சிறீலங்காவின் ஆறாந் திருத்தம்: ஐ.நா சாசனம் மற்றும் அடிப்படை மனித உரிமைகள் மீறல்!
“தமிழரின் தாயகம் தமிழீழம் உலகின் ஒரு பகுதி, சிறீலங்காவின் ஒருபகுதி அல்ல. தமிழீழத் தமிழர்கள் நாமும் உலகின் மரியாதைக்குரிய குடிமக்கள், இலங்கையின் இரண்டாம் குடிமக்கள் அல்ல”..முகுந்தமுரளி
1977, 1983 இனப்படுகொலைகளில் தமிழர்களின் மீதான படுகொலைகளை அனுமதித்து, உடந்தையாக இருந்து, அப்பாவித் தமிழர்களை பழிவாங்க சிங்களவர்களின் இயல்பான எதிர்வினையாக அவர்கள் அநியாயங்களை நியாயப்படுத்தி, தமிழர்களின் குரலை ஒடுக்க, மறைந்த சிறீலங்கா அதிபர் ஜே.ஆர். தமிழர்களது அடிப்படை மனித உரிமைகளைப் பறிக்க ஒரு தலைப்பட்சமாக 1983.08.08 இல் செயற்படுத்திய ஆறாவது திருத்தத்தின் முக்கியமான பிரிவுகள் கீழ்வருமாறு:உறுப்புரை 157 “எந்த அரசியல் கட்சியோ அல்லது பிற சங்கமோ அல்லது அமைப்போ இலங்கையின் பிரதேசங்களுக்குள் ஒரு தனி அரசை நிறுவுவதனை அதன் நோக்கங்களில் அல்லது குறிக்கோள்களில்; ஒன்றாய்க் கொண்டிருக்கக்கூடாது”
“இலங்கையில் தனிநாடு ஒன்று அமைப்பதை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, ஆதரிக்கவோ, ஊக்குவிக்கவோ, நிதியளிக்கவோ கூடாது.” என்பதோடு மட்டுமல்லாது “தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்கு பற்றுறுதியும் மற்றும் ராச-விசுவாசமாகவும் சத்தியம் செய்ய வேண்டும்" எனும் ஒரு ஏற்பாட்டையும் உள்ளடக்கியுள்ளது. (இத்திருத்தம் நிறைவேறிய பொழுது இந்தியாவில் ஓடி ஒளிந்திருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் தலைமைகளில் பலர் சட்ட வல்லுனர்களாக இருந்தும் மீண்டு இலங்கை வந்தததும், மறைமுகமாக அல்லது இலங்கையில் தமிழர்களுக்கான தனி அரசை கைவிட்டு அவர்கள் ஒற்றையாட்சிக்கு விசுவாசமாக, இருப்பதாக இலங்கையில் பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் எழுத்துப்பூர்வமான உறுதிமொழியை ஒப்படைத்தமையும், இவ்வாறு அப்போதைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சி மௌனமாகிவிட்டதும் கவனத்தில் கொள்க.)
அபராதங்கள் பின்வருமாறு: குடிமை உரிமைகள் குடியுரிமை இழப்பு, அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பறிமுதல் மற்றும் சிறைவாசம் போன்றவை.
இந்த ஆறாந் திருத்தம் ஐக்கிய நாடுகளின் சுயநிர்ணய உரிமை சட்டத்தை தெளிவாக மீறுவதோடு, ஐ.நா சாசன மனித உரிமைகள் உறுப்புரை 17,19 மற்றும் 30 உள்ளடங்கலாக உறுப்புரை 19 இல் வழங்கப்பட்டுள்ள கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்தினையும் தமிழர்களுக்கு மறுதலிக்கிறது.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான ஐநா உடன்படிக்கையின் பிரிவு (1) பின்வருமாறு மக்களுக்கு சுயநிர்ணய உரிமையை வழங்குகிறது: ‘‘அனைத்து மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு. அந்த உரிமையின் அடிப்படையில், அவர்கள் தங்கள் அரசியல் நிலையை சுதந்திரமாக தீர்மானிக்கிறார்கள், அதன் மூலம் அவர்களின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார வளர்ச்சியைத் தொடர்கிறார்கள். சுயநிர்ணய உரிமை இப்போது ஒரு அடிப்படை உரிமையாகும், இதனால் ஐ.நாவில் சந்தா செலுத்திய நாடுகளின் மக்களால் சட்டப்பூர்வ செல்லுபடியாகும் ஒரு கொள்கையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
1960களில் காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து தங்களை விடுவிப்பதற்காக இந்த உரிமை ஆப்பிரிக்காவின் பல நாடுகளால் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இலங்கையில் தமிழர்கள் தொடர்ச்சியான சிங்கள பௌத்த பேரினவாத பெரும்பான்மை அரசாங்கங்களின் கீழ் திட்டமிட்ட இனவழிப்பின் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அரசியலமைப்பின் ஆறாவது திருத்தமாக இயற்றப்பட்ட சனநாயக விரோத சட்டத்தின் காரணமாக தமிழர்களின் அரசியல் நிலையை சுதந்திரமாக தீர்மானிக்கும் உரிமை மறுக்கப்பட்டது வெள்ளிடைமலை.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இயற்றப்பட்ட இச்சட்டம், ஐநா சாசனம் மனித உரிமை விதிகளை மீறுவதாகும் என்பதனை பின்வரும் காரணங்களிலிருந்து பார்க்க முடியும்:
1. இலங்கையில் வாழும் தமிழர்கள் உறுப்புரை (1) விதிமுறைகளுக்கு உட்பட்டு தகுதியுள்ளவர்கள், 1833 வரை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இலங்கையில் தங்கள் ஒற்றை ஆட்சி முறையை நடைமுறைப்படுத்தும் வரை தமிழர்கள் பூர்வீக நிலங்களில் தமிழர்களின் சுதந்திரமான விதிகள் அங்கீகரிக்கப்பட்டன.
2. சட்டவரைபுகள் அவர்களின் சுயநிர்ணய உரிமையை நாட எந்தவித முன் நிபந்தனைகளையும் அமைக்கவில்லை.
3. உறுப்புரை முதன்மையாக இனப்பாகுபாடு, படுகொலைகள், இனப்படுகொலை, ஓரங்கட்டப்பட்ட, அல்லது அதிகாரத்தில் உள்ள அரசாங்கங்களின் வெளிப்படையான மற்றும் மறைவான நடவடிக்கைகளால் அழிவை எதிர்கொள்ளும் மக்கள் மற்றும் காலனித்துவ எசமானர்களால் ஆளப்படும் மக்களை நோக்கமாகக் கொண்டது.
4. பின்வரும் காரணங்களுக்காக தமிழர்கள்; இந்த உரிமையை நாடத் தகுதியுடையவர்கள்:- 1948 முதல் தமிழர்களுக்கு எதிராக பல்வேறு பாரபட்சமான சட்டங்கள் இயற்றப்பட்டன. எடுத்துக்காட்டாக, 1948 இல் வாக்குரிமைப் பறிப்புச்சட்டம், 1956 இல் சிங்களம் மட்டும் சட்டம், 1972இல் தரப்படுத்தல் சட்டம், 1956, 1958, 1977, 1981, 1983 மற்றும் 2009 இல் நடந்த இனப்படுகொலைகள் 1948 முதல் இனப்படுகொலை - கலாச்சார, கட்டமைப்பு, நில அபகரிப்பு, வலிந்த சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் இன்றும்; தொடரும் நினைவழிப்பு, நில ஆக்கிரமிப்பு, தமிழ் இனத்தின் மீதான இன அழிப்பின் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலை வெளிப்படுத்துகிறது.
5. இலங்கையை சிங்கள-பௌத்த நாடாக மாற்றுவதற்கான நிகழ்ச்சி நிரல்-நடவடிக்கைகள், (பௌத்தர்கள் இல்லாத வடக்கு மற்றும் கிழக்கில்) புத்தர் சிலைகள்; மற்றும் பௌத்த விகாரைகளை உருவாக்குதல் ஆகியவை அடங்கும்.
வடக்கில் உள்ள ஒவ்வொரு பொதுமக்களுக்கும் ஒரு சிப்பாயை நிறுத்துதல். பொதுமக்கள் நிலங்களை பறிமுதல் மற்றும் ஆக்கிரமிப்பு. கைப்பற்றப்பட்ட நிலங்களின் உரிமையாளர்கள் தங்கள் தொழில் மற்றும் வருவாயை இழத்தல் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் இடப்பெயர்வு, தவிக்கும் அரசியல் கைதிகள். பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தண்டனையற்ற கலாச்சாரம், நம்பகமான நீதித்துறை செயல்முறை இல்லாதது, வலிந்து காணமலாக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் வடகிழக்குத் தமிழர்களின் தாயகப் பகுதிகளில்; சிங்களவர்களைக் குடியேற்றுவதற்கான திட்டம் 1948இல் தொடங்கப்பட்டது முதல் இன்றும் நுட்பமாகத் தொடர்கிறது.”
“நிலம் இல்லாத மக்கள் மற்ற மக்களிடையே இழந்த மக்களாக மாறி இறுதியில் அழிவை எதிர்கொள்வார்கள்”.
ஐ.நா.வில் உறுப்பினராக உள்ள நாடுகளின் அனைத்து மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை ஒரு உள்ளார்ந்த மற்றும் தவிர்க்க முடியாத உரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்குகளை அடைவதற்கு ஒரு சர்வதேச பொறிமுறையை பரிந்துரைக்க ஐ.நா தவிர்த்துவிட்டாலும், மனித உரிமைகள் முன்னுரையில் கூறப்பட்டுள்ளபடி ஒடுக்குமுறை அரசுகளுக்கு எதிராக கலகம் செய்யும் உரிமை உள்ளிட்ட சரியான முறையை மக்கள் தேர்வு செய்ய வழிகள் மற்றும் வழிமுறைகள் திறந்திருக்கும். ஐ.நா.வின் மேற்கண்ட ஏற்பாடுகளைப் பார்க்கும்போது, இலங்கையின் ஆறாவது திருத்தம் தமிழர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஐ.நா மனித உரிமைகளுக்கான அந்த விதிமுறைகளைத் தகர்க்கும் ஒன்றே தவிர வேறில்லை.
பூமிப் பந்தில் நியாயம், நீதி, தர்மம், உண்மை எல்லாம்; பின்தள்ளப்பட்டு சர்வதேச அரசியல் களத்தில் அரசியல், பொருளாதார நலன்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகின்ற போதிலும் ஐ.நாவின் ஏற்பாடுகளில் திறந்திருக்கும் வழிமுறைகளானது, இன்று தமிழினம் மிகுந்த இக்கட்டான ஒரு காலகட்டத்தினுள் அமிழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் அவசியமானது.
மேற்குலகம் எவ்வாறு மனித உரிமை விவகாரங்களை கையில் எடுத்து தமது தலைமைத்துவத்தை கையாள நினைக்கிறதோ, அதேபோல மேற்குலகம் புனிதப்படுத்தி வைத்துள்ள மனித உரிமைச்சட்டத்தை மீறி எம் அடிப்படை உரிமையைப் பறித்த இலங்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கதவுகள் திறந்தேயுள்ளதால் நாம் சட்டரீதியாகப் போராடும் பொழுது, தாங்கள் மதிக்கும் சட்டத்தின் புனிதத்தைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பும் இந்த மேற்குலகுக்கு உண்டு.
உலக அரசியல்; அரங்கில் தமிழர்கள் எடுப்பார் கைப்பிள்ளைகளாகச் செயற்படுவதன் மூலம் நமது உரிமைகளை வென்றெடுக்க முடியாது. ஈழத் தமிழர்கள் பிரச்சனைகளும், ஈழத்தமிழினமும் வெறும் பகடைக்காய்களாக உருட்டப்படும் ஆட்டத்தில் கள-நிலை மாற்றம் வேண்டும். நாம் பகடைகளாக அல்ல ஆட்டக்காரர்களாக மாறவேண்டும். தமிழர்களுக்கான பொதுக் கொள்கைப் பிரகடனம் இதற்கான பாதையையே வகுக்கின்றது என்றால் மிகையாகாது.


No comments:
Post a Comment