திருத்தச் சட்டங்களும்,
தகிடு தத்தங்களும்! - முகுந்தமுரளி
இன்று இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருக்கின்றார்கள் என்பது வெறும் மாயையே. அவர்கள் 1948 முதல் நடைபெற்று வரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பினுள் அமிழ்ந்து இனச்சுத்திகரிப்பு நடைமுறைக்குள் அரசியல் அநாதைகளாக பாதுகாப்பற்ற நிர்க்கதி நிலையிலேயே திறந்த வெளிச் சிறைச்சாலையினிலே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளார்கள்.
தமிழர் தேசத்தின் தனித்துவமான பண்புகளை அழிப்பதற்கான இலங்கை அரசின் ஆக்கிரோச முயற்சிகள் மற்றும் தமிழர்களின் வரலாற்று வாழ்விடங்களில் நில அபகரிப்பு ஒருபுறமும் மக்களோ இனப்படுகொலையில் கொல்லப்பட்ட தம் உறவுகளைக் கூட நினைவு கூர வழியின்றித் தவிக்கின்ற ஒரு நிலையும், காணமல் போன உறவுகளின் உறவுகளோ 1700 நாட்களுக்கு மேலாக நடக்கும் சுழல் போராட்டத்தில் தங்களுக்கு மரணச்சான்றிதழ் வேண்டாம் எங்களது உறவுகளை மீளக் கையளி எனக் கதறியழுகின்றனர்.
அதேவேளை அங்கு தமிழர்களின் அரசியல் களநிலையை சுத்துமாத்துக்காரர்கள் மூலம் சீர்குலைத்துள்ள சிங்கள அரசு தற்பொழுது புலம் பெயர் தமிழ் அமைப்புக்களின் மேல் குறிவைத்துள்ளது. இங்கும் சுத்துமாத்து சுயதந்திரர்கள் தங்கள் திருவிளையாடல்களை ஆரம்பித்துள்ளமை கண்கூடு. அதன் ஒரு வெளிப்பாடே கோத்தாவின் ஊடகச் செய்தி ஒன்று புலம்பெயர் அமைப்புக்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தமை என்று மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களின் கீழ் திரிக்கப்பட்ட செய்திப் பின்னணியூடாக வெளிவந்திருக்கும் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் எட்டுப் புலம் பெயர் அறிக்கைகளின் வெளிப்பாடும் சூம் செயலி ஊடான கூட்டம் ஒன்றில் நோர்வே தமிழரவையின் மறுதலிப்பும் எனப் புலம் பெயர் மக்கள் மத்தியில் ஒரே சலசலப்பான நிலை தொடர்கின்றது.
1983 ஆம் ஆண்டு தமிழர் விரோதப் படுகொலையின் பின்னணியில் இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தமானது ஒரு தலைப்பட்சமாக நேரடியாக நிறைவேற்றப்பட்டது. தமிழர்கள் தங்கள் அரசியல் அபிலாசைகளையும் விருப்பங்களையும் வெளிப்படுத்துவதற்கு இலங்கைத் தீவில் உள்ள அரசியல் இடைவெளியை இது தடுக்கிறது. ஒரு சுதந்திர நாடு கோரும் அமைதியான சனநாயகவழிப் பரப்புரையையும் இது குற்றமாகக் கொள்கிறது. இச்சட்டத்தின் கீழ் நிரந்தர அரசியற் தீர்வுக்கான எந்த ஒரு பேச்சுவார்த்தையையும் அல்லது இணக்க அரசியலையும் இலங்கையில் சிறீலங்கா சிங்கள பௌத்த பேரினவாதிகளுடன் செயற்படுத்த முடியாது.
உண்மையில் 1983 ஆகஸ்ட் 8 முதல் நடைமுறையில் உள்ள இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தம் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும். அதாவது, உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தின் 17ம் மற்றும் 19ம் உறுப்புகளில் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ள ஒன்று கூடும் மற்றும் பேச்சு சுதந்திரங்களை அது மீறுகிறது.
வெளிநாட்டு ஒப்பந்தங்கள் ஏற்படினும் கூட தமிழர்களுக்கான தீர்வு என்ற போர்வையில், ஈடுபட்ட நாடுகள், அவர்களின் கொள்கை வழியில் அவர்கள் நலன் சார்ந்ததாகவும், சிறீலங்காவிற்கும், அவர்களிற்கும் இடையில் இருக்கும் உறவை மேலும் வலுப்படுத்த அமைந்ததே அன்றி தமிழர்களுக்கு எந்தவிதமான நற்பயனையும் வழங்கவில்லை என்பதே வரலாறு தந்த பாடமாகவுள்ளது.
சமாதானம் கொண்டுவருகிறோம் என்கிற போர்வையில் ஏற்படுத்தப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் என்கிற பெயரே சொல்லிவிடுகிறது இதன் உள்நோக்கத்தை. தமிழர்களுக்காக என உருவாக்கப்பட்ட இவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்கள், ஈழத்தமிழர்கள் அல்லாமல், அவர்களை இன்றுவரை ஒடுக்கி, ஆக்கிரமித்து, படுகொலைகளைப் புரிந்துவரும் சிங்கள அரசும், தமிழர்களின் உண்மையான அவலங்களைப் புரிந்துகொள்ளாமல், தமது சொந்த நலன்களை மட்டுமே முன்னிறுத்தி ஒப்பந்தத்தின் மூலம் இலாபமீட்ட முயன்ற இந்திய அரசும் தான். யதார்த்தம் என்னவெனில், உலகம் நினைப்பதுபோல இவ்வொப்பந்தமோ அல்லது இந்திய ராணுவத்தின் இலங்கை வருகையோ தமிழர்களுக்கான சுதந்திரத்திற்காக இடம்பெறவில்லை. மாறாக இந்திய - இலங்கை அரசுகளின் நலனுக்காகவே செய்யப்பட்டிருக்கின்றன என்பதே ஆகும்.இவ்வொப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள தமிழர் தொடர்பான ஒரேயொரு முக்கிய விடயம்; தமிழர்களின் பூர்வீக தாயகமான (இதுகூட அவர்களின் தாயகம் என்று ஒத்துக்கொள்ளப்படாமல், அவர்கள் வரலாற்று ரீதியாக செறிந்துவாழும், மற்றைய இடங்களையும் உள்ளடக்கிய பகுதி என்று சூட்சுமமான பிரகடனம் ஒன்றை இவ்வொப்பந்தம் மூலம் செய்து, இந்தியாவையும் அதற்கு இணங்க வைத்து, தமிழர்களுக்கும் அவர்களின் தாயகக் கனவை விட்டெறியுங்கள் என்று உணர்த்திய ஒப்பந்தம்) வடக்குக் கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்படும் என்றும், ஆனால் இந்த தற்காலிக இணைப்புக் கூட கிழக்கு மாகாண மக்கள் விரும்பும் பட்சத்தில், கிழக்கு மாகாணத்திற்கு மட்டுமான சர்வசன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் நிரந்தரமாகப் பிரித்துவிட முடியுமென்றும் தமிழர்களின் நிலையினை மேலும் பலவீனமாக்கிய சரத்தும் உள்ளடக்கம்.
அதேவேளை இவ்வொப்பந்தத்தில் வலியுறுத்தப்பட்ட இன்னொரு முக்கிய விடயம் இருக்கிறது. அதுதான் இலங்கை நாட்டின் தேசிய ஒருமைப்பாடு, ஒற்றையாட்சியின் பாதுகாப்பு, பிரதேச நலன் மற்றும் பாதுகாப்பு ஆகிய விடயங்கள். இவற்றை மிகவும் தெளிவான முறையில் சிங்கள அரசு வலியுறுத்தியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், தனது நலன்களைப் பாதுகாக்கும் பொறுப்பு இந்திய அரசிடமே உள்ளதென்றும் வலியுறுத்தியிருக்கிறது. இங்கே குறிப்பிடப்படவேண்டிய முக்கியமான அம்சம், இந்தியா போராளிகளுக்கு தார்மீக உதவிகளை வழங்குவதை முற்றாக நிறுத்திக்கொள்வது, இந்தியாவின் நிலப்பரப்பையோ, கடற்பரப்பையோ போராளிகள் இலங்கைக்கெதிராகப் பாவிப்பதை இந்தியா முற்றாகத் தடுப்பது, இலங்கையின் கடற்படையுடன் சேர்ந்து போராளிகளின் கடல்வழிப் போக்குவரத்தைத் தடுக்க கண்காணிப்பு ரோந்தில் கூட்டாக ஈடுபடுவது, இலங்கையின் பாதுகாப்பிற்கு போராளிகளால் அச்சுறுத்தல் ஏற்படுமிடத்து, இந்திய ராணுவம் தனது அனைத்து உதவிகளையும் இலங்கை அரசுக்கு வழங்குவது ஆகிய இலங்கையின் பாதுகாப்பிற்கான விடயங்களுக்கு இவ்வொப்பந்தம் அளித்த முக்கியத்துவம், தமிழர் நலன்கள் பற்றி அக்கறை காட்டவில்லை. இறுதியில் நியாயமான ஐந்து அம்சக் கோரிக்கையை வைத்து அகிம்சை வழியில் போரடிய திலீபனைக் சாகவிட்டு அகிம்சையையே சாகடித்தது காந்தி தேசம்.
இலங்கை அரசியலமைப்பு முற்றிலும் வேறாக இருந்தவேளையில்;;; அரசியலமைப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த 13 ஆவது திருத்தச்சட்டம் சில குறைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அது பாதுகாப்பான திறமை மிக்க அதிகார பரவலாக்கத்தினை முன் வைக்கவில்லை. பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சிக்கல்கள் எனப் பல. இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்கள் இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஒப்பந்த ரீதியாகவும் ஏற்றுக் கொண்டன. ஆனாலும் இச்சட்டம் சாகடிக்கப்பட்டு 14 வருடங்களான பின்பும் இந்தியா, இலங்கை வாழ் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்காக 13 ஆவது திருத்தச் சட்டத்தையே வலியுறுத்துகின்றது.
இது எவ்வாறான புரிதலைத் தருகின்றது எனில் 13 ஆம் திருத்தச்சட்டம் என்பது இந்தியாவுக்கு இலங்கையுடன் பேச்சு நடத்தவும், தமிழர்கள் பிரச்சனையை வைத்து தங்கள் பேரம் பேசல் மூலம் இலங்கையை வழிக்குக் கொண்டு வரவும் மட்டுமே பயன்படுத்தும் கருவியாகவும், தமிழர்களை பகடைக்காய்களாகவும் பயன்படுத்துகின்றது என்பதேயாகும்.
காலவோட்டத்தில் இந்தியாவின் மீதும் அதன் 13 ஆம் திருத்தச் சட்டத்தின் திணிப்பின் மீதும் பெரும்பாலான ஈழத் தமிழர்கள் இந்தியாவையோ அல்லது அதன் கூட்டான அமெரிக்காவையோ நம்பி ஏமாறத் தயாரகவில்லை. அதே தருணம் தமிழர்கள் நாம் என்றும் இந்தியாவிற்கு விரோதமாக நடப்பவர்கள் அல்ல. ஈழத்தமிழர்களின் பாதுகாப்பும், தமிழர்கள் நாம் இன்றும் நேசிக்கும் இந்தியாவின் பாதுகாப்பும் ஒன்றில் ஒன்று தங்கியுள்ளது என்பதனை இந்திய தேசம் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதனையும் உறுதிபட நம்புகின்றோம்.
இக்கட்டத்தில் சமரச அல்லது இணக்க அரசியல் செய்யும் மனோநிலையை மாற்றி பேரம்பேசி நிரந்தரத் தீர்விற்கான அரசியல் செய்வதற்கு உறுதிபூண்டு புலம் பெயர் தேசத்தில் ஒரே தலையின் கீழ் அனைத்து மக்களும், மக்கள் அமைப்புக்களும் திரளவேண்டும். தாயகத்திலும் நேர்மையான பொதுசனவாக்கெடுப்பு வேண்டி நிற்கும் விலைபோகாத தலைமை ஒன்றின் கீழ் ஒன்றிணைய வேண்டும். தமிழர்களுக்கான பொதுக் கொள்கைப் பிரகடத்தினூடான கோரிக்கைளுக்கு வலுச்சேர்க்க வேண்டும்.
மிக முக்கியமாக இன அழிப்பிற்குள் ஆளாகிவரும் நம் தாயக மக்களின் பாதுகாப்புக்குச் சர்வதேச பாதுகாப்பு பொறிமுறை ஒன்றை முதலில் பெற்றாக வேண்டும். அதன்கீழ் நமது மக்கள் எந்தத் தீர்வை விரும்புகின்றார்களோ அந்தத் தீர்வைப் பெற நடத்தப்படும் ஒரு பொதுசன வாக்கெடுப்பே தமிழர்களுக்கான நிரந்தர அரசியற் தீர்வுக்கு வழிவகுக்கும். இதுவே இனமோதல்களைத் தீர்க்கும் மாண்புமிகு சனநாயக மாண்பாக விளங்கும். எனவே போலித் தேர்தல்களைப் புறக்கணிப்பதும், பொதுவாக்கெடுப்பு வேண்டிப் போராடுவதுமே மாவீரர்கள் தியாகங்களின் மேல் நாங்கள் எடுக்கின்ற உறுதி மொழியாக விளங்கட்டும்! சிங்களத்தின் சனாதிபதி ஆட்சிமுறையும், பாராளுமன்ற அமைப்புமுறையும் இனப்படுகொலையின் அதிகார மையங்களே! ஆதலால் அடிப்படை மனித உரிமைகளான ஒன்று கூடும் மற்றும் பேச்சு சுதந்திரங்களை மீறும் 6 ஆம் திருத்தச் சட்டத்தை நீக்காமல், 13 ஆம் திருத்தச் சட்டமோ அல்லது அதற்கு மேலான சட்டத் திருத்தங்களும் கூட வெறும் தகிடு தத்தங்காளகவே விளங்கும்.
<a href="http://s11.flagcounter.com/more/6J"><img src="https://s11.flagcounter.com/count2/6J/bg_FFFFFF/txt_000000/border_CCCCCC/columns_2/maxflags_10/viewers_0/labels_0/pageviews_0/flags_0/percent_0/" alt="Flag Counter" border="0"></a>


No comments:
Post a Comment