Thursday, 18 November 2021

 தாயின் மணிக்கொடி பாரீர்!    ஏற்றிப் போற்றிடுவோம் வாரீர்!

------------------------------------------------------------------------------------------------------------------------------------------- முகுந்தமுரளி

சுதந்திரத்திற்காக போராடும் எந்தவொரு தேசத்திற்கும் தேசியக் கொடி
என்பது இன்றியமையாதது. இது தேசிய ஒருமைப்பாடு, ஒற்றுமை மற்றும் இறையாண்மையை அடையாளப்படுத்துகிறது. ஒரு இனத்தின் சுயநிர்ணய உரிமை என்பது தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் உரிமையாகும்.  இது ஒரு தேசத்தின் தேசபக்தியையும் வகைப்படுத்துகிறது. மேலும் அது அரசியல் சுதந்திரத்தின் அடி வேர். அடிநாதம். தேசிய இனத்தின் அடையாளம்! அரசியல் அனாதைகளாக விடுதலை வேண்டிப் பயணிக்கும் ஈழத் தமிழ் மக்களிடம் தேசியக் கொடி உள்ளது.  இரண்டாவது தேசிய மாவீரர் வார ஆரம்பத்தில் 21.11.1990 இல் நமது தேசியத் தலைவர் நமக்கு வழங்கிய தமிழீழத் தேசியக் கொடி இன்றும் நம்மிடம் உள்ளது. 

தமிழ் மக்கள் நாம் ஐக்கியத்தைச் சீர்குலைக்கும் பிரிவினைவாதிகள் அல்லர். எமது தாய்மண்ணை மீளப் பெறுவது ஒன்றே எம்மினத்தைக் காக்க ஒரேவழி. இதைப் புரிந்து கொள்ளவேண்டும்  என்றால் வரலாற்றைப் திரும்பிப் பார்க்கவேண்டும். 

இலங்கைத் தீவில் பதினைந்தாம் நூற்றாண்டின்; காலனித்துவ ஆட்சியாளர்களின் வருகைக்கு முன்பே தனித்தனி சிங்கள இராச்சியங்களும் ஒரு தமிழ் இராச்சியமும்; இருந்தன. காலனித்துவ ஆட்சியாளர்களான போத்துக்கீசர், ஒல்லாந்தர், மற்றும் பிரித்தானியர்கள் தங்களுடைய 300 ஆண்டுகால ஆரம்ப ஆட்சிக் காலத்தில், சிங்கள இராச்சியங்களையும் தமிழ் இராச்சியத்தையும் தனித்தனியாக நிர்வகித்து வந்தனர். 1833இல் கோல்புறூக் ஆணைக்குழுவின் பரிந்துரைப் பிரகாரம் தம்முடைய நிர்வாக சௌகரியத்திற்காக சிங்கள இராச்சியங்களும், தமிழ் இராச்சியமும் பிரித்தானியர்களால் இணைக்கப்பட்டன.




இலங்கைத் தமிழரசுக்கட்சி 1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு 1951 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர்கள் சிங்களவர்களிடம் இருந்து வேறுபட்ட தனித்துவமான ஒரு தேசத்தினர் என்று கூறி, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கிற்கு சமஷ்டி ஆட்சி வழங்கப்படவேண்டும் என்று கூறினார்கள்.

1976 ஆம் ஆண்டு மே 14 ஆம் திகதி அன்று சுதந்திர நாடான தமிழீழத்தை நிறுவுதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் வட்டுக்கோட்டைத் தீர்மானமானது ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரகடனப்படுத்தப் பட்டது. இது ஏனெனில் வரலாற்றில் ஏமாற்றப்பட்ட வலிநிறைந்த அனுபவத்தின் வெளிப்பாடே என்றால் மிகையாகாது. 

1976 ஆம் ஆண்டு மார்கழி 5 ஆம் திகதி இலங்கைப் பாராளுமன்றத்தில், எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்கள்  “நாங்கள் முழுமையாக சமஷ்டிக் கோட்பாட்டைக் கைவிட்டுவிட்டோம் நாங்கள் பிரிந்து செல்லத் தீர்மானித்து விட்டோம், பிரிந்து செல்லாவிடில் நாம் இழந்த உரிமைகளை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியாது. தனிநாடு ஒன்றை உருவாக்குவதற்கு எல்லா வழிகளிலும் நாம் முயற்சி செய்வோம், இது உறுதி. என்னுடைய மக்களின் குரலாக சிறீலங்காவிற்கும் உலகிற்கும் இந்த அரசவையில் இருந்து இதை நான் கூறுகிறேன். இது ஒரு கடினமான பாதை என்பதை நாம் அறிவோம். சிங்களவர்களின் ஆட்சியில் இருந்து நாம் விடுபடவேண்டும் அல்லது நாம் அழிந்தொழிய வேண்டும். இதுவே எங்கள் இலட்சியம்.”  என்று ஆற்றிய உரையே சத்தியத்தின் வெளிப்பாடாகும். 

1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மக்களின் பெரும் ஆணையைப் பெற்றதையும் தமிழீழக் கோரிக்கையை மக்கள் அங்கீகரித்த வரலாற்று வாக்கெடுப்பையும் உலகிற்கு எடுத்தியம்ப வேண்டும். தமிழர் தேசியப் பிணக்குகளுக்கான எந்தவொரு அரசியல் தீர்வும் மேற்கூறப்பட்டுள்ள யாதார்த்தத்தின் அடிப்படையில் தமிழர்கள் ஒரு தனித்துவமான தேசத்தினர் என்பதனை அடையாளப்படுத்த வேண்டு;ம். சனநாயகவழியில் மீண்டும் பொதுசன வாக்கடுப்பு ஒன்றின் மூலமே தமிழர் தலைவிதி தீர்மானிக்கப்பட வேண்டும். 

இன்று தமிழினத்தை முற்றும் முழுதாக அழிக்க முற்படும் பௌத்த சிங்கள பேரினவாத இனவெறி அரசின் திட்டமிட்ட இன அழிப்பில் இருந்து தமிழர்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் வாழ்வதற்கு தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமையைத் தவிர வேறுவழியில்லை என்பதை உலகம் உணர்ந்து செயற்படும் காலம் வெகுதொலைவில் இல்லை. 

நமக்கு என்று ஒரு வரலாறு உண்டு. அடிப்பவன் அடித்தடித்து நம்மை அழிக்கத் தொடங்கியதைக் கண்டு நாம் திருப்பி அடிக்காவிட்டால் அழிக்கப்பட்டுவிடுவோம் என்றுணர்ந்ததன் பின்னணியில்தான் 1972-ல் நமது தேசியத் தலைவர் திரு.பிரபாகரன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கி  'தமிழ்ப் புதிய புலிகள்” என்று பெயர் சூட்டி, 1976ல் “தமிழீழ விடுதலைப் புலிகள்" என்று பெயர் மாற்றம் செய்தார்.


எமது தேசியத் தலைவர் புலிச் சின்னத்தைத் தெரிவு செய்தமை மிகவும் புத்திசாலித்தனமானதும் வரலாற்றுச் சிறப்புமிக்கதுமான தீர்மானமாகும். 500 ஆண்டுகளுக்கும் மேலாக காலனித்துவவாதிகளாலும் இப்போது சிங்களவர்களாலும் ஆளப்பட்ட எமது தேசத்தின் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அது உதவியது. புலி சின்னம் தமிழர்கள் நாகரிகத்தில் வரலாற்று ரீதியாக ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது. அன்றைய தமிழின் வீரத்தையும் தேசிய எழுச்சியையும் இது விளக்குகிறது. புலியின் சின்னம் நாயகர்கள்; மற்றும் அவர்களின் நம்பிக்கையை சுட்டிக்காட்டுகிறது. சோழர்கள் புலிக் கொடியின் கீழ் பல வரலாற்றுப் போர்களில் வெற்றி பெற்று தமிழர்களை தேசபக்தர்களாக வைத்திருந்தனர். புலிக்கொடி எப்போதும் தேசிய தேசபக்தியின் அடையாளமாக, தேசிய உணர்வை ஆழமாக பிரதிபலிக்கிறது.  மதச்சார்பற்றது, சமத்துவத்தைப் போற்றுகிறது.

இன்று புலிச் சின்னம் தமிழர்களின் இதயங்களிலும் உள்ளங்களிலும் ஆழமாக வாழ்கிறது. ஒட்டுமொத்த ஈழத்தமிழினமும் புலிக் கொடியின் கீழ் ஒன்றுபட்டு எழுச்சி கொள்வதற்கு காரணம் தமிழர்களுக்கான விடுதலைப் போராட்டத்தில் தம்மை ஆகுதியாக்கிய 65,000 இற்கும் மேற்பட்ட மாவீரச் செல்வங்களின் தன்னலமற்ற தியாகங்களை மனதில் ஏற்றிப் போற்றுவதனாலாகும். 


புலிக்கொடி என்று அழைக்கப்படும் தமிழீழத் தேசியக்கொடி உருவாக நமது தேசியத் தலைவர் பிரபாகரனின் முடிவு இன்னொரு காரணத்தையும் கொண்டுள்ளது. இவ்வளவு காலம் பெரிய நாடுகளால் ஆளப்பட்ட ஒரு சிறிய தேசம் எப்படி எதிர்த்துப் போராட முடியும்? நன்கு ஆயுதம் ஏந்திய, நவீன சக்திகளுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு, சிறப்பு இராணுவ அமைப்புகளைக் கொண்ட ஒரு படையை உருவாக்குவது அவசியம். இத்தேவைகளின் அடிப்படையில், நம்பமுடியாத துணிச்சல், அச்சமற்ற வீரம், சுதந்திர லட்சியம் கொண்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை உருவாக்குவது அவசியம். போராளிகள் புலியைப் போல சுறுசுறுப்புடனும் ஆக்ரோசத்துடனும் செயல்பட வேண்டும். இத்தனை குணாதிசயங்களோடும் தேசியத் தலைவர் தமிழ்ப் புலிகளை கட்டியெழுப்பினார். அதுவே இன்று உலகின் தலைசிறந்த விடுதலைப் படை என்று பலராலும் போற்றப்பட்டாலும், பயங்கரவாதிகள் என்று அரசியல் காரணங்களுக்காக பட்டஞ் சூட்டப்பட்டு முற்றாக அழிக்கப்பட்டு விட்டாலும், ஈழத்தமிழர்கள் தாம் மாவீரர் மேல் உறுதி பூண்டு அவர்களால் போற்றப்பட்ட தேசியக் கொடியைக் கையிலேந்தி தம்மினத்தின் விடுதலைக்கான பயணத்தை தொடர்கின்றனர்.  

ஈழத் தமிழினத்தைக் காக்கவென வராது வந்த மாமணியாம் நம் தேசியத் தலைவரின்; சிந்தனையிலுதித்த இந்தக் கொடி தமிழ் தேசிய எழுச்சியை மட்டுமல்ல, நமது வீரத்தையும் வலிமையையும் வரலாற்றையும் சொல்கிறது. நமது சுதந்திரப் போராட்டம் இங்கு பாயும் புலியுடன் ஒப்பிடப்படுகிறது. பண்டைய தமிழர்கள் வரலாற்றில் பாதூக்கும் கேடயமும், போர்வாளும் நவீனகாலத்தில் புலியும் துப்பாக்கியும் சன்னமுமாக மாறியிருக்கின்றது. தெரிந்தோ தெரியாமலோ 1976 முதல் 2009 வரை 33 வருடங்கள். அதுவே நமது தேசியக்கொடியில் காணப்படும் 33 சன்னங்கள் நம் ஆயுதப்போராட்ட தியாகவரலாற்றையும், நடைமுறைத் தமிழீழ அரசின் காலத்தையும் குறித்து நிற்பதனை நான் தர்மத்தின் வெளிப்பாடாகக் கருதுகின்றேன். யாவற்றிற்கும் மேலாக, நமது தேசியக் கொடி தர்மத்தின் கொடி, தர்மத்தின் தலைவன் தந்த கொடி. ஒரு தூதுவர், அது சுதந்திரம், நீதியைக் கோருகிறது மற்றும் நமது தைரியமான சுதந்திரப் போராட்டத்தை விளக்குகிறது. நாளைய சுதந்திர ஈழ நாட்டின் அடையாளமாக ஐநாவிலும் பறக்கத்தான் போகின்றது.


நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்திரகுமார் அவர்களால் கடந்த மாதம் ஒக்ரோபர் 24 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்ட நமது கொடிதினத்தைக் கனடாப் பாராளுமன்ற முன்றலில் கொண்டாட அனுமதிகோரி விண்ணப்பிக்கப்பட்டது. அதனடிப்படையில் கனடாத் தமிழர்கள் எங்கள் உணர்வுகளை மதித்து, சனநாயக ரீதியாக உருவான நாடுகடந்த தமிழீழ அரசின் கொடிதினத்தைக் கொண்டாடவும், பாராளுமன்ற வளாகத்தில் நமது கொடியை நாம் ஏந்தி நிற்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எம் உரிமைகளை மதிக்கும் கனடிய அரசின் சட்டதிட்டங்களை நாம் மதிக்கின்றோம். கொவிட்கால விதிமுறைகளைப் பின்பற்றி நாம் அனைவரும் எங்கள் உரிமைக் கொடிநாளைக் கொண்டாட தேசபக்தி மிகுந்த பக்தர்களும், அமைப்புக்களும், ஊர்ச்சங்கங்களும், இதர தமிழ் அமைப்புக்களும் திரண்டு வருக என்று அன்புடனும், பாசத்துடனும் அனைவரையும் உங்களில் ஒருவனாக அழைக்கின்றேன்.  🙏


No comments:

      முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்லர்..!             முகுந்தமுரளி உலகப் பொதுப் புத்தாண்டு வாழ்த்து உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும். 1.1....