Thursday, 4 November 2021

 தமிழீழத் தேசியக் கொடி          கனடாவில் சட்ட பூர்வமானது!      

  முகுந்தமுரளி                 

கனடாவில் தமிழீழத் தேசியக்கொடிக்குத் தடையில்லை. “எங்கள் வழக்கறிஞர்களிடமிருந்து எங்களுக்குக் கிடைக்கும் சிறந்த அறிவுரை என்னவென்றால், அது எந்த சட்டத்திற்கும் முரணாக இல்லை" என்று ரொறன்ரோ நகரகாவலர் (Torornto Police Officer) உத்தியோகத்தர் புகாஷ் 2009 இல் கூறினார்.  கிளர்ச்சிக்குழு (விடுதலைப்புலிகள்) கனடாவில் தடைசெய்யப்பட்ட போதிலும் 2009இல் ரொறன்ரோவின் தமிழ் சமூகத்தினர் நடத்திய போராட்டத்தின் போது தமிழர்கள் புலிக்கொடிகளை காட்சிப்படுத்துவது சட்ட பூர்வமானது என ரொறன்ரோ காவல்துறையினர் தெரியப்படுத்திய விடயத்தை இன்றும் சி.பி.சி செய்தித் தளத்தில் நீங்கள் காணலாம்.   https://www.cbc.ca/news/canada/toronto/tamil-flags-flown-at-protest-legal-toronto-police-say-1.810137
Toronto CBC NEWS March 18 2009                       



கனடாவில் நமது தேசியக் கொடிக்கு தடையுள்ளது எனும் மாயையைப் பரப்பி அதைத் தவிருங்கள் என்று பல சுயநலப் புண்ணியவான்கள் பொதுநிகழ்வுகளில் நமது தேசியக் கொடியைத் தடுக்க அல்லது மறைக்க முயன்றனர். ஆயினும், தேசப்பற்று மிக்க மக்களும் இளைய தலைமுறையினரும் தேசியக் கொடியை தவறாது ஏந்தியே வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தேசியக் கொடியை ஏற்றுவது என்பது பெருமிதத்திற்கு உரியது மற்றும் தேசப்பற்றின் அடையாளம். இது விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்பின் நேர்மறையான உறுதிமொழி. தேசியக்கொடியானது தன்னம்பிக்கை கொண்ட ஒரு நாட்டைக் குறிக்கிறது. எங்கள் தமிழீழத் திருநாடு ஆக்கிரமிப்பாளர்களினால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. ஆயினும் வரலாற்றில் எங்கள் பூர்வீக இராச்சியம் உலகில் அதன் இடம், வரலாறு மற்றும் அதன் எதிர்காலம் ஆகியவற்றை உள்ளடக்கியே தமிழீழத் தேசியக்கொடி பட்டொளி வீசிப் பறக்கின்றது. 

நமது தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் சிந்தனையில் உருவாக்கம் பெற்ற புலிக்கொடி 1977 ஆம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியிலுள்ள எழுத்துக்கள் நீக்கப் பெற்ற கொடி தமிழீழத் தேசியக் கொடியாகத் தமிழீழத் தேசியத் தலைவரால் 1990 ஆம் ஆண்டு அறிவிக்கப்பெற்றது. மாவீரர் வாரத் தொடக்கத்தினமான 1990 கார்த்திகை (நவம்பர்) 21ஆம் திகதியன்று தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால்  முதன்முதலில் ஏற்றியும் வைக்கப்பட்டது. அன்று முதல் தமிழர் வரலாற்றையும், இலட்சியத்தையும்  உள்ளடக்கிய நமது தேசியக்கொடி வானில் பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கியது. அதே நாளையே எமது தமிழீழத்தின் கொடிநாளாக நாடு கடந்த அரசாங்கம் பிரகடனப் படுத்தியுள்ளது. 

தமிழீழத் தேசியக் கொடி அனைத்து தமிழீழ மக்களிற்கும் உரியகொடி. எந்த ஒரு தனிநபருக்கோ அல்லது தனி அமைப்புக்கோ உரியது அல்ல. தமிழீழத் தமிழினம் அரசிற்குரிய ஒரு தேசிய இனம் என்பதற்கு அடையாளமாகத் திகழ்வது இந்தத் தேசியக் கொடி. தமிழீழ தேசத்தின் இறைமையினையும், தேசியத்தையும் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் வரலாற்றையும் வெளிப்படுத்தி நிற்கின்றது. 

இந்தக் கொடிநாளை தேசப்பற்றுள்ள எந்தவொரு தனிநபரோ, ஊர்ச்சங்கங்களோ, விளையாட்டுக் கழகங்களோ தமிழீழத் தேசியத்தலைவரையும், மாவீரர்களின் தியாகங்களையும் மதித்துப் போற்றி தாயகத்தின் விடுதலையே இலட்சியமாக செயற்படுகின்ற எந்த ஒரு அமைப்புக்களும் சிறப்புறச் செய்யலாம். 

இலங்கையின் வடக்கு-கிழக்கு தமிழரின்; பூர்வீகத் தாய்நிலம் தமிழீழம். அதனை மறக்கவும் மாட்டோம். விட்டுக்கொடுக்கவும் மாட்டோம். சுததந்திர தமிழீழம் ஒன்றே இனஅழிப்பில் இருந்து எம் மக்களைப் பாதுகாக்கும். அதனால் அதை அடையும் வரை நாம் ஓயாமாட்டோம்.

இந்தக் கொடிநாளில் நாம் நமது தேசியக் கொடிகளைப் பட்டொளி வீசி பறக்க விடுவதன் மூலம் எம் உறுதியையும், நாம் நிரந்தர அரசியற் தீர்வு கிடைக்கும் வரை போராடாமல் ஓயமாட்டோம் என்பதையும் உலகிற்கு பறை சாற்றுவோம். நம் தேசியக் கொடிதன்னை உயர்த்துவதன் மூலம் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத்தினை உருவாக்குவதில் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு நிற்கும் உறுதியினை உலகிற்கு எடுத்துச் சொல்ல தமிழின உணர்வாளர்கள் ஒவ்வாருவரும் தங்கள் வரலாற்றுக் கடமையைச் செய்ய முன்வரவேண்டும். 

நம் தியாகிகளை நினைவு கூரும் மாவீரர் வார ஆரம்பத்திலேயே நமது தேசியக் கொடிகளை எங்கள் வாகனங்களில் பறக்கவிடுவதன் மூலமோ, எமது இல்லங்களில், வர்த்தக நிறுவனங்களில் பறக்க விடுவதன் மூலம் மாவீரர்கள் கனவு பலிக்க நாம் தொடர்ந்தும் போராடி இலட்சியத்தை வெல்வோம் என்று மாவீரர்களின் தியாகங்களின் மேல் உறுதிமொழி பூணுவோம். 

பண்டைக் காலத்திலேயே தமிழ்மக்கள் நாட்டின் கொடிமீதும் கொண்டிருந்த பற்றும் அதற்குக் கொடுத்த மதிப்பும் பற்றி இலக்கியங்களும் வரலாறுகளும் எடுத்தியம்புகின்றன. உலக வரலாற்றில் கொடிகள் முதலில் போரில் முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டன, மேலும் ஓரளவிற்கு அவை தலைமையின் அடையாளமாக இருந்து வருகின்றன. நண்பர் அல்லது எதிரியை அடையாளம் காணவும், அணிதிரட்டல் புள்ளிகளாகவும் உள்ளன. அவை இப்போது அடையாளத்திற்காகவும், அலங்காரத்திற்காகவும், காட்சிக்காகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. அடையாள நோக்கங்களுக்காக ஒரு கொடியின் பயன் அது காற்றில் சுதந்திரமாக வீசுவதைப் பொறுத்தது என்பதால், விரும்பப்படும் பொருள் பொதுவாக பிரகாசம் மற்றும் இருபுறமும் ஒரே மாதிரியான அமைப்பு அல்லது வடிவத்தைக் கொண்டுள்ளது. எனவே சொற்கள் விலக்கப்படும், மேலும் எளிமையான வடிவங்கள் விரும்பப்படுகின்றன. எந்த நிறங்கள் அல்லது சாதனங்களும் பயன்படுத்தப்படலாம். அதற்கமையவே எமது தேசியக் கொடியும் அமைந்துள்ளது.

மாவீரர்களின் ஈகத்தால் உருவான இக்கொடி தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையை பிரதிபலிப்பதோடு சாதி, வர்க்கம் போன்ற சமூக ஒடுக்கு முறைகளையும் களைந்த தமிழினத்தின் முழுமையான விடுதலையின் அடையாளம் ஆகத் திகழும் இக்கொடி நிச்சயமாக ஐக்கிய நாடுகள் சபையிலும் இறைமை கொண்ட தமிழீழம் அமையும்போது பறக்கும். 

எமது தேசியக்கொடியை மஞ்சள், சிவப்பு, கறுப்பு, வெள்ளை ஆகிய நான்கு நிறங்கள்  அழகு படுத்துகின்றன. 

தனிப்பாங்கான தேசிய இனமான தமிழீழத் தேசிய இனம் தனது சொந்த மண்ணில் தன்னாட்சி அமைத்துக்கொள்ள விழைவது அதனது அடிப்படை அரசியல் உரிமையும் மனித உரிமையுமாகும். தமிழீழ மக்கள் நடத்துகின்ற தேசிய விடுதலைப் போராட்டம் அறத்தின்பாற்பட்டது, நியாயமானது என்பதையும் தமிழீழத் தேசம் எப்பொழுதும் அறத்தின் பக்கம் நிற்குமென்பதையும் மஞ்சள் நிறம் குறித்து நிற்கிறது
தேசிய விடுதலை பெற்ற தமிழீழத் தனியரசை அமைத்து விடுவதால் மட்டும் முழுமையான  விடுதலையைப் பெற்றுவிட்டதாகக் கொள்ளமுடியாது. தமிழீழக் குமுகாயத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்படவேண்டும் சாதிய, வகுப்பு முரண்பாடுகள் அகற்றப்படவேண்டும். பெண்ணடிமைத்தனம் நீக்கப்படவேண்டும். இதற்குக் குமுகாய அமைப்பிற் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும். சமன்மையும் சமதருமமும் குமுகாய நீதியும்  நிலைநாட்டப்படவேண்டும். இத்தகைய புரட்சிகரமான குமுகாயமாற்றத்தை வேண்டிநிற்கும் எமது அரசியல் இலக்கைச் சிவப்பு நிறம் குறியீடு செய்கின்றது.

விடுதலைப்பாதை கரடுமுரடானது சாவும் அழிவும் தாங்கொணாத் துன்பங்களும் நிறைந்தது. இவற்றைத் தாங்கிக் கொள்ளவும் விடுதலையடைந்தபின் ஏற்படப்போகும் நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு தேசத்தைக்கட்டியெழுப்பவும் பாதுகாக்கவும் உருக்குப்போன்ற உறுதியான உள்ளம் வேண்டும் அசையாத நம்பிக்கை வேண்டும் தளராத உறுதி வேண்டும். இவற்றைக் கறுப்பு நிறம் குறித்துக் காட்டுகின்றது.

விடுதலை அமைப்பும் மக்களும் தலைவர்களும் தூய்மையையும் நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டுமென்பதை வெள்ளை நிறம் குறித்து நிற்கிறது.   





எத்தனை எத்தனை வேங்கைகள் ரத்தத்தில்                                                                ஏறிய கொடியிது – பெரும்                                                                                                               சத்திய வேள்வியில் செந்தமிழ் மீதினில்                                                                              சாற்றிய கொடியிது – தமிழ்                                                                                                ஈழத்தின் கொடியிது – புலி                                                                                                            ஏந்திய கொடியிது!                                                                                

நான் நீ என்கின்ற ஆணவத்தால் வரும் சிதைவுகள் மற்றும் அமைப்புக்களின் அதிகாரப் போட்டிகள் போன்றவை  தமிழர் எம்மை மலினப்படுத்தும். அவரவர் தத்தமது தனித்தன்மை மற்றும் கொள்கைப்படி செயல்படினும் இம்மாவீரர் வாரத்தில் சிந்தனையால் ஒன்றுபட்டு  எங்கும் எம்தேசியக் கொடியை ஏற்றி வைப்போம்! 

 (தமிழீழத் தேசியக் கொடியைப் பயன்படுத்துவோர்  “தமிழீழ தேசியக்கொடி பயன்பாட்டுக் கோவை”யில் உள்ள விதிமுறைகளைச் சரியாக கடைப்பிடிக்க வேண்டும் என்பதனையும் தயவுசெய்து கவனத்தில் கொள்க.)


No comments:

      முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்லர்..!             முகுந்தமுரளி உலகப் பொதுப் புத்தாண்டு வாழ்த்து உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும். 1.1....