Thursday, 9 December 2021


 உரக்கச் சொல்வோம்!

உலகம் உணரச் செய்வோம்! - முகுந்தமுரளி 

இன்று டிசம்பர் 9 இனப்படுகொலைக் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவு மற்றும் கண்ணியம் மற்றும் இனப்படுகொலைக் குற்றத்தைத் தடுப்பதற்கான, ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தினம் ஆகும்.  

கனடாவின் ரொரன்ரோ நகரில் மேற்படி தின நிகழ்வினை ஒரு மாநாடு ஆக ஒன்ராறியோ மாகாண சட்ட சபை உறுப்பினர் அரிஸ் பபிகியன் அவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துடன்  கூட்டாக ஏற்பாடு செய்துள்ளார். இனப்படுகொலையை எதிர் கொண்ட ஆர்மேனியர்கள், நாஞ்சிங் மக்கள்,  உருவாண்டா மக்கள் போன்ற குழுக்களின் பேச்சாளர்கள், உலகெங்கிலும் நடைபெறும் இனப்படுகொலைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துடன்  கைகோர்ப்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாக அமைந்துள்ளது. 

புலம் பெயர்ந்த ஆர்மேனியர்களின் போராட்டம் நூற்றாண்டுகளாக தொடர்ந்து வலுப்பெற்றது. கௌரவ அரிஸ் பபிகியன் அவர்கள், கனேடிய சமஷ்டிப் பாராளுமன்றத்தில் ஆர்மேனிய இனப்படுகொலைக்கான கனடிய  அரசாங்கத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக  முக்கிய பங்கினை வகித்தவராவார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆர்மேனிய இனப்படுகொலை முதல் ஈழத் தமிழர் இனப்படுகொலை வரை இத்தினத்தை முன்னிட்டு மேலோட்டமாக நினைவுகூர்வோம்.


ஆர்மேனிய இனப்படுகொலை (1915-1923):- 


அமெரிக்க சனாதிபதி பைடன் சித்திரை மாதம்  17 ஆம் திகதி சனிக்கிழமையன்று “ ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் துருக்கியர்களால் 1.5 மில்லியன் ஆர்மேனியர்கள் கொல்லப்பட்டதை ஒரு இனப்படுகொலை என்று அமெரிக்கா கருதுகிறது - இது மிகவும் கொடூரமான குற்றங்கள்.” என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.  

நாஜிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட ஐரோப்பா, கம்போடியா மற்றும் ருவாண்டாவில் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களுக்கு ஆர்மேனிய எதிர்ப்பு வன்முறையை சமன்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு மகத்தான குறியீட்டு எடையைக் கொண்டுள்ளது.

இந்த வார்த்தையின் பயன்பாடு துருக்கியின் சனாதிபதி தையிப் ரெசெப் எர்டோகன் மீது ஒரு தார்மீக அறையல் ஆகும், இது இனப்படுகொலையின் தீவிர மறுப்பு ஆகும். 

முதல் உலகப்போர் தொடங்கிய சமயத்தில் துருக்கியைச் சேர்ந்த ஓட்டோமன் பேரரசு தங்களது இருப்பினைத் தக்கவைத்துக்கொள்ள அந்தப் போரில் ஈடுபட முடிவு செய்து யேர்மனியோடு இணைந்து களம் கண்டது. அதேவேளை உள்நாட்டில் அதிகாரச்சண்டை அந்நாட்டிற்கு மற்றொரு தலைவலியாக அமைந்தது. இந்நிலையில் நிறைய புரட்சி இயக்கங்கள், நாடு முழுவதும் பலவாறாகத் தோன்றின. இதற்கெல்லாம் காரணம் ஆர்மேனியர்கள்தான் என்று விழித்துக்கொண்டது ஒட்டோமன் பேரரசு. இதற்கிடையே முதல் உலகப்போர் ஆரம்பமாகி போரில் யேர்மனியோடு  துருக்கியும் தோல்வியடைந்தது. இதனால், ஓட்டோமன் பேரரசைச் சேர்ந்தவர்கள் ஆர்மேனியர்கள் மீது மிகவும் கோபமடைந்தனர். இராணுவத்தின் மூலம் ஆர்மேனியர்களின் ஆயுதங்கள் பறிக்கப்பட்டு, துரோகிகள் என அவர்கள் குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டனர். இவ்வாறாக 1915 முதல் 1918-ம் ஆண்டுவரை 5 முதல் 12 லட்சம் ஆர்மேனியர்களைக் கொன்று ஒழித்தது ஓட்டோமன் அரசு. முதல் உலகப்போரில் ஆஸ்திரியர்கள் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இவர்களுக்கு அடுத்து, கிரேக்கர்களும் கொல்லப்பட்டனர். 20-ம் நூற்றாண்டில் நடந்த இனப்படுகொலைகளில் ஆர்மேனிய இனப்படுகொலையே, முதல் இனப் படுகொலை என போப் ஆண்டவர் பிரான்சிஸ் கருத்து தெரிவித்தார். 

யூத இனப்படுகொலை (1939-1945) :- 


ஹிட்லரால் யேர்மனியில் யூதர்கள் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த சூழலில் கூட யூதர்களை கொடுமைப்படுத்துவது, துன்புறுத்துவது, கொலைசெய்வது என இன்னொரு பக்கம் ஹிட்லரால் தொடரப்பட்டுக் கொண்டுதான் இருந்தது. யூதர்கள் நெருக்கடியான பகுதிகளில் அடைத்துவைக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து சரக்குத் தொடர் வண்டிகள் மூலம் நூற்றுக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்த வதை முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்ட பொழுது பலர் வழியிலேயே இறந்து போக எஞ்சியோர் நச்சுவாயு அறைகளுள் அடைத்துக் கொல்லப்பட்டனர். 

கம்போடியா இனப்படுகொலை (1975-1979) :- 


1953-ம் ஆண்டு கம்போடியா பிரான்ஸிடமிருந்து விடுதலை அடைந்த பொழுது கம்போடியா அரசனாக சிஹானக் பொறுப்பேற்றார். கம்போடியன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான பால் பாட் (சலோத் சார்) என்பவர் சிஹானக்கிற்கு மிகவும் தலையிடியாக விளங்கியவர், இவரே பின்னர் 1976-ல் பிரதமராகப் பதவியேற்றார். உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற வேண்டும் என்று எண்ணிய பால் பாட், அனைவரும் விவசாயம் செய்ய வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்பட்டனர். எந்தப் பிரச்னை வந்தாலும், உழைக்கும் வர்க்கம் சமாளிக்கும் என்று பால் பாட் முட்டாள்தனமாக நம்பினார். குருட்டுத்தனமான கொள்கையும், செயல்முறைப்படுத்தாத திறனும் மக்களை வாட்டின. வணிகம், மருத்துவம், தொழில்துறை எனப் பல துறைகள் எல்லாம் நிறுத்தப்பட்டன. மக்களின் சொத்துக்கள் அனைத்தும் பொதுவுடைமை ஆக்கப்பட்டு, அரசால் கைப்பற்றப்பட்டது. அப்பொழுது ஆட்சியாளர்களை எதிர்த்து போராடிய மக்களைச் சிறையிலடைத்து சித்ரவதை செய்தும் பசி, பட்டினி போட்டும்; படுகொலைகள் அரங்கேற்றப்பட்டன. அண்ணளவாக 20 லட்சம் மக்கள் இம்முறையில் கொன்றழிக்கப்பட்டனர். 

உருவாண்டா இனப்படுகொலை (1994) :- 



யேர்மனியின் காலனியாதிக்கத்தின் கீழ் இருந்த நாடு உருவாண்டா, புருண்டி. இங்கு டூட்சி, ஹ_ட்டு என்ற இரண்டு இன குழுக்கள் வாழ்ந்து வந்தனர். பல நூற்றாண்டுகளாக டூட்சி இன மக்கள் ஆண்டுவர, பல நூற்றாண்டு காத்திருப்புக்குப் பிறகு,1972-ல் புருண்டியில் ஹ_ட்டுகளின் புரட்சி தொடங்கியது. 1994 ஏப்ரல் 7 அன்று ஹ_ட்டு இன மக்கள், டூட்சி இனத்தவரை வயது, பால் வித்தியாசம் இல்லாமல் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரைக் கொன்று குவித்தனர். நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் முடமாக்கப்பட்டனர்.

போஸ்னியா இனப்படுகொலை (1992-1995) :-

ஓட்டோமன், ஆஸ்திரியா, ஹங்கேரி, யூகோஸ்லாவியாவிடம் இருந்து பிரிந்த நாடு போஸ்னியா ஆகும். புதிதாக உருவாக்கப்பட்ட தேசம் என்பதால் நாடு முழுவதும் குழப்பம் ஏற்பட்டது. போஸ்னியர்கள், செர்பியர்கள், குரெஷியர்கள் என மூன்று வகையான இன மக்கள் வாழ்ந்து வந்தனர். குரெஷிய அதிபருக்கும், போஸ்னிய அதிபருக்கும் ஓர் ஒப்பந்தத்தில் முரண்பாடு ஏற்பட, அங்கிருந்து தொடங்கியது இப்பிரச்னை. போஸ்னியா மீது குரெஷியப் படையினர் நடத்திய தாக்குதலில் 1993-ம் ஆண்டில் 2000 பேர் கொலை செய்யபட்டனர். செர்பிய ராணுவத்தால் 1992-1995 காலகட்டத்தில் இரண்டு லட்சம் போஸ்னிய குடிமக்கள் கொல்லப்பட்டனர். நான்கு லட்சம் பேர் காணாமல் போனார்கள்.

தர்ஃபுர் – சூடான் இனப்படுகொலை :- 

சூடானின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகள் சண்டையிட்டுக் கொள்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தன. இந்நிலையில் மேற்கு சூடானில் உள்ள தர்ஃபுரில் எண்ணெய் வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் வடக்கு மற்றும் தெற்கு பிரச்னை மேலும் கொழுந்துவிட்டு எரிந்தது. 1972-ல் உள்நாட்டு யுத்தம் முடிந்தது. 1983-ல் மீண்டும் துளிர்விட ஆரம்பித்து, கிட்டத்தட்ட 20 வருடங்களில் 20 லட்சம் மக்கள் உயிரிழந்தனர். 40 லட்சம் பேர் வீடுகளை இழந்து அகதிகளாகினர். யூலை 2011-ல் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டது சூடான் அரசு.

ஈழத் தமிழர் இனப்படுகொலை :- 



இலங்கை சுதந்திரமடைந்த 1948 முதல் பௌத்த சிங்களப் பேரினவாத அரசின் தமிழர்கள் மீதான திட்டமிட்ட இனவழிப்பு இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. முற்று முழுதாக தமிழர் தேசத்தை சிங்கள இராணுவம் ஆக்கிரமித்தபொழுது முள்ளிவாய்க்காலில் நடத்திய பெருந்தொகையான தமிழ் மக்களின் மீதான அழிப்பானது தமிழர்கள் மீதான சிங்கள இனவெறியர்களின் “இனப்படுகொலையின்” உச்சக்கட்டமாகும். இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் சர்வதேச தினத்தில் அரியதொரு சந்தர்ப்பத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இம்மாநாட்டை ஒழுங்குபடுத்துவதன் மூலம் உருவாக்குகின்றது. உலகை உலுக்கிவரும் இனப்படுகொலைகளுக்கு ஆளான ஏனைய சமூகத்தவர்களுடன் இணைந்து இனப்படுகொலையால் இறந்தவர்களை நினைவு கூரும் அதேநேரம் மேலும் எஞ்சியிருப்பவர்கள் இனப்படுகொலையால் இறந்து போகாமல் தடுக்கும் பாதுகாப்பு பொறிமுறை ஒன்று அவசியம் என்பதை ஈழத்தமிழர்கள் ஏனைய இனத்தவர்களுடன் இணைந்து உரக்கச் சொல்லும் நிகழ்வாக இந்நிகழ்வு அமைவதுடன், இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என்று உலகம் உணர்ந்து உரக்கச் சொல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதற்கும் கட்டியம் கூறிநிற்கிறது.  

நேட்டோ நட்பு நாடுகள் மற்றும் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள ஒரு மூலோபாய ரீதியில் முக்கிய நாடான துருக்கியை பகைத்துக் கொள்ள விரும்பாத முன்னோடிகளுடன் முறித்துக் கொண்டு, ஆர்மேனியன் இனப்படுகொலை பற்றிய அறிவிப்பை வெளியிட்ட முதல் அமெரிக்க ஜனாதிபதி திரு. பைடன் ஆவார். இதேபோல் ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலையும் வீரியத்துடன் தர்மத்தின் வெற்றியைப் பெறப்போகும் நாள் வெகுதொலைவில் இல்லை. புலம்பெயர்ந்த தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் வாழ்கின்ற நாடு கனடாவாகும். இலங்கையில் எம்மினத்தின் மீது நடந்த இனப்படுகொலைக்கான கனடிய  அரசாங்கத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கான அனைத்துப் பலமும் கனடாத் தமிழர்களின் கரங்களிலேயே உள்ளது. ஈழத் தமிழ்த் தேசியத்தையும், இனப்படுகொலை ஆபத்தினுள் வாழும் தமிழீழத் தாயக மக்களையும் இதயத்தில் வைத்து நேர்மையுடன் செயற்படும் கனடிய மக்கள் விரைவில் வெற்றியை எட்டுவார்கள் என்பது திண்ணம். இனப்படுகொலையால் இறந்தவர்களை நினைவு கூரும் அதேவேளை இருப்பவர்களை இனப்படுகொலையில் இருந்து காப்பதே உலகின் தலையாய கடமை. உரக்கச் சொல்வோம். உலகம் உணரச் செய்வோம்! 



No comments:

      முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்லர்..!             முகுந்தமுரளி உலகப் பொதுப் புத்தாண்டு வாழ்த்து உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும். 1.1....