றனர். அன்று இயக்க அரசியலால் பிரித்தாட்டப்பட்ட இனம் இன்று அமைப்பு அரசியலால், கட்சி அரசியலாலும் நாசமாகிக் கொண்டிருக்கின்றது. என் இனமே! என் சனமே! என்றைழைத்த எம் தலைவன் எம்மை மட்டுமல்ல நிலமிழந்த தமிழீழ அரசாங்கத்தையும் திட்டமிட்டு அத்திவாரமிட்டே தன் தியாகவேள்வியை நிறைவேற்றினார்…

 ஆனால் அத்தகைய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இன்றுவரை இந்த இரண்டகம் கண்டும் மௌனம் காப்பதேன்? ( மாவீரர் நாளை மகத்தாக நினைவேந்தும் எங்கள் கட்டமைப்பும் ஊமையாகிப்போனதா? 

மக்கள் பிரதிநிதிகள் அல்லாதவர் எல்லாம் மக்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதாக பெட்டிகள் பரிமாற்றப் பின்னணியில் நாடகமாடுகின்றார்கள். என் இனமே என் சனமே நீ இதற்கு மேலும் உறங்கிக் கொண்டிருந்தால் தமிழினத்திற்கான விளைவு ஆபத்தானது. வீழ்ந்து கிடக்கப்போகின்றோமா? விழித்தெழப் போகின்றோமா? சிந்தியுங்கள்! ஒன்றாகு தமிழினமே! வென்றாட வா!

Monday, 9 October 2023

 உலகம் உன் கைகளிலே ..       💗💗💗 முகுந்தமுரளி 

2009 இல் தன்னம்பிக்கை உள்ளவர்களைக் கூட சிதைக்கும் பல சம்பவங்கள் நடந்தேறின. இலங்கைத் தமிழர்களாகிய நாம் நிர்வாணமாக்கப்பட்டு அரசியல் அநாதைகள் ஆக்கப்பட்டோம். நிர்க்கதிக்கு ஆளான நாங்கள் அனைவரும் நிறைய புதிய பொறுப்புகளை ஏற்றுள்ளோம், தெரியாதவற்றை எதிர்கொண்டோம். அத்தோடு மட்டுமல்லாது உலகம் எதிர்கொண்ட பெருங்கொல்லி நோய்தனை எதிர்கொண்டோம், மேலும் 24/7 எங்கள் மக்கள் அனைவரும் நாம் வீட்டினுள்ளேயே முடங்கியிருந்தோம். எனவே உலகம் திறக்கத் தொடங்கும் போது, கொஞ்சம் பயமாகவும் நிச்சயமற்றதாகவும் உணருவது முற்றிலும் இயல்பானது. 

நாம் இன்று பூகோள அரசியல் காரணமான யுத்தங்கள் அதனால் விளையும்  பொருளாதார நெருக்கடிகள்; காரணமாக வாழ்க்கைச் செலவீனங்கள் எவ்வளவு சிக்கலானதாக இருக்கின்றது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள  வேண்டிய தருணமாக விருக்கிறது.  


 “உங்களால் பறக்க முடியுமா என்று நீங்கள் சந்தேகிக்கும் தருணத்தில், அதைச் செய்ய முடியாமல் போய்விடும்." - ஜே. எம். பாரி 


இழப்பதற்கு எதுவும் இல்லை எமது கையிலே , ஆனால் பெறுவதற்கு உலகம் உண்டு எமது முன்னிலே ... உங்களது  ஒவ்வொரு புதிய முயற்சிகளும், சமூக கல்வி மற்றும் பொருளாதார மறுமலர்ச்சியின் ஒவ்வொரு புதிய படியும், ஒவ்வொரு புதிய இயல்பாக  நீங்கள் செயற்பட செயற்பட, அந்த உற்சாகமும் உழைப்பும்  துணையாக உங்களைச் சுற்றியுள்ள உலகில் மீண்டும் உங்கள் நம்பிக்கையை விதைத்து வெற்றி பெறுவீர்கள்.

உலகில் நம்பிக்கை என்பது முற்றிலும் வேறுபட்ட கதையாகும். மேலும் ஒரு சிலருக்கு மட்டுமே பிறந்ததில் இருந்து கூட இருக்கும் மேலும் நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு நம்பிக்கை என்பது நமக்குநாமே உருவாக்கிக் கொள்ளவேண்டியதாக இருக்கின்றது. நாம் யார் என்ற உண்மையை நினைவில் கொள்வது - நாம் மனித உரிமைகள் அனைத்திற்கும் உரித்தானவர்கள். ஆனால் இலங்கை அரச யாப்பில்ஆறாந் திருத்தச்சட்டம்  மூலம் தமிழர்களாகிய எங்கள் அடிப்படை மனிதஉரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது.  ஆயினும் நாம் திறன் மற்றும் மதிப்பு நிறைந்தவர்கள். இருந்தும் சில வேளைகளில் மழுப்பலாக உணரலாம். மேலும் நமது நல்ல நாட்களில், சமூக ஊடகங்கள் போன்ற இடங்களின் ஒப்பீடுகளால் நாம் எதிர்கொள்ளும் போது, அதை விரைவாக மறந்துவிடுவது எளிது. ஆகவே, நாம் யார், யாராக இருக்க விரும்புகிறோம் என்பதை நினைவூட்டும் ஞானமான வார்த்தைகளை நினைவுபடுத்துவது பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் பெற்று உலகிற்கு கொடுக்கும் நம்பிக்கை, உங்கள் உண்மையான அழகை மற்றவர்கள் பார்க்கவும் பகிர்ந்து கொள்ளவும் அனுமதிக்கும். 

 “நீங்கள் வித்தியாசமாக இருக்கும்போது, சில நேரங்களில் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளும் மில்லியன் கணக்கான மக்களை நீங்கள் பார்க்க மாட்டீர்கள். உங்களை நிராகரிப்பவர்களை மாத்திரம் கவனித்துப்பார்த்து உங்கள் நம்பிக்கைகளை இழந்துவிடாதீர்கள் .உங்கள் நம்பிக்கை மேல் நம்பிக்கை கொண்டவர்களை கவனித்துப் பாருங்கள்."

நம்பிக்கை என்பது ஒரு தனி விளையாட்டு அல்ல என்பதை மறந்துவிடாதீர்கள் - உண்மையான ஆரோக்கியமான சமூகத்தில் முதலீடு செய்வதன் மூலம் நம்பிக்கையை பலப்படுத்தலாம். மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அனுபவங்கள் மற்றும் நட்பில் நாம் நம்மை முழுமையாகக் காணலாம். உங்கள் வாழ்க்கையை (மற்றும் மனநிலையை) அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல அதிக உத்வேகத்திற்காக நீங்கள் தாகமாக இருந்தால், “உங்களால் முடியும் என்று நம்புங்கள்! ” ஆம் தன்னம்பிக்கை மிக்கவர்களாக உயர்ந்திடுங்கள். நம்பிக்கைகள் பலவிதமானவை. இறைநம்பிக்கை, நேர்மை மற்றும் தீங்குவிளையாத விடயங்களை நம்புவது எனப்பல்வேறு விதமான நம்பிக்கைள் உள்ளன. ஆனால் மிக முக்கியமானது உங்கள் தன்னம்பிக்கை. எமக்குள் இருக்க வேண்டிய தன்னம்பிக்கை என்பது நாம் நினைத்ததை சாதிக்கமுடியும் என்கின்ற உறுதியான உணர்வு ஆகும்.
  “உன்னை நீ நம்பினால், எப்படி வாழ்வது என்று உனக்குத் தெரியும்."          -ஜோஹான் வொல்ப்காங் வான் கோதே 

 தன்னம்பிக்கையாளர் ஒருவர் சுயநலக்காரராக இருக்கும் பட்சத்தில் அவரை அது தனிமைப்படுத்தக்கூடும்.

 “தனியாக இருப்பது எப்படி என்பதை அறிவது அன்பின் கலையின் மையமாகும். நாம் தனிமையில் இருக்கும்போது, தப்பிப்பதற்கான வழிமுறையாகப் பயன்படுத்தாமல் மற்றவர்களுடன் இருக்க முடியும். ”-பெல் ஹ_க்ஸ் 
         தனிமரம் தோப்பு ஆகாது.....
எனவே நீங்கள் ஊருடன் சேர்ந்துவாழும் மனப்பக்குவம் உடைய பரந்த சிந்தனையாளர்களாக இருக்கின்ற பட்சத்தில் சூழலை மாற்ற முயற்சிக்கும் மறுமலர்ச்சிக் கருத்துகளை முன்னெடுக்கும் முயற்சிக்கும் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள் ... உங்கள் காரியத்தைச் செய்யுங்கள், பலர் அதை விரும்பினாலும், சிலர் அதை விரும்பாவிட்டாலும். தடைகள் பல வரலாம். கவலைப்பட வேண்டாம். பயப்படவேண்டாம்.

 “பயத்தை சமாளிப்பது உங்கள் தன்னம்பிக்கையைப் பெறுவதற்கான விரைவான வழியாகும்." - ராய் டி. பென்னட்

 உன்னதமான இலட்சியங்களோடு நீங்கள் உங்கள் பணிகளைத் தொடரும் பொழுது பலர் பாராட்டலாம். சிலர் விமர்சிக்கலாம். “மற்றவர்கள் எம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? என்று விமர்சனங்களைப் புறக்கணிக்க வேண்டாம். செவிமடுங்கள். ஏனெனில் நியாயமான விமர்சனங்கள் எங்களை சீர்ப்படுத்த உதவும். தனிப்பட்டமுறையில் தாக்குதல் மேற்கொள்ளப்படும் பட்சத்தில்
* “ நான் நானாக தான் இருக்கின்றேன். நான் யாராக இருக்க விரும்புகிறேன் என்பதனை நானே முடிவெடுக்கின்றேன் என உறுதியோடு உங்கள் பணிகளைத் தொடருங்கள். 
தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் நீங்கள் அடையவேண்டிய உயரத்தைக் குறி வைத்து உயருங்கள். 
* “பயம்? ஒரு மனிதனுக்கும் பயத்திற்கும் என்ன சம்பந்தம்? பய உணர்வு தன் நம்பிக்கையை அடியோடு அழித்துவிடும்.” 

 ஒன்றை மட்டும் நினைவு கொள்ளுங்கள். நீங்களே உங்களை ஆளவேண்டும். எண்ணங்களே வாழ்க்கை. நல்ல எண்ணங்களோடு நற்சிந்தனை வழி பிறக்கும் உங்கள் நம்பிக்கைகள் பல அரிய வாய்ப்புக்களை உருவாக்கும். நல்வாய்ப்பு  வாழ்க்கையை ஆளுகிறது, தவறான வாய்ப்புக்கள் வாழ்வையே அழித்துவிடும். எனவே கிடைக்கும் நல் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி உங்களதும் உங்கள் சமூகத்தினதும் எதிர்காலத்தைப் பிரகாசமாக்குங்கள். 
தன்னம்பிக்கையாளராக நீங்கள் மாறும் பொழுது ஒரு வைரம் போல் பிரகாசிப்பீர்கள். 

வைரம் பட்டை தீட்டப்பட முன் பிரகாசிப்பதில்லை. நேரம் எடுத்து அழுத்தம் பிரயோகித்து பட்டை தீட்ட அதன் மெருகேறி வைரம் பிரகாசிக்கத் தொடங்குகின்றது. வைரத்தை வைரத்தால்தான் பட்டை தீட்ட முடியும். வைரம் மட்டுமே தன்னுள் பாயும் வெளிச்சத்தில் 85 சதவிகிதம் ஒளியை பிரதிபலித்து வெளியே அனுப்பிவிடும். 

வைரத்தை வெட்டவோ, பட்டை தீட்டவோ செய்வதற்கு வைரத்தால் மட்டுமே செய்ய முடியும். ஆனால் வைரத்தை வைத்து மற்ற எல்லா ரத்தினக் கற்களையும் பட்டை தீட்டலாம். . பட்டை தீட்டிய வைரக்கல்லில் உலகில் உள்ள எந்தப் பொருளை வைத்து உரசினாலும் அதில் கீறல் விழாது. 
 
“நீங்கள் யார் என்பதை நீங்களே தீர்மானியுங்கள். வாழ்க்கையின் திறவுகோல் சவால்களை ஏற்றுக்கொள்வதுதான். அதற்குப் பிரதானமானது நம் நம்பிக்கையை உறுதியாக மற்றும் சிறப்பாக வளர்ப்பதற்கான வழி சிறிய மாற்றங்களுடன் துவங்கி ஒவ்வொரு நாளும் நமது தன்னம்பிக்கையை வளர்க்க கூடிய விஷயங்களை பயிற்சி செய்வதுதான்.” சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் எந்த நேரத்திலும் தேவையான ஒன்று நம்பிக்கை. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எந்த சூழலிலும் எல்லா நேரத்திலும் 100 சதவிகிதம் அதீத நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களா! அதற்கான சில பயனுள்ள தரவுகள் பின்வருமாறு. 

 1. செய்வதை ஆர்வமுடன் செய்யுங்கள்: நீங்கள் ஒரு செயலில் ஈடுபடும் போது உள்ளார்ந்த ஆர்வமுடன் இருந்தால் அதை உங்களை விட வேறு யாராலும் சிறப்பாக செய்ய முடியாது. இதனால் உங்களது மனஉறுதி மற்றும் நம்பிக்கை அதிகரிக்கும். தொடர்ந்து நீங்கள் ஈடுபடும் செயல்களில் இந்த தரவை பின்பற்றினால் போக போக உங்களுக்குள் இருக்கும் நம்பிக்கை அதிகரிப்பதை கண்கூடாக காணலாம்.

 2. சரி என்று படுவதை பேசுங்கள்: உங்கள் கருத்துக்களை பிறர் முன் வெளிப்படுத்த எப்போதும் தயக்கம் காட்டாதீர்கள். நீங்கள் மனதில் நினைப்பதை தைரியமாக மற்றவர்கள் முன் வெளிப்படுத்தினால் அதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் நம்பிக்கை மிகவும் உறுதியானதாக இருக்கும். எனவே உங்கள் மனதிற்கு சரி என்று தோன்றும் விஷயங்களை பலர் முன்னிலையில் கூறவோ அல்லது செய்யவோ ஒருநாளும் தயங்காதீர்கள். முகத்திற்கு நேரே பட்டென்று பேசும் திறன் உங்களது மனஉறுதி மற்றும் நம்பிக்கையை பிறருக்கு பறைசாற்றும். 

3. நிராகரிக்கப்பட்டால் கலங்காதீர்கள்.. உங்களது செயல் அல்லது கருத்து ஓரிடத்தில் நிராகரிக்கப்பட்டால் அது உங்களை பற்றி நீங்களே மோசமாக உணர வைக்கும், உங்கள் நம்பிக்கை உணர்வையும் குலைக்கும். எவ்வளவு பெரிய ஜாம்பவான்களாக இருந்தாலும் அவர்கள் வாழ்வன் ஒருகட்டத்தில் எந்த வகையிலாவது நிராகரிப்பை எதிர் கொண்டிருப்பார்கள். இன்னும் சில நிராகரிப்புகளையே உரமாக்கி கொண்டு அதன் பின் மனஉறுதியை வளர்த்து வெற்றி படிக்கட்டுகளில் ஏறி இருக்கிறார்கள். எனவே நிராகரிப்பை பெரிதாகஎடுத்து கொள்ளாமல் அடுத்தகட்ட நடவடிக்கையை நோக்கி முன்னே செல்லுங்கள். 

 4. உங்களை நீங்கள் தான் ஆளவேண்டும்: உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் தான் அரசன் என்று தீர்மானித்து அதற்கேற்ப உறுதியாக செயல்படுங்கள். உங்களை நீங்களே உயர்வாக மதிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு உங்களை நீங்களே மிகையாக எண்ணுவது என்பதும் முக்கியம். ஏனென்றால் வாழ்வில் வெற்றி, தோல்வி மாறி மாறி தான் வரும். அது சூழலை பொறுத்தது. தோல்வி வந்தால் துவளாமல் இருக்கவே நம்பிக்கை பயன்பட வேண்டுமே தவிர சோர்ந்து போவதற்கு அல்ல. மேலும் உங்கள் மீது நீங்களே வைத்து கொள்ளும் நம்பிக்கை மற்றும் மதிப்பு உங்களை எந்த விஷயங்களில் ஈடுபாட்டாலும் வசதியாக உணர வைக்கும். 

 5. புதிய விடயங்களை முயற்சியுங்கள்: புதிய புதிய விடயங்களை முயற்சி செய்வது நம்முடைய நம்பிக்கையை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. செய்த விடயங்களையே திரும்ப திரும்ப செய்வது உங்கள் மனதையும் சலிப்படைய வைக்கும். புதிய விடயங்களை முயற்சிக்கும் போது கிடைக்கும் அனுபவங்கள் உங்கள் நம்பிகையை முன்பை விட அதிகரிக்கும். 

 6. ஆரோக்கிய உணவு: சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். நீங்கள் உண்ணும் ஆரோக்கியமான உணவுகள் உங்கள் உடலின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு, உங்களது மனஉறுதி மற்றும் நம்பிக்கையிலும் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. உடலின் உள்ளிருந்து நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதாக உணரும் போது தானாகவே மனமும் நலமாக இருக்கும். இதனால் தன்னம்பிக்கை மற்றும் மனஉறுதி அதிகரிக்கும். 
 7. சுத்தம் சுகம் தரும்: சுயசுத்தம் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் புறச் சுத்தம் தானாக வரும் என்பர். 

 நம்பிக்கையுடன் நீங்கள் செயல்களை ஆரம்பிக்கமுன்னமே நீங்கள் வெற்றி பெற்றவர்களாகிறீர்கள். ஏனெனில் நீங்கள் செயல்வீரர்களாக விளங்குகின்றீர்கள். மனித உரிமைகளை மதித்து நடவுங்கள். மனித உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். வெற்றியைத் தலைக்கேற விடாதீர்கள். தோல்வியை இதயத்திற்கு எடுத்துச் செல்லாதீர்கள்.!

                  என் தேசம் வாழ் "இளைய சமுதாயமே"

                           👥 ஒன்றாகு ! வென்றாடு!👥

Thursday, 26 May 2022

 

வேலியே பயிரை மேய்கின்றது!            
---------------------------------------------- முகுந்தமுரளி 



 
2009இன் பின் ஈழத் தமிழர்கள் நாம் அரசியல் அநாதைகள் எனப்படும் நிர்க்கதி நிலையில் இருந்தாலும், தாயகத்தில் அரசியலில் சரியான தலைமை இல்லாத நிலையிலும் பெரும்பான்மையான மக்களும் சில தலைவர்களும் தமிழின விடுதலையை மூச்சாக வைத்துச் செயற்படுகின்ற ஓர்மம் நிறைந்தவர்களாகவே விளங்குகிறார்கள். அதேபோல் பூமிப் பந்தெங்கும் சிதறுண்டு வாழும் ஈழத் தமிழினத்தின் மத்தியில் விடுதலைக்காகக் குரல் கொடுக்கும் தமிழ் உணர்வாளர்களோ, பல அமைப்புக்களாக செயற்பட்டாலும் பிளவுற்ற நிலையிலேயே காணப்படுகின்றனர். இப்பிளவுகளுக்குப் பின்னால் உள்ளவர்கள் விரல்விட்டு எண்ணக் கூடியளவான தனிநபர்களே. 

தனிநபர்களின் அகந்தையினால் பல நல்ல செயல்கள் கூட செயற்படாமுடியாமல் தடைப்பட்டுக்கொண்டே செல்கின்றது. இவற்றை விமர்சித்து எழுத முற்பட்டாலோ அல்லது அணுகி இந்த ஆபத்தை எடுத்தியம்ப முற்பட்டாலோ குழப்பவாதிகள்; என முத்திரை குத்தி உண்மையை ஏற்க மறுப்பதையே தம் செயலாக சிலர் கொண்டுள்ளனர். தம் செயல்களைத் சீர்திருத்துவதற்குப் பதில் தங்கள் ஆசனங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயல்கின்ற இத்தகையவர்களால் ஒருபொழுதும் தமிழ்த் தேசியம் வலுவடையப் போவதில்லை. அதேபோல் இத்தகைய உண்மைகள் தெரிந்திருந்தும் கண்டும் காணமல் பூசி மெழுகி எழுதுபவர்களின் எழுத்துக்களும் தமிழினத்தை பலவீனமே படுத்தும். உண்மையை எழுதி அதனைப் பகிரங்கப்படுத்துவது ஈழத் தமிழ் தேசியத்தின் மேம்பாட்டுக்காகவேயன்றி மழுங்கடிப்பதற்காக அல்ல. 
தமிழீழ விடுதலைப்பணியில் மிகப்பிரபலமாக விளங்கும் ஒரு அமைப்பின் மேலவை உறுப்பினரான தமிழ் ஆசிரியர் ஒருவர், கனடாவில் பாலியல் குற்றச்சாட்டுகளிற்கு உட்பட்டதன் காரணமாக 2009 இற்கு முதல் சமாதான காலப் பகுதியில் வன்னிக்கு அழைக்கப்பட்டு கணக்கு வழக்குகள் எல்லாம் பெறப்பட்டு தேசியப் பணியில் இருந்து முற்றாக விலக்கப்பட்டவராவார். முதலில்;; காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் பணிபுரிந்த இவர்,  சிறீலங்கா சுதந்திரக்கட்சி வினோதனின் நெருங்கிய சகா ஆவார். அக்கால கட்டத்தில் ஆசிரியப் பணி வேலை வாய்ப்புக்கு கையூட்டுப் பெற்றுக்கொண்டு செயற்பட்ட குற்றச்சாட்டும் இவர்மீது உள்ளது. பின்னர் நைஜீரியா சென்றுவிட்டார். 90 களில் அங்கிருந்து புலம் பெயர்ந்து இங்கு பூனைபோல வந்து புலிவேசம் இட்ட இவர் தமிழ்த் தொண்டை எழுத்தாற்றலை மதிக்கின்றவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். 
இவர் அண்மையில் யூ-ரியூப் காணொளி பேட்டி ஒன்றில் தான் மேலவை உறுப்பினராக இருக்கும் அமைப்பின் செயற்பாடுகள் பற்றி “ அதை உருவாக்கியவன் நான். ஆனால் அவர்கள் அதனைச் சரியாகக் கொண்டு செல்கிறார்களோ என்பது எனக்குத் தெரியாது. இதன் உருவாக்கத்திற்கு மலேசியாவில் குழுவாக பணியாற்றியவர்களில் முக்கிய புள்ளி நான். இது தமிழ்த்தேசியத்தை கட்டி எழுப்பும்; நோக்குடன்  உலகெங்கும் பரந்துவாழும் ஈழத் தமிழினத்தை  ஒருங்கிணைக்கும் ஒற்றைப் புள்ளியாகும். தமிழீழ விடுதலை இலட்சியத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் உறுப்பினர்கள் இன்றுவரை அதனை உணரவில்லை” என்று கூறிப்பிடுகின்றார். Part 04/Interview with S. Rajaratnam, President–Active Brain Center/Economic Crises in Sri Lanka. - YouTube

வேடிக்கை என்னவென்றால் இவரது கதையானது வேலியே பயிரை மேயும் கதையாகவே விளங்குகிறது. காரணம்; இவரே இன்றுவரை கனடாவில் அவ்வமைப்பின் பணிகளில் மேலவை (செனற்றர்) உறுப்பினராக இருந்து செயல்பட்டு வருகின்றார். இவரது நடவடிக்கைகளை உற்று நோக்குகையில் இவ்வமைப்பைக் கட்டியெழுப்பி தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்த்துவிட்டு 13 வருடங்கள் கடந்த நிலையில் செயற்படாமல் முடக்குவதற்காகவே ஒரு நிகழ்ச்சி நிரல் ஒன்றினுள் இவர் செயல்படுவதாகவே கருதவேண்டியுள்ளது. விடுதலைப் போராட்டம் என்பது ஒருபொழுதும் தனிநபர் குத்தகைக்கு எடுத்து நடத்தும் வியாபாரம் அல்ல. ஏனெனில் இவரது கருத்துக்கள் மற்றும் இவரது வழிகாட்டலில் செயற்படும் இன்னொருவரின் ஆணவச் செயற்பாடுகளும் சனநாயகவழி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களையே கட்டிப்போடும் அளவிற்கு அதிகாரம் மிக்கதாகவும், விமர்சனத்திற்கு உரியதாகவுமே விளங்குகிறது. இவர்கள் ‘நுண் மேலாண்மை’ எனும் தோல்வியுற்ற செயல்பாட்டு முறையை கடைப்பிடிப்பதன் மூலம் செயல்பட முன்வந்த தொண்டர்களையும் விரட்டியடித்து செயற்பாடுகளையும் முடக்கியுள்ளமையே அனுபவத்தில் கண்டவன் நான். கட்டையிலே போகிற வயதிலும் தமிழனத்தின் விடியல் பயணத்திற்கு முட்டுக்கட்டையாகவே இவர்களது செயல்கள் விளங்குகின்றன. 
13 வருட காலங்களின் பின் இந்த அரசியல் கருத்துருவாக்கத்தின் முக்கியபுள்ளியாகவும், இதனைத் “தானே உருவாக்கியதாக”வும் இவர் தம்பட்டம் அடித்தாலும், அத்தகைய ஆலோசனைக்குழுவில் இவரது பெயரைக் காணமுடியவில்லை.
ஆலோசனை குழு நியமனம் (நன்றி விக்கிபீடியா)Transnational Government of Tamil Eelam - Wikipedia 
யூன் 2009 இல், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான ஆலோசனைக் குழு ஒன்று “நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை நிறுவுவதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்கும், அத்தகைய நாடுகடந்த அரசாங்கத்தால் அடையப்பட வேண்டிய நோக்கங்களைப் பரிந்துரைப்பதற்கும்" நிறுவப்பட்டது.
ஆலோசனைக் குழுவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல நிபுணர்கள் இருந்தனர்.
1.முத்துக்குமாரசுவாமி சொர்ணராஜா Ph.D./LL.D. (லண்டன் பல்கலைக்கழகம், யுகே)
2.பிரான்சிஸ் பாயில், Ph.D./J.D.(ஹார்வர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்கா), சர்வதேச சட்டப் பேராசிரியர் அமெரிக்கா
3.பேராசிரியர் ராமசாமி பழனிசாமி, (மலேசியா)
4.பேராசிரியர் ஏ.ஜே.சி.சந்திரகாந்தன், (கனடா)
5.நடராஜா ஸ்ரீPஸ்கந்தராஜா, முனைவர் (சிட்னி பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா), சுற்றுச்சூழல் தொடர்பு பேராசிரியர், சுவீடிஷ் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம், ஸ்வீடன்
6.முருகர் குணசிங்கம், முனைவர்
7.டாக்டர் சிவனேந்திரன் சீவநாயகம் (Aus)
8.ஏ.எல்.வசந்தகுமார் முனைவர் (யுகே)
9.கரேன் பார்க்கர் Ph.னு. மனிதாபிமான வழக்கறிஞர் (அமெரிக்கா)
10.நாகலிங்கம் ஜெயலிங்கம், எம்.டி. (அமெரிக்கா)
11.செல்வ சிவராஜா
12.பால் வில்லியம்ஸ் பீட்டர் ஷால்க்,  Ph.D. லண்ட் பல்கலைக்கழகம் (மதம்) ஃ பல்கலைக்கழகம் கோதன்பர்க் (இந்தியாலஜி), மத வரலாற்றின் பேராசிரியர் உப்சாலா பல்கலைக்கழகம், ஸ்வீடன்

இந்த ஆலோசனைக் குழுவே தமது இறுதி அறிக்கையை மார்ச் 2010 இல் வெளியிட்டது.

இந்தத் தகவலை நீங்களும் விக்கிப்பிடியாவில் பார்க்கலாம். ஆயினும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கத்திற்கான நாடுவாரியான செயற்பாட்டுக்குழுவின் இருபத்தியொரு நபர்களில் இவரும் ஒருவர் என்பதை நாம் அறிவோம். 

இன்று உலகெங்கும் தமிழ்த் தேசியத்தை ஒருங்கிணைத்து கட்டியெழுப்பிய பெருமை எமது தமிழீழத் தேசியத் தலைவரையும், நமது மாவீரச் செல்வங்களையும் தான் சாரும்.  உண்மை இவ்வாறு  இருக்க இவர் ஓதுகின்ற வேதம்: “ அனைவரையும் ஒன்றிணைக்கும் தமிழ் தேசியத்தை உலகத் தமிழர்கள் முன்னெடுக்கவில்லை. நாங்கள் இன்னமும் குண்டாஞ்சாட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். தமிழீழத்தை பார்க்கத்தான் வேண்டும் அதற்கான முன்னெடுப்புகக்களைச் செய்யத்தான் வேண்டும். ஆன அதைத்தான் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்றால் இல்லை.” என்று சொல்வதன் மூலமும் தானே தமிழ்த் தேசியத்தை ஒருங்கிணைக்க முனைவராக காட்ட முனைவதும் அதேவேளை தமிழீழத்தின் விடுதலையை ஒரு பக்கம் ஒதுக்கும் மனோநிலையும் கேள்விக்குரியதே.  “நான் நாடுகடந்த தமிழீழ அரசை உருவாக்கியவன் என்று மார்தட்டும் இவரே அதை உருவாக்கியவன் நான். ஆனால் அவர்கள் அதனைச் சரியாகக் கொண்டு செல்கிறார்களோ என்பது எனக்குத் தெரியாது.” என்று அந்த அமைப்பையே மக்கள் மத்தியில் கேள்விக்குரியதாக்குவதன் உள்நோக்கம் என்ன? அதுவும் பெரும்பாலான மக்களால் நம்பிக்கையோடு உற்றுநோக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையிலேயே இந்தத் தமிழ் ஆசிரியர் மக்களுக்கு மத்தியில் நாடுகடந்த தமிழீழ அரசின் மீது அதன் மேலவை உறுப்பினராக இருந்து கொண்டு சேற்றை வாரி இறைக்கின்றார். இது நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் மீதும் அவர் தலைமையிலான அமைச்சரவையின் மீதும் நம்பிக்கை அற்ற பேச்சாக அமைகிறது. உண்மையில்; பிரதமர் உருத்திர குமார் அவர்களின் மனிதாபிமானம் மிகுந்த அணுகுமுறையும் இத்தகையவர்களையும் அரவணைத்து செயல்படும் பரந்தமானப் பான்மையினாலும் ஏற்படும் பின்விளைவாகவே நான் இதைக் கருதுகிறேன். 

எண்பதுகளில் விடுதலைப் போரட்டத்தை மக்கள் மயப்படுத்திய பலசெயற்பாடுகளை தாயகத்தில் களத்தில் செயற்படுத்திய பல மூத்தபோராளிகளுடன் பயணித்தவர்களுக்கு இவர்களது அதிகார ஆணவ அலட்சியப் போக்கு எவ்வாறு இந்த  நாடுகடந்த தமிழீழம் எனும் அரசியல் கருத்துருவாக்கத்தில் செயற்படும் பலமான அமைப்பை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்துகிறது என்பதனை அனுபவத்தில் உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. இவ்வாறாக தமிழினத்தின் விடியலுக்கு எழுச்சியையும், மறுமலர்ச்சியையும் கொண்டுவரக் கூடிய அமைப்பானது இத்தகையவர்களின் தலையீடுகளால்தான் மக்கள் மயப்படுத்தப் படாமல், தமிழ்த் தேசியம் என்கின்ற மையப்புள்ளியில் அனைத்து தமிழர்களையும் ஒருங்கிணைக்க முடியாத கையறுநிலையில் உள்ளது என நான் கருதுகிறேன். இதனை சரியான முறையில் உணரவேண்டியவர்கள் உணர்ந்தால் மட்டுமே இலட்சியப் பயணம் வெற்றிப் பாதையில் நகரும். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மக்கள் மயப்படுத்தப்பட்டால் மட்டுமே எதையும் சாதிக்கமுடியும். மக்கள் பலமே வலுவுள்ள பேரம் பேசும் பலத்தை உருவாக்கும். இந்திய வல்லரசு தேசியத் தலைவரின்; கொள்கையையும், தமிழீழத் தேசியக் கொடியையும் உறுதியாகப் பற்றியுள்ள இவ்வமைப்பினை விடுதலைப் புலிகளின்  நீட்சியாகவே பார்க்கின்றது. 


தமிழர்களின் மிகப் பெரிய பலம் தேசியத் தலைவரும், அவரது கொள்கைளும்  அதன் கொள்கை வழி மாவீரச் செல்வங்கள் செய்த உயிர் ஈகங்களுமாகும். ஓடாத மானும் போராடாத இனமும் மீண்டதாகச் சரித்திரம் இல்லை. எதிரிகளைவிட எமக்குள் இருந்து எம்மை அழிப்பவர்களே ஆபத்தானவர்கள். குனியக் குனியக் குட்டுறவன் மூடன் என்றால், குட்டக் குட்டக் குனியுறவனும் மூடன். விழிப்புத்தான் விடுதலைக்கு முதல்படி. அச்சமின்றி உண்மைகளை எழுதவேண்டிய காலத்தின் கட்டாயம் இதுவாகும். இதனால் எத்தகைய இடர்வரினும் எம் எழுத்துப்பணி தொடரும் 

(பிற்குறிப்பு : ஈழமுரசு பத்திரிகைக்காக எழுதப்பட்டது. 2020 செப்ரம்பர் முதல் வாராவாரம் தொடர்ந்து தமிழ்த் தேசியம் சார்ந்த எனது கட்டுரைகள் பிரசுரமாகி வந்தன. முதல்முறையாக இவ்வாரம் இக்கட்டுரை பிரசுரிக்க முடியவில்லை எனத் தகவல் வந்துள்ளது. எனது வலைத்தளத்திலே இக்கட்டுரையை வெளியிட்டுள்ளேன். முகத்திற்கு அஞ்சி  ஒருபொழுதும் இலட்சியத்தைக் கைவிடமுடியாது. தவறுகள் திருத்தப்பட வேண்டியவையே அன்றி மூடிமறைக்கப்பட வேண்டியவை அல்ல. மரணம் வரை ஈழத் தமிழ்த் தேசியத்தின் மேம்பாட்டை நோக்கியே ஊடக சுதந்திரத்துடன்  எனது எழுத்துப்பணி தொடரும்.)

      முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்லர்..!             முகுந்தமுரளி உலகப் பொதுப் புத்தாண்டு வாழ்த்து உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும். 1.1....