Thursday, 28 October 2021

               ஆறாந் திருத்த நீக்கமும்,                                                       தமிழீழ விடுதலைப் புலிகளும் ! முகுந்தமுரளி


1989 இல் நேசக்கரம் நீட்டிய பிரேமதாசாவுடன், தெளிவான அரசியல் 
தொலைநோக்கு மற்றும் இராணுவ வலுநிலையுடன் விடுதலைப் புலிகள் நிபந்தனைகள் முன்வைத்து கைகுலுக்கிக் கொண்டனர். அந்நேரத்தில் இருதரப்பினற்கும் இந்திய இராணுவத்தை வெளியேற்றுவது முதல் முக்கியாமானதாக விளங்கியது. அடுத்த கட்டமாக  சுயநிர்ணய உரிமைக்குத் தடையாக இருந்த ஆறாந் திருத்தத்தை நீக்குவதையும், வட-கிழக்கு மாகாணசபையைக் கலைப்பதையும் நோக்காகக் கொண்டு விடுதலைப்புலிகளின் அரசியல் நகர்வு அமைந்தது.  இதன் பின்னணியை வரலாற்றுப் புள்ளிகளை இணைத்து புரிந்து கொள்வது அவசியம். 

தெளிவான புரிதல்களுக்கு விரிவான அலசல்கள் மிக முக்கியமானவை. ஈழத்தமிழர்கள் விடயத்தில் இந்தியாவின் வகிபாகம் மிகவும் பிரதானமானது. அதேபோல் ஈழத் தமிழர்கள் பிரச்சனையில் சர்வதேச மற்றும் இந்திய உளவுத்துறையின் சதிவேலைகள் அதன் விளைவாக திரைகளுக்கு பின்னால் நடக்கும் சூட்சும நிகழ்ச்சி நிரல்கள் என இராசதந்திர மற்றும் பூகோள அரசியலைப் புரிந்து கொள்ளாமல், இலங்கை அரசியலைப் புரிந்துகொள்ளவும் முடியாது.    

1983 யூலைக் கலவரம்  தமிழர்கள் மீதான பௌத்த சிங்கள இனவெறியர்களின் வன்முறைகளின் கொடுமையின் உச்சம் கண்டது. அது பாரதப் பிரதமராக விளங்கிய இந்திராகாந்தியையும் மிகவும் ஆழமாகப் பாதிக்கவே “இலங்கையில் நடப்பது இனப்படுகொலை (GENOCIDEஅதைப் பார்த்துக் கொண்டு இந்தியா சும்மாயிராது.” என எச்சரித்தார். இந்திராகாந்;தி வெளிப்படையாக இலங்கை அரசுடன் இராசதந்திர முயற்சிகளை மேற்கொண்டும், அதேவேளை மறைமுகமாகத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு பயிற்சிகளும், உதவிகளும் கொடுத்தும் வலுப்படுத்தியதானது, ஆயுதப் போராளிகளின் மூலம்  இராணுவரீதியான அழுத்தத்தை இலங்கை அரசுக்கு ஏற்படுத்தி இனப்பிரச்சனைக்கு பேச்சு வார்த்தைகளின் மூலம் அரசியற் தீர்வு காண்பது என்பதாகும். 

 இலங்கையின் இனப்பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு காண்பதற்கு இந்தியா உதவி செய்யத் தயாராக இருக்கிறது என இந்திராகாந்தி யே.ஆருக்கு ராசதந்திர நட்புக் கரம் நீட்டினார். இந்தியாவின் நட்புக் கரத்தினை பற்றிப் பிடித்தாலும் சிக்கல், பற்றிப் பிடிக்காவிட்டாலும் சிக்கல் எனும் தர்மசங்கடமான நிலையினுள் யே.ஆர் தள்ளப்பட்டார். முடிவில்  நிலைமையை நன்கு விளங்கி இந்தியாவின் உதவியை ஏற்றுக் கொள்ளத் தயார் என்றார்.       

 

           

                                                                      இந்திரா காந்தி, அன்று காலை பாராளுமன்றத்தில் ஆறாவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதைக் குறிப்பிட்டார், மேலும் அந்தச் சட்டம் தமிழர்கள்  சர்வகட்சி மாகாநாடு APC இல் பங்கேற்பதை கடினமாக்கும் என்று ஜெயவர்த்தனவிடம் கூறினார், மேலும் (TULF) தமிழர் விடுதலைக் கூட்டணி உடன் பேசுவதற்கு இந்தியா அவருக்கு உதவலாம் என்று பரிந்துரைத்தார்.


நேசக்கரத்தை பற்றிக் கொண்டாலும் தன்னை மிரட்டிக் காரியம் சாதிக்கப் பார்க்கின்றார் இந்திரா காந்தி என்பதனையும் யே.ஆர் நன்குணர்ந்து கொண்டார். யி.பார்த்தசாரதி வந்து, யே.ஆருடனும் ஏனைய அரசியல் தலைவர்களுடனும் பேசினார். 

பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுகின்றதோ இல்லையோ காலநீடிப்புச் செய்து இழுத்தடிப்புச் செய்து தட்டிக்கழிப்பதற்கு சனநாயகப் போர்வை மிகவசதியாக இருக்கிறது. ஆணைக்குழு, விசாரணைக்குழு, நீதி விசாரணைக்குழு, சமாதானக்குழு, நல்லிணக்கக்குழு எனும் வழி ஊடகவும் , பேச்சுவார்த்தைகள், வட்டமேசை மகாநாடுகள், சர்வகட்சி மாநாடுகள் என்பன மற்றொரு வழி ஊடகவும் என காலநீடிப்பு செய்து இழுத்தடிக்க சனநாயக வசதிகளைத் திறந்தே வைத்துள்ளது. இவ்வாறு திறக்கப்பட்டுள்ள வழிகள் அனைத்தையும் யே.ஆர் தனது காலங்கடத்தல் யுக்தியாக  பாவித்தார். 

இலங்கையின் இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாணப் போவதாக அறிவித்து சர்வகட்சி மாநாடு ஒன்றிணைக் கூட்டிப் பின்னர் அதை வட்டமேசை மகாநாடாக்கி புத்த பிக்குகளையும் அழைத்து உரை நிகழ்த்த வைத்தார். இவ்வாறாகவே யே.ஆர் ஒரு வருட காலத்தை இழுத்தடித்து காலங்கடத்தினார்.

அவ்வேளை இந்திரா காந்தி 1984.10.31இல் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தை வெடி கொழுத்தி தென்னிலங்கையில் சிங்களர்கள் கொண்டாடினார்கள். ஆனால் வட-கிழக்கில் தமது வாழ்விடத்திலேயே மரணம் நிகழ்ந்தது போல் தமிழினமே கண்ணீர்விட்டு அஞ்சலி செலுத்தியதும் வரலாறு.  அன்னையின் மரணத்தை தொடர்ந்து ராஜீவ்காந்தி இந்தியாவில் ஆட்சிக்கு வந்தார். இந்தியா எனும் பெரியநாட்டில் பொறுப்புமிக்க பதவியில் இருப்பவர்களின் இரட்டை வேட கபடநாடகங்கள் ஆரம்பமாகின. ஈழத் தமிழர் விவகாரத்தில் ‘பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்” ஆகவே இந்தியாவின் கபட நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. 

இக்காலகட்டத்தில்தான்; அமிர்தலிங்கம் 18 மாதங்களாக இந்திய அரசின் அனுசரணையுடன்  யே.ஆருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆறுவருடங்களாக ஈழத் தமிழினத்தை பூண்டோடு அழிக்க அவகாசம் கொடுத்த அமிர்தலிங்கமும், தமிழர் விடுதலைக் கூட்டணியும், தமிழீழ விடுதலைப் போராளிகளை அழித்தொழிக்க ஆயதஞ்சேர்க்கவும், சிங்கள இராணுவத்திற்கு பயிற்சி கொடுக்கவும் சிங்கள இனவெறி அரசுக்கு போதிய நேரங்கொடுத்தனர். யே.ஆர் ஜயவர்த்தனா தான்செய்யவேண்டி நாசவேலைகள் எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டு மாநாடு, வட்டமேசைப் பேச்சு யாவற்றிற்கும் முற்றுப்புள்ளியை வைத்துவிட்டு குற்றங்கள் யாவற்றையும் அமிர்தலிங்கம் தலையில் பொறித்துவிட்டார். 

அரசியல் அனுபவமற்ற ராஜீவ்காந்தி நீட்டிய நட்புக்கரத்தை தமக்கு ஜே.ஆர் சாதகமாக்கினார். விளைவு ராஜீவ்-ஜே.ஆர் கைச்சாத்திட்ட இந்தோ-இலங்கை ஒப்பந்தம் உருவாகியது. இக்கால கட்டத்தில் ஆயுதத்தை ஒப்படைத்த விடுதலைப்புலிகள் நிராயுதபாணிகளாக விளங்கும் அந்தச் சமயமே விடுதலைப்புலிகளை ஒழித்துக்கட்ட ஏற்ற சமயம் என்று மாற்றியக்க சமூக விரோத குழுக்களை ஒன்றிணைத்து ஈ.என்.டி.எல்.எவ் (ENDLF) என இந்திய இராணுவ விமானங்களில் கொண்டு வந்து இந்திய றோ அமைப்பு இறக்கியது. ஆம் 1983 முதலே விடுதலைப்புலிகளை ஒழித்துக்கட்ட இந்தியாவின் ‘றோ’ கங்கணம் கட்டிச் செயல்பட்டது. 

இக்காலகட்டத்தில் யே.ஆர் பதவி விலக அரியணையில் பிரேமதாச வந்தமர்கிறார். சிறீலங்காவின் புதிய சனாதிபதியாக வந்த பிரமேதாச காட்டுக்குச் சென்று புலிகளைச் சந்தித்துப் பேசுவதற்குக் கூட தயாராக இருப்பதாக உறுதியை வெளியிட்டதன் மூலம், தமிழீழ விடுதலைப் புலிகளை பேசுவதற்காக அழைத்தார். தமிழீழ விடுதலைப்புலிகளும் இவர் நீட்டிய நட்புக்கரத்தினை பற்றிக் கொண்டனர்.

1989 யூலை 29 இலங்கைக்கு இந்தியப்படை வந்த இரண்டு வருடப்பூர்த்தி தினமான அந்நாளிற்கு முன்பே இந்தியப்படை இலங்கையை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரேமதாச அறிவித்தார். 

புதுடில்லியின் ஏற்பாட்டில் இந்திய இராணுவத்துடன் மீண்டும் இலங்கை வந்த மாற்றியக்கக் குழுக்களும் இந்திய இராணுவ விலகலுக்கு சாக்குப்போக்குச் சொல்லியும், வெளியேற வேண்டாம் என்று கட்டாய ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள். 

எந்த சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராக விடுதலைப்புலிகள் போராடிக் கொண்டிருந்தார்களோ, அந்த எதிரிகளுடனேயே தமிழீழ விடுதலைப்புலிகள் நட்புக்கரம் பற்றி பேச்சுவார்த்தை தொடங்கியமையானது இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாண என நடுவராக வந்து சிங்கள அரசுக்குச் சாதகமான செயல்களில் ஈடுபட்டிருந்த இந்தியாவை நிலை தடுமாற வைத்தது.


இவ்வேளை புதுடில்லியின் நகர்வு அமிர்தலிங்கத்தையும் ஏனைய ஈழவிடுதலை இயக்கங்களையும்  முன்வைத்து கண்ணாமூச்சி ஆடத் தொடங்கியது. இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகள் என்றவகையில் தங்களுக்கு இருக்கக்கூடிய உலக அங்கீகாரத்தை ஈழத் தமிழர் பிரச்சினையில் பயன்படுத்துவதற்கான கூடுதல் வாய்ப்புத் தங்களுக்கு இருப்பதாகக் கருதிய அமிர்தலிங்கம் அதற்கேற்ப நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தார்.  


இதன்மூலம் விடுதலைப்புலிகளுக்கும்;  அமிர்தலிங்கம் போன்றவர்களுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டன.  1989 யூலை 13 அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் யோகேஸ்வரன் ஆகியோருடன் பேச்சுவார்த்தைக்குச் சென்ற புலிகளால் இக்கட்டானதோர் சூழ்நிலையில் இவ்விருவரும் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். 

இத்தருணத்தில் இந்தியாவில் ஆட்சிமாற்றம் ஏற்படுகிறது. வி.பி.சிங் தலைமையில்  டில்லியில் ஜனதா கட்சி ஆட்சியில் ஏறியது. விடுதலைப் புலிகளின் கடும் தாக்குதல்களாலும், பிரேமதாசவின் வற்புறுத்தலாலும் இந்தியப்படையை திருப்பி அழைக்கவேண்டியதாயிற்று. இந்தியப் படை திரும்ப முன்னரே வந்த ஒட்டுக்குழுக்கள் இந்தியாவிற்குத் தப்பியோடிச் சென்றன.

ராஜீவ்-யே.ஆர் கைச்சாத்திட்ட இந்தோ-லங்கா ஒப்பந்தம் உருவாவதற்கும், இந்திய இராணுவம் இலங்கைக்கு வர மூலகாரணமாயிருந்த இந்திய மத்திய புலானாய்வுத் துறையின் பகுப்பாய்வுப் பிரிவான றோவும், இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகார வர்க்கமும் இந்திய அமைதிப்படைக்கு ஏற்பட்ட தோல்வியையும், அது திருப்பி அனுப்பட்டவிதத்தினையும் ஏற்றுக்கொள்ளமுடியாமல் அடிபட்ட பாம்பாக பெருஞ் சீற்றத்திற்குள் முறுகின. 


ஆனால் இன்றுவரை இந்தோ-லங்கா ஒப்பந்தத்தினால் உருவான இலங்கை அரசியலமைப்பின்  13ஆம் திருத்தம் என்பது இந்திய அரசுக்கும், அதன் அதிகார வர்க்கத்திற்கும், உளவுப்பிரிவான சுயுறுக்கும் இலங்கை விடயத்தில் துருப்புச் சீட்டாகவுள்ளது. 


இலங்கை மற்றும் இந்திய அரசியலமைப்புக்கும் கட்டுப்படாத வகையில் இந்த 13ஆவது திருத்தம் அதவாது வடக்கு-கிழக்கு மாகாணசபைச் சட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. வடக்கு-கிழக்கு மாகணசபையைக் கலைக்கவும் முடியாது, தொடர்ந்து மூன்று மாதங்கள் சபைகூடாவிட்டாலும் கூட சபை தானகவே கலையவும் முடியாது. இது இப்படியிருக்க வடக்கு-கிழக்கு மாகண அந்நாள் முதல்வர் வரதராஜப்பெருமாள் ஒரு தலைப்பட்சமாக அவசர அவசரமாக ஒரு ஈழப்பிரகடனத்தைச் செய்துவிட்டு இந்தியாவில் பீகாரில் இந்திய அரசின் உதவியுடன் பாதுகாப்பாகச் சென்று ஒளிந்துவிட்டார். இலங்கையில் இருந்து இந்தியப்படையும் முற்றாகச் வெளியேறிவிட்டது. 

பிரேமதாசவுடன் கைகுலுக்கியதன் மூலம்  விடுதலைப்புலிகள் தமது முதற்கட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொண்டனர். 


அடுத்தகட்டமாக தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்குத் தடையாக இருக்கின்ற அரசியலமைப்பின் ஆறாந் திருத்தத்தை நீக்குவதும், வடக்கு-கிழக்கு மாகாணசபையைக் கலைத்து புதியதேர்தலை நடத்துவதும் அவர்கள் ஏற்பாடகவிருந்தது. 


அரசியலமைப்பின் ஆறாந் திருத்தத்தை நீக்குவதற்குப் பாராளுமன்றில் பிரேரணையை அரசாங்கமே கொண்டு வந்தாலும் ஏனைய சிங்களக்கட்சிகள் அதை எதிர்த்தே வாக்களிப்பார்கள். ஆட்சிக் கவிழ்ப்பிற்கான சந்தர்ப்பத்தைக் கொடுப்பதோடு மட்டுமல்லாது, ஆளுங்கட்சிக்குள்ளும் பிளவுகள் ஏற்பட்டுவிடலாம் எனும் தர்மசங்கடமான நிலையில் பிரேமதாசா காலங்கடத்திக் கொண்டு வந்தார். ஒரு புறம் அச்சத்தினாலும் மறுபுறம் காலங்கடத்தலினால் பிரச்சனைகள் தானாகவே தீரலாம் எனும் யுக்தியினாலும் நேரங்கடத்தினார் பிரேமதாசா. 

இவரது இந்த தர்மசங்கடமான நிலையைத் தவிப்பதற்கு ஈரோஸ் தாமே இந்த ஆறாந் திருத்த நீக்கத்தை தனிநபர் பிரேரணையாக கொண்டுவர முன்வந்தனர். இதன் மூலம் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் முஸ்லீம் காங்கிரசின் நிலைமையும் தெளிவாகிவிடும் சூழ்நிலை உருவாகவிருந்தது. 


இதே தருணத்தில் விடுதலைப்புலிகள் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது இந்திய அரசின் அதிகார வர்க்கத்திற்கும் மற்றும் றோவிற்கும் அறவே பிடிக்காத நிலையில், கலைஞர் கருணாநிதியின் ஈழ ஆதரவு நிலைக்கு முட்டுக்கட்டை போட்டதுடன், குழப்பங்களை விளைவிக்கும் நோக்கத்துடன் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தை 19 அம்சக் கோரிக்கையுடன் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. மேலும் குழப்பத்தை அதிகரிக்க ரெலோவையும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை செய்யக் களத்தில் இறக்கிவிட்டனர். 


நிலைமையைச் சமாளிக்க முடியாத பிரேமதாசாவும் ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் ரெலோ உடன் பேச்சுவார்த்தை செய்ய பெருந்தோட்டத்துறை அமைச்சராக விளங்கிய ரஞ்சன் விஜயரத்தினவை விட்டிருந்தார். அதேவேளை சமாதானக் குழுத்தலைவரான ஏ.சி.எஸ்.ஹமீத் விடுதலைப்புலிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்திவந்தார்.


இலங்கையில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மறுதலிக்கும் ஆறாந்திருத்தத்தை உள்ளடக்கிய ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட அரசியல் பரவலாக்கல் மூலம் தோற்றுவிக்கப்பட்ட மாகாணசபைகள் தமிழர்களின் அபிலாசைகளை நிறைNதுவற்றுவது வெறும் பகற்கனவு என்பதை விடுதலைப்புலிகள் தெட்டத் தெளிவாக எடுத்துரைத்தார்கள். 


மாகாண சபையை இடைத் தீர்வாக ஏற்கக்கூடிய காலம் இப்போது கடந்துவிட்டது. ஆகையால் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தும், சிறீலங்காவின் ஒற்றை ஆட்சிமுறையை அகற்றியும் மாநில சுயாட்சிக்கான தீர்வை முன்வைத்தால் அதனை நாம் பரீசீலனை செய்ய முயல்வோம் என 1990 இல் ராய்ட்டருக்கு அளித்த பேட்டி ஒன்றில் விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி செயலாளர் யோகி அவர்கள் குறிப்பிட்டது கவனத்திற்குரியது.

சென்னையில் 19.யூன்.1990 பத்மநாபா கொலை படுகொலையும் ஈழத்தமிழர்களின் சுதந்திரத்திற்குத் தடையாக இந்திய றோவால் ஆடப்பட்ட விபரீத ஆட்டங்களினால் நடந்த அனர்த்தனங்களே அன்றி வேறல்ல. அன்னை இந்திரா காந்தியின் படுகொலையுட்பட இந்தியாவின் மூலோபாயக் கொள்கை வகுப்பாளர்களினதும், மேற்குலக உளவுப் பிரிவுகளின் தலையீடுகளும் இதற்குப் பின்னாலுள்ள திரைமறைவு நாடகங்கள், உளவுத் துறைகளின் வலைப்பின்னல்கள் என்று பட்டியல் ஏராளம்.

இலங்கை அரசியலமைப்பில் மாற்றம் செய்யவேண்டுமெனில் பாரளுமன்றத்தில் மூன்றில் இரண்டு வாக்குகளைப் பெறவேண்டும். இல்லையேல் பொதுசனவாக்கெடுப்பு ஒன்றை நடத்தி மக்கள் சம்மதத்தைப் பெறவேண்டும். இவ்வாறு இலங்கையின் அரசியலமைப்பும் சிக்கலானதாக்கியே வைக்கப்பட்டுள்ளது. இந்த இடியப்பச் சிக்கலினுள் அரசியலமைப்பில் திருத்தம் செய்யமுடியாத சூழ்நிலையில் ஸ்ரீலங்காவினுள் ஐக்கியத்தையும் சமாதானத்தையும் யாராலும் உருவாக்கிட முடியாது. 

சிறுபான்மை தேசிய இனங்களது அரசியல், சமூக, மொழி, பண்பாட்டு உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், அந்த இனங்கள் தங்கள் தனித்தன்மையை இழந்து அழிந்து போகாமல் இருக்க வேண்டும் என்றால் தமிழர்களின் தலையெழுத்தை தமிழர்களே தீர்மானிக்க வடக்கு-கிழக்கில் தேவை ஒரு பொதுசன வாக்கெடுப்பு. அதற்கே வழி சமைக்கும் வகையில் தமிழர் பொதுக்கொள்கைப் பிரகடனம் உருவாகியிருக்கிறது. இக்கொள்கையானது பொதுசனவாக்கெடுப்புக்கு முன்மொழிந்தும், வடக்கு கிழக்கில் மீதமாயிருக்கும் அண்ணளவாக 12 இலட்சம் தமிழ் மக்கள் மீது தொடரும் இன அழிப்பைத் தவிர்க்க இலங்கைத் தீவின் வடகிழக்கு பகுதியில் இடைக்கால சர்வதேச பாதுகாப்பு பொறிமுறை ஒன்றையும், தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை மறுதலிக்கும் ஆறாந் திருத்தத்தை நீக்குவதை அழுத்திக் கூறியும், பேர்க்குற்றவாளிகளை இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையில் நிலவும் நிலைமையை பரிந்துரைத்தலுடன், இனப்படுகொலைக் குற்றத் தடுப்பு மற்றும் தண்டனை மற்றும் சித்திரவதைக்கு எதிரான  தடுப்பு தொடர்பான மாநாட்டின் அடிப்படையின் கீழ் சர்வதேச நீதிமன்றத்தின் முன் இலங்கைக்கு எதிரான சட்ட நடவடிக்கையையும் பிரகடனப்படுத்தி நிற்கின்றது.

(பிற்குறிப்பு:- நெதர்லாண்டில் கோத்தாபய ராஜபக்ச உட்பட பல இராணுவ உயரதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில்(International Criminal Court (ICC)) வழக்கு Global Rights Compliance LLP (GRC)  என்ற சட்டவல்லுனர் அமைப்பால் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை கவனத்திற்குரியது.)


No comments:

      முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்லர்..!             முகுந்தமுரளி உலகப் பொதுப் புத்தாண்டு வாழ்த்து உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும். 1.1....