Thursday, 11 November 2021

 தமிழினமே! நின்நிலையுணர்ந்து விழித்தெழுக!

 முகுந்தமுரளி

புலம் பெயர் தேசத்தில் ஈழத் தமிழர்கள் முன்னெடுக்கும் நீதிக்கான போராட்டங்களினால் உலகம் தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்றுக்கொண்டுவிடும் எனும் அச்சத்தால் இலங்கை அரசினால் புலம் பெயர்தேசங்களில் முன்னெடுக்கப்படும் எதிர் நடவடிக்கைள் தன்னை நாம் கண்டும் வாழாவிருக்காமல், எம் இனத்தின் வளர்ச்சிக்காகவும், உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் புலம் பெயர்ந்த தேசத்தில் ஒவ்வாரு தமிழ் மக்களும் பாடுபடத் திடசங்கற்பம் கொள்ள வேண்டியவர்கள் ஆகின்றோம். 

             இலங்கையின் வட-கிழக்குப் பகுதியாம் தமிழர்களின் தாயக நிலங்களில் 2009 பெரும் இனப்படுகொலையின் பின்பும் திட்டமிட்ட இனவழிப்பின் நச்சு நடவடிக்கைகள் மூலம் தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டும், உடமைகள் காலத்திற்கு காலம் படிப்படியாக கைப்பற்றப் பட்டு பௌத்த மயப்படுத்தப்படுவதும், சிங்களக் குடியேற்றங்களால் நிரப்பப்படுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பதே வரலாற்று உண்மை.  

பரவலாக்கப்பட்டு வரும் இராணுவக் குடியேற்றத் திட்டங்களும், முற்றும் முழுதாக இராணுவமயப்படுத்தப் பட்ட சிவில் நிர்வாக சேவைகளும் தமிழ் மக்களைத் திறந்தவெளிச் சிறைச்சாலையினுள் வைத்து இறந்த உறவுகளைக் கூட நினைவு கூரும் உரிமைகள் கூட மறுதலிக்கப்பட்டு வருவதை நாம் அனைவரும் நன்கறிவோம். இவ்வேளையில், ஏனோதானோ என்று புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் நாம்; இருக்காமல் எம்மினத்தின் மீது மீளவும் பெரும் இனப்படுகொலை நிகழாமல் பாதுகாப்பதற்கு ஆகவும், பெருந்தொற்றுக் காலப் பேரிடரின் தொடர்ச்சியாக ஏற்படப்போகும் பஞ்சம் பசி பட்டினி போக்குவதற்கும் நாம் அனைவரும்  செயற்படுகின்றோம் என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை. இருப்பினும் நாம் ஒன்றிணைந்து கருத்தொருமித்துச் செயற்படுதல் என்பதே காலத்தின் அவசியம்;. 

தமிழினமே இனிமேலும் தமிழர் உரிமைகளை மீட்டெடுக்கும் பொறுப்பை 12 வருடங்களாக அரசியல்வாதிகளையும், அரசியல் அமைப்புக்களையும் நம்பி  ஒப்படைத்துவிட்டு பார்வையாளர்களாக பார்த்துக் கொண்டு இருந்தது போதும்.  தமிழீழத் தமிழர்கள் உரிமைகளை மீட்டெடுக்கும் பொறுப்பை முழுக்க முழுக்க அரசியல்வாதிகளிடமும், அமைப்புக்களிடமும் ஒப்படைக்காது உரிமைகளை மீட்டெடுக்கும் போராட்டத்தில் நம்பங்கையும் சரியான முறையில் செலுத்த விழிப்புடன் இருக்க வேண்டும். நாலு பேர் மட்டும் தீர்மானிப்பது ஒருபொழுதும் ஒரு நிரந்தரத் தீர்வை தந்துவிடமுடியாது. சுதந்திர தமிழீழம் ஒன்று மட்டுமே எம் மக்களைப் பூரணமாகப் பாதுகாப்பதற்கான ஒரே வழி. இதுவே வட்டுக்கோட்டைத் தீர்மானம் அதைத் தொடர்ந்து வந்த மக்கள் ஆணையும் காட்டிநிற்கும் வழி. அக்கொள்கையில் இதயசுத்தியுடன் உறுதியாக நிற்கும் அமைப்புக்கள் மற்றும் அரசியற் செயற்பாட்டாளர்கள்  அனைவரும் சிறுசிறு கருத்து வேற்றுமைகளைப் புறந்தள்ளி எம் இனத்தின் விடுதலைக்கான பாதையில் ஒன்றுபடவேண்டும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் மக்கள் மயப்படவேண்டும். எம் தமிழினத்தின் விடிவுக்காக நாம் அனைவரும் களத்தில் கைகோர்க்க வேண்டிய காலகட்டத்தின் உச்சத்தில் பயணிக்கின்றோம். 


இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை அங்கீகரித்த உலகின் முதல் அதிகார வரம்பாக சட்ட மூலம் 104, தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச் சட்டம் கடந்த மே மாதம் ஒன்ரா
ரியோ மாகண அரசாங்கத்தின் அங்கத்தவர்களால் அமோக ஆதரவைப் பெற்று சட்டமாகியதை நாம் அனைவரும் அறிவோம். 

சட்ட மூலம் 104ஐத் தோற்கடிக்க ஒரு பிரேரணையைக் கொண்டு வருவது இலங்கை அரசாங்கத்திற்கு சாத்தியமில்லை. ஆகையால்  இச்சட்ட மூலத்திற்கு எதிராக இலங்கை அரசாங்கம் கனடிய உச்ச நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்குதல் செய்ய முயற்சி செய்தும் அந்த வழக்கு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆயினும் முயற்சியில் சற்றும் தளராமல் பணபலத்தினைக் கொட்டி மீண்டும் முயற்சிக்கின்றார்கள். 

கனேடிய அரசியலமைப்புச் சட்டத்தை நன்கு அறிந்தவர் என வர்ணிக்கப்படும் ஹார்வர்டு தகுதி வாய்ந்த வழக்கறிஞர் சட்டக் குழுவை வழிநடத்துகிறார் என்றும்,  இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரை செல்லலாம், என்றும் “நாம் இந்த புற்றுநோயை மொட்டில் நசுக்க வேண்டும், ஏனெனில் இது நேரடியாக எங்கள் சிங்கள பௌத்த குழந்தைகளை பாதிக்கிறது, அவர்களில் பெரும்பாலோர் கனடாவில் பிறந்து வளர்ந்தவர்கள்," இவ்வாறு இங்குள்ள சிறீலங்கன்-கனடிய செயல் கூட்டணி தன் கரிசனையை வெளியிட்டுள்ளது. 

இந்தச் செயல் சிங்கள சமூகத்தையும் பௌத்த மதத்தில் நம்பிக்கை கொண்ட மக்களையும் நேரடியாக அச்சுறுத்தியுள்ளதாகவும், தமது சமூகம் அநீதியை எதிர்கொள்ளும் போது, பௌத்தத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் துறவிகள் என்ற வகையில் தாம் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது, அதனால்தான் கனடாவில் உள்ள ஆறு முக்கிய பௌத்த விகாரைகளின் தலைமை பௌத்த துறவிகள் தாங்கள் அந்த முக்கியமான கூட்டத்தில் பங்கேற்றதாகவும்  அனைத்து தமிழர்களும் இந்த மசோதாவை ஆதரிக்கவில்லை. எமது எதிர்கால சந்ததியினரிடையே வெறுப்புணர்வை பரப்ப வேண்டாம் என தமிழ் சமூகத்தில் உள்ள பிரிவினரிடம் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம். இங்கு பிறந்து வளர்ந்த தமது பிள்ளைகளின் பாரம்பரியம் சிங்களம் என்பதனால் இலக்கு வைக்கப்படுமோ என தாம் கவலைப்படுகின்றோம். எனவே, அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வருவதற்கு வாக்குகளைப் பெற்று நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் ஒருசிலரின் முயற்சிகளை முறியடிக்க கனடாவிலுள்ள ஒவ்வொரு இலங்கை சமூகமும் ஒத்துழைக்க வேண்டும்” என அந்த பௌத்த துறவி (பிக்கு) தெரிவித்துள்ளார். 

சட்டமூலம் 104 ஒரு நாளுக்குள் 124 ஒன்டாரியோ பாரளுமன்ற உறுப்பினர்களில் ஏழு பேரால் பொது அல்லது நிபுணர் ஆலோசனை இல்லாமல் நிறைவேற்றப்பட்டது. என்றும் குற்றச்சாட்டை வைத்த இவர்கள் ஒருபுறமும்,  அதேவேளை இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கனடியத் தூதுவர சந்திப்பின் பொழுது (TGEWA) சட்ட மூலம் 104  குறித்த தனது விசனத்தையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


இதன் பின்னணியில்தான் நாம் அண்மையில் 31 அக்டோபர் 2021 அன்று மொன்றியல் திருமுருகன் கோவிலில் ஆலய வழிபாட்டிற்குச் சென்ற கனடாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் - திரு. ஹர்ஷ குமார நவரத்னவையும், அதன் பின்னர் வெளியிட்ட பொய்யான ஊடக அறிக்கை ஒன்றின் திருவிளையாடலையும்; கவனிக்க வேண்டும்.  இவ்வாறு முழுத் தமிழ் சமூகமும் தங்களுடன் நிற்பதாக காட்டுவதற்கு இலங்கை அரசு புலம்பெயர்ந்த தேசத்தில் பல கபடநாடகங்கள் ஆடவுள்ளது. ஆலய வழிபாடு எனும் பெயரில் ஆலயங்களினுள் நுழைந்து தம் கபட நாடகங்களை அரங்கேற்றுவார்கள். சட்ட மூலம் 104 ஐ எவ்வாறாவது சட்டரீதியாக வெற்றிகொண்டே ஆக வேண்டும் எனும் காரணம் ஒன்றிற்காக பல அற்ப சலுகைகளைத் தமிழ் மக்கள் மத்தியில் வீசி தாம் நல்லிணக்கத்துடன் செயற்படுவதாக காட்டுவதற்கு சுயநலத் தமிழர்கள் சிலரும் துணைபோனாலும் ஆச்சரியம் இல்லை. 

உலகத்திலேயே கனடா ஒன்ராரியோ பாராளுமன்றம் தான் இலங்கையிலே நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை அங்கீகரித்த உலகின் முதல் அதிகார வரம்பாக சட்ட மூலம் 104 ஐ நிறைவேற்றியது. பிறம்ரன் நகரும் கூட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைக்க இடம் வழங்கி தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை தான் என உறுதிபட இலங்கையிலே நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை அங்கீகரித்து நிற்கிறது. இவை யாவற்றையும் சட்டத்தின் மூலம் சரித்துவிட முற்படுகிறது இலங்கை அரசு…! தமிழினமே நின் நிலையுணர்ந்து விழித்தெழுக!  இலங்கை அரசிடம் வெறும் பணபலம்தான் உள்ளது. கனடாவில் நம்மிடம் பணம் மட்டுமல்லாமல் நமது வாக்குப் பலம் இருக்கிறது. இதுவே நமது பலம். எமக்கெதிரான எதிரியின் ஒவ்வவொரு நடவடிக்கைக்கும் எதிராகச் செயற்பட திடசங்கற்பம் பூண்டிடுவோம். 

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்                                                          வைத்தூறு போலக் கெடும். (அதிகாரம்: குற்றங்கடிதல் குறள் எண்:435)

சிறு குற்றமும் நெருங்காமல் தடுக்கும் ஆற்றலை வளர்த்து கொள்ளுதல் பெருங்கேட்டினைத் தவிர்க்க உதவும்.



No comments:

      முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்லர்..!             முகுந்தமுரளி உலகப் பொதுப் புத்தாண்டு வாழ்த்து உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும். 1.1....