Thursday, 16 December 2021

 அச்சத் “தீ”யும், கானல்நீரும்!     முகுந்தமுரளி

அச்சத் “தீ” எரிந்து கொண்டிருந்தும் கானல் நீர்க்கவர்ச்சியினுள் ஆட்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழினத் தலைமைகள். இதுவே இன்றைய ஈழத்தமிழினத்தின் இழிநிலை. அன்று விடுதலைப் புலிகள் இராணுவ வலுச் சமநிலையை ஏற்படுத்தி மிகவும் பலமாக இருந்த நிலையில் தான், இடைக்கால தீர்வு ஒன்றை முன்வைத்திருந்தனர் அதுதான் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை. ஏன் அந்த இடைக்கால அதிகார சபைக் கோரிக்கை முன் வைக்கப்பட்டது? ஏனெனில், ஒரு நிரந்தர தீர்வை நோக்கி பயணிக்கும்போது, அதற்கான புறச்சூழலை ஏற்படுத்துவதும், அதனை பேணிப் பாதுகாப்பதும், இரு தரப்பின் மீதான நம்பிக்கையை மக்கள்மீது கட்டியெழுப்ப வேண்டியதும் அடிப்படையான விடயங்களாகும். இல்லா விட்டால், ஒரு நிரந்தர தீர்வை நோக்கி பயணிக்க முடியாது. 

ஆனால் இன்று தமிழ் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் சொந்த நலன்களுக்கு, விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுப்பதால் பல்வேறான சிந்தனைகளும் பல்வேறு நிகழ்ச்சி நிரல்களும் இதனால் விளையும் ஏமாற்றங்களும் இவ்வாறாக காலம் கழிகின்றது. மக்கள் ஆதரவு பெற்றிருந்தும் தமிழ் மக்கள் பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வு பற்றிய நோக்கில்லாது தங்கள் நாற்காலிகளுக்கும், கட்சி நலன்களுக்குமாக தமிழினத்தைப் பலவீனமாக்கிக் காவடியாடுகின்றார்கள். மக்கள் எழுச்சிகளில் கூடக் கபடநாடக அரசியல் ஆடுகின்றார்கள். 

இனஅழித்தொழிப்புக்கான ஐக்கியநாடுகளின் வரையறையை ‘ஒர் இனப்பிரிவை அல்லது நம்பிக்கைப்பிரிவை முழுமையாக அழித்தொழிக்கும் நோக்கத்துடன் தொடர்ச்சியாகத் திட்டமிட்டுச் செய்யப்படும் கொலை மற்றும் அழிவுச் செயல்பாடுகள்’ எனச் சுருக்கமாக சொல்லலாம். இதனடிப்படையில் பார்த்தால் உண்மையில் எமது இனம் பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் திட்டமிட்ட இனவழிப்பு நிகழ்ச்சி நிரலினுடாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையே வரலாற்றுக் கண்ணாடி படம் பிடித்துக் காட்டுகிறது.  

இலங்கையில் 25 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் போது தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அட்டூழியங்கள் இனச் சுத்திகரிப்புக்கு சமமானவை என்றும், இன்றும் தமிழர்கள் அதிகம் வாழும் பிராந்தியத்தின் மக்கள்தொகையை மாற்றுவதற்கான மிகப்பெரிய உந்துதல் நடந்து வருவதாகவும், பிரபல புகைப்படக் கலைஞரும், முன்னாள் ஐநா ஊழியருமான பெஞ்சமின் டிக்ஸ் தெரிவித்தமையைக் கருத்தில் கொள்ளுதல்  அவசியம்.

இன்று வடக்கு கிழக்கு தாயகப்பகுதியில் வாழும் தமிழ் மக்கள் வெறும் பன்னிரண்டு இலட்சம்தான். இனப்பெருக்கம் அருகிய சூழ்நிலையில் பல தமிழ் ஆரம்பப் பாடசாலைகள் மூட வேண்டிய கட்டத்திற்குள் தள்ளப்பட்டுள்ளன. குடித்தொகை குறைந்துவிட்ட சூழ்நிலையில் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தின் எண்ணிக்கைள் குறைந்து கொண்டுவருகின்றன. எமது தமிழினம் அழிவின் விளிம்பில் அச்சத்தீயினால் சூழப்பட்டுள்ளது.   

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னர் வலிந்து காணமலாக்கப்பட்ட உறவுகளும், அவர்களைத் தேடிப் போராடி வாடும் உறவுகளும், சிறைக்கூடங்களிலேயே விடுதலைக்கு வழியின்றி வாடும் அரசியல் கைதிகளும் ஒருபுறமும், மறுபுறம் எமது தேசத்தில் நில ஆக்கிரமிப்புக்களாலும் கலாச்சார ஆக்கிரமிப்புக் களினாலும் அடையாளம் இழந்து கொண்டிருக்கிறது தமிழினம். இனவழிப்பில் இருந்து எமது இனம் காப்பற்றப்பட வேண்டும் என்றால் தமிழர் தாயகப்பகுதியை தமிழர்களே ஆளும்நிலை உருவாக வேண்டும். அஃதன்றி அதிகாரப் பகிர்வையே மறுக்கும் “ஒரே நாடு ஒரே சட்டம்” எனும் திட்டத்தின் கீழ் தமிழர்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டால் தமிழர்களை பூண்டோடு சிங்களப் பேரினவாதம்  அழிப்பதில் இருந்து யாராலும் காப்பாற்றமுடியாது. 

இன்று நேற்றல்ல. ஒரு நூற்றாண்டு காலமாக சிங்கள பேரினவாதத்தால் தமிழினம் ஏமாற்றப்பட்டுக் கொண்டிக்கிறது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர்தான் தமிழர்களுடைய போராட்ட வரலாறு ஆரம்பமாவதாக யாராவது கருதினால் அது சரியான ஆய்வாகாது. 1948இன் பின்னர்தான் வெளிப்படையாக திட்டமிட்ட இன அழிப்பு நடைமுறைப்படுத்தல் ஆரம்பமானது என்பது அப்பட்டமான உண்மையே. ஆயினும் 1920 ஆம் ஆண்டே சிங்களவர்களால் “சுயபாசா” இயக்கம் ஆரம்பமானது என்பதைனையும் கவனத்தில் கொள்ளவேண்டும். 

இலங்கைத் தேசியத்தை நேசித்த இன, மத, மொழி வேறுபாடின்றி இலங்கையர்கள் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தலைவராக விளங்கியவர் பொன்.அருணச்சலம் அவர்கள். முதலாவது சுதேசிய தலைவரும் அவர்தான். அவர் தமிழ், சிங்களம் என்று இன பாகுபாட்டையோ, மத, மொழி, வர்க்க, சாதி வேறுபாடுகளையோ கூட காட்டியதில்லை. ஒட்டு மொத்த இலங்கையின் விமோசனத்துக்காகவும், இலங்கையர்களின் நல்வாழ்வுக்காகவும் ஓயாது உழைத்துக்கொண்டிருந்த மனிதர் அவர். ஒரு கட்டத்தில் இலங்கையில் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் என்கிற ஒன்று எழுச்சியுற்றிருப்பதையும், அது ஏனைய சமூகங்களை ஒடுக்க வல்லது என்பதை நேரடியாக இனங்கண்டதன் பின்னர்தான்  ஒடுக்கப்படும் தன்னினத்திற்கான இனத்துவ அரசியலுக்குள் தள்ளப்பட்டிருக்கிறார். அது ஒரு திடீர் நிகழ்வல்ல. தொடர்ச்சியான பல இனத்துவ பாரபட்சங்களையும், கசப்புகளையும் அவர் அனுபவித்திருந்திருக்க வேண்டும். இறுதியில் இலங்கையின் தேசிய அரசியலுக்கு வித்திட்டு தலைமை தாங்கிய அதே அருணாசலம் தான் தமிழ் இன அரசியலுக்கும் பாதையைத் திறந்தவர் என்பதனையும் வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ளலாம். 

துரோகங்களின் வரலாறு ஜேம்ஸ் பீரிஸ் ஃசமரவிக்கிரம – அருணாச்சலம் - 1918 ஒப்பந்தமும் அதன் மீறலில் இருந்தும் ஆரம்பமாகிறது. பின்னர் மகேந்திரா ஒப்பந்தம் - 1921, பண்டா செல்வா ஒப்பந்தம் - 1957 டட்லி – செல்வா ஒப்பந்தம் - 1965, மாவட்ட சபைகள் வெள்ளை அறிக்கை – 1968 இணைப்பு சீ திட்டம் - 1983, திம்பு பேச்சுவார்த்தை – 1985, இலங்கை இந்திய ஒப்பந்தம் – 1987 , பிரேமதாச - புலிகள் பேச்சுவார்த்தை – 1989-90, சந்திரிகா  - புலிகள் பேச்சுவார்த்தை – 1994-95, சந்திரிகா, ரணில், மகிந்த – புலிகள் – 2000-2006 இவையாவும் சிங்களவர்களால் தமிழர்கள் எவ்வாறு ஏமாற்றப்பட்டார்கள் என்பதைனைக் கட்டியம் கூறும். 

புலம்பெயர்ந்த ஆர்மேனியர்கள் நூற்றாண்டு காலமாகப் போராடி “ஆர்மேனியப் படுகொலை”தனை உலகம் ஏற்று அதற்காக குரல் கொடுக்க வைத்தார்களோ அதேபோல் புலம் பெயர்ந்த தமிழர்கள் நாமும் செயற்பட வேண்டும். இதைனையே இனப்படுகொலைக் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவு மற்றும் கண்ணியம் மற்றும் இனப்படுகொலைக் குற்றத்தைத் தடுப்பதற்கான, ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தினத்தை முன்னிட்டு   கடந்த ஒன்பதாம் திகதி கனடா ரொறன்ரோவில் மெற்ரோ பொலிற்றன் மண்டபத்தில் நடந்த மாநாட்டில் உரையாற்றிய ஒன்ராரியோ சட்டசபை உறுப்பினரான அரிஸ் பபிகியன் குறிப்பிட்டார். அரிஸ் பபிகியன் அவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துடன்  கூட்டாக ஏற்பாடுசெய்த  அம்மாநாட்டில் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களான குர்திஸ், நாஞ்சிங், உகன்டா, போஸ்னியா சமூகத்தினரும் பங்குபற்றி தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். 

 

இலங்கைத் தமிழர்கள் எங்கெல்லாம் தங்களுக்கு நடந்தது, நடந்துகொண்டிருப்பது திட்டமிடப்பட்ட இனவழிப்பே என ஆவணங்களோடு நிரூபிக்க முற்படும் பொழுது அங்கெல்லாம் அதனை மறுதலிப்பதும், அதற்கு எதிரான மாற்றுப் பரப்புரைகளை மேற்கொள்வதும் இன அழிப்பை மேற்கொள்பவர்களினுடைய செயற்பாடக இருக்கிறது. ஏனெனில் திட்டமிட்ட இனவழிப்பு இனப்படுகொலை மற்றும் பிற பாரிய அட்டூழியக் குற்றங்களைச் செய்பவர்களின் இறுதிப் பாதுகாப்பு அரண் அல்லது கோட்டை மறுப்பு ஆகும்.

இவை யாவற்றையும் தாண்டி தர்மத்தை நோக்கிய பயணம் வீரியமாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒன்ராரியோ மாகண சபையில் சட்டவரைபு 104 ஆக சட்டமாக்கப்பட்டுள்ள “தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம்” என்பது சரியான முறையில் எமது இனம் அழிக்கப்பட்டுக்கொண்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ள முதல் முயற்சியாகும். இரண்டாவதாக பிறம்ரன் செங்கூசிப் பூங்காவில் அமையவுள்ள “தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபி”.   

இலங்கையில் நீதி, மனித உரிமைகள் மற்றும் நிரந்தர சமாதானத்திற்காக கனடியர்கள் பாடுபடுவதற்கான ஒரு தளத்தையும், ஊக்கத்தையும் வழங்கவும், எதிர்கால தலைமுறையினருக்கு இலங்கையில் தமிழ் மக்களை அழித்தொழிக்க நடந்த போர் மற்றும் பாதிப்புகள் குறித்து அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்கவும், உரிமைப்போரில் மாண்ட தமிழ் மக்களை நினைவுகூரும் இடமாகவும் திகழும் வகையில் நினைவுத்தூபி அமைகின்றது.

இலங்கை அரசாங்கம் அப்பாவித் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட குற்றங்களின் நினைவுகளை இடித்து வரலாற்றை மாற்றி எழுத முயலும் போது அதனை தடுக்க நாம் எழுந்து நிற்க வேண்டும். அவர்கள் சிலைகளை இடித்தும், நினைவாலயங்களை அழித்தும் நினைவு அழிப்புச் செய்யும் போதும் அதற்கு நேர்மாறாக செயல்படுவோம். எங்கள் ஒற்றுமையைக் காட்ட இங்கு கட்டுவோம் என பிறம்ரன் நகரபிதா பற்றிக் பிறவுனின் கூற்றுக்களை மெய்படச் செய்ய கனடாவாழ் தமிழர்கள் நாமனைவரும் நிதிவழங்கி நினைவு கூருவோம்! இலங்கையில் நடந்த இனப்படுகொலைப் போரின் போது உயிரிழந்த அப்பாவி தமிழ் பொதுமக்களை நினைவுகூரும் வகையில் உலகில் கட்டப்படும் முதல் நினைவுச்சின்னத்தை உருவாக்குவதில் முழுப்பங்கேற்பது கனடாவாழ் தமிழர்கள் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும்!  


No comments:

      முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்லர்..!             முகுந்தமுரளி உலகப் பொதுப் புத்தாண்டு வாழ்த்து உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும். 1.1....