“புலம்பெயர்ந்த தமிழர்களை அ.மு, அ.பி, என்று பிரிக்க வேண்டும். அ.மு என்றால் அடிக்கு முந்தியவர்கள். அ.பி என்றால் அடிக்குப் பிந்தியவர்கள். 1983ம் அண்டு “இன சங்காரத்தைத்தான”; ‘அடி’ என்று சொல்லுகிறேன். அடிக்கு முந்திச் சென்றவர்கள் மருத்துவர்களாக, பொறியாளர்களாக, கணக்காளர்களாக நல்ல உத்தியோகம் பார்த்தவர்கள். மண்ணைத்துறந்து தங்களுடைய தமிழ்க் கலாச்சாரத்தையும் துறக்கவும் தயாராகி டாலர் ஒன்றை மட்டுமே நேசித்துப் புலம் பெயர்ந்தவர்கள். அடிக்குப் பிந்தியவர்கள் தங்களுயை மானத்தை, தங்களுடைய உயிரை, இனத்துவ அடையாளத்தை எங்கே சென்றாலும் கொண்டு சென்று தக்க வைக்க வேண்டும் என்ற அவதியில் ஓடியவர்கள். அப்படி ஓடியவர்கள் அதிகம் படித்தவர்களல்ல. நிரப்;பந்தத்தினால் புலம்பெயர்ந்தவர்கள். இவர்தாம் புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ் வாழவும் வளரவும் சேவிக்கவும் தயாராக இருக்கும் கூட்டம். இவர்கள் மூலம்தான் தமிழ் 21ஆம் நூற்றாண்டுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.” - ஈழத்து இலக்கியப் படைப்பாளி எஸ்.பொ (சண்முகம் பொன்னுத்துரை)
ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் உலகெங்கும் பரந்து குடியேறினாலும், பெரும்பான்மையானோர் குடியேறிய நாடு கனடாவாகும். அகதிகளாக வந்த மக்களுக்கு நிரந்தரவதிவிட உரிமையை வழங்கி ஆதரித்த கனடா, அவர்களாக விரும்பி விண்ணப்பிக்கும் பொழுது, குடியுரிமையையும் வழங்கி சகல உரிமைகளையும் பெற்று வாழ வழிவகை செய்து தந்துள்ளது.
புலம்பெயர்ந்த தமிழன் “தமிழ் உணர்வாளனாக” வாழ்தல் தவிர்க்க முடியாதது. தமிழ் உணர்வினாலும், தமிழன் என்கிற அடையாளத்தைத் தக்க வைக்கும் வேள்வியினாலுமே அவன் பிறந்த நாட்டிலேயே அகதியாகி, வாழ்;க்கை தேடி உதிர்ந்த சருகாக அலைக்கழிந்து, இறுதியிலே புலம்பெயர் வாழ்வை மேற்கொண்டான். அவ்வாறான தமிழர்கள் கனடாவில் தமது தாய்நாட்டிற்காக குரல் கொடுக்கும் உரிமைiயைப் பெற்றிருந்தாலும் அவர்களது அரசியல் உரிமைகள் மறுக்கப்படுகிறது என்பதே பேருண்மை!
தடையே தடை !
கனடாவில் எம்மினத்தின் விடிவுக்காக நாம் போராடத் தடையில்லை என்றபோதிலும் நீடிக்கும் புலிகள் மீதான தடையானது மறைமுகமாக தமிழர்களின் அரசியல் உரிமைகள் மீதான தடையாகவே எங்கள் முதுகில் பெரும் பாறங்கல்லாக வைக்கப்பட்டுள்ளது. தமிழினத்தின் மீதான இக்கருமுகிலானது பொது எதிரியின் பொய்ப்பரப்புரைகளுக்குக் கூட பதிலளிக்க முடியாத நிலையில் எங்கள் குரல்வளைகளை நசுக்குகிறது. சமூகவலைத் தளங்களில் கூட எம் உரிமைகளைப் புறந்தள்ளுகிறது. எமது தேசியக் கொடியை எங்கள் மக்கள், போராட்டங்களில் பயன்படுத்தினாலே மக்கள் போராட்டங்களை விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களால் நடத்தப்பட்டது என்று குறுக்குவதற்கும் வழிவகுக்கிறது.
கனடா தேசத்தில் தமிழீழ விடுதைலப்புலிகள் மீதான தடைச் சட்டம் தமிழினத்தின் மீதான ஒரு கரும் முகிலாக உள்ளதோடு நீதிக்கான அறவழிப் போராட்டங்களுக்கும் பெருந்தடையாக விளங்குகின்றது. அது மட்டுமல்ல தமிழ் சமூகம் மற்ற இனத்தவர்கள் மத்தியில் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்ட ஓர் சமூகமாகவும் நோக்கப்படுகிறது. கடந்த பதினொரு ஆண்டுகளாக தாயகத்திலோ, புலத்திலோ விடுதலைப் புலிகள் அமைப்புச் செயற்படவில்லை. ஆயினும் அவ்வமைப்பின் மீது விதிக்கப்பட்ட தடையினால் தமிழர்களின் நியாயமான அறவழி அரசியல் முன்னெடுப்புக்கள் மீது பயங்கரவாத முலாம் பூசி முடக்கப்பட்டு வருகின்றது. கனடாவில் அரச வேலைவாய்ப்பு அல்லது பொறுப்பு வாய்ந்த வேலை வாய்ப்புகளுக்கு தடையாக இருக்கின்றது , புகலிட கோரிக்கை நிராகரிப்புக்கு துணை போகின்றது, மற்றும் எமது அடுத்த தலைமுறையினரை தீவிரவாதிகள் என முத்திரை குத்தச் சந்தர்ப்பத்தை கொடுக்கின்றது.
எவ்வாறெனில் கனடாவில் புலம்பெயர்ந்தோரை குற்றவாளியாக்குவதன் மூலம் புலிகள் மீதான தடையை நீடிக்கும் 2018 திருத்தம், தமிழ் கனேடிய சமுதாயத்திற்கு தீங்கு விளைவித்தாலும் கூட புலிகள் மீதான தடையை பராமரிக்க விரும்புகிறது என்று கனடா கூறுகிறது. இல்லாது அழித்து ஒழிக்கப்பட்ட விடுதலைப்
புலிகள் மீதான தடையினால் எம் சமூகத்தின் மீதான தாக்கங்கள் பின்வருமாறு..
• தமிழ் மாணவரின் உரிமைகள் வகுப்புகளில் மட்டுப்படுத்தப்படலாம்.
• பாதுகாப்பு அனுமதி (Clearance) தேவைப்படும் வேலைகளுக்கு தமிழர்கள் கூடுதல் தடைகளை சந்திக்க நேரிடும்.
• தமிழர்கள் அரசியல் மற்றும் பிறதொழில்துறைகளில் நுழைவதற்கு கூடுதல் தடைகளை எதிர்கொள்ள வேண்டும்.
• வெளிநாட்டு தலையீடு (எடுத்துக்காட்டாக இனப்படுகொலை இலங்கை) தமிழர்களை அச்சுறுத்துவதற்கான ஒரு கருவியாக இதைப் பயன்படுத்துகிறது.
• தடை விதிக்கும்போது, வரலாற்றில் தமிழர் மீதான “இனப்படுகொலை”யை மறுதலித்து இலங்கை ஆட்சி பொய்யான பிரச்சாரங்களை சுதந்திரமாக பரப்புவதற்கு இத்தடை அனுமதிக்கிறது.
• இது இலங்கையின் தமிழர் மீதான இனப்படுகொலையை மறைக்கவும் மற்றும் தமிழர்களுக்கு நீதியை மறுதலிப்பதற்கும் ஏதுவாக இருக்கின்றது.
• பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் இத் தடையால் தமிழ் கனடியர்களை தடை செய்கின்றன. இது தனியுரிமை உரிமைகளை மீறுவதை அனுமதிக்கிறது.
மீள விடுதலைப்புலிகளை உயிர்ப்பிற்கும் முயற்சியாக அல்லாமல் மாறாக ஈழத் தமிழர்கள் எம்மீதும் மற்றும் தமிழீழ தேசத்தின் இறைமையைக் கட்டுப்படுத்தும் இத்தடையை சட்ட ரீதியாக நீக்கி எம் இனத்தின் மீதான கருமுகிலை நீக்கும் முயற்சியை மேற்கொள்வது அவசியம். தடை நீங்கும் போது நாம் அனைவரும் ஒரு சுதந்திரமான செயல் திட்டங்களை இணைந்து தொடர்ந்து செய்யக்கூடிய வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள முடியும். சுவிசில் தடை நீக்கப்பட்டதைப்போலவே, இலண்டனில் நாடுகடந்த தமிழீழ அரசின் முயற்சியால் சட்டரீதியாக புலிகளின் மீதான தடை நீக்கப்பட்டது. அதேபோல் கனடாவில் சட்டரீதியாகத் தடை நீக்கப்பட்டாலே, நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல சுதந்திரம் வேண்டியலையும் வேள்வியாளர்கள் என்பதை மாற்றுச் சமூகங்களும் உணர்ந்து கொள்ளும்.
கனடாத் தமிழ் மக்களாகிய நாங்கள் கனடா நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் வண்ணம் ஒருபொழுதும் செயற்படுபவர்கள் அல்லர். அதேவேளை எங்கள் குரல்வளைகளை நசுக்கும் இத்தடையானது எமக்குத் தருகின்ற பாரிய மனவுளைச்சலையும், நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல எம்மினத்தின் விடுதலைக்காகக் குரல்கொடுக்கும் விடுதலை உணர்வாளர்கள் என்பதையும் எடுத்தியம்பும் சுதந்திரம் எமக்குண்டு. இது ஒரு நீதிக்கான போராட்டம். இதை இவ்வளவு காலமும் செய்ய முடியாதமைக்குப் பலகாரணங்கள் இருக்கலாம். ஆயினும் இத்தடைக்கல்லை நீக்குவதே எமது அரசியல் உரிமைகளை வென்று எடுக்கும் முதல் படிக்கல்லாக இருக்கும்.
முதலில் இந்நிலையை தகர்த்து எமது அரசியல் உரிமையை வென்று எடுக்க எமது ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் இதுபற்றிப் பேசவேண்டும். கனடாத் தமிழ் மக்கள் மற்றும் தமிழரசியல் அமைப்புக்களும் ஒன்றுபட்டு சிந்திக்க வேண்டும். பேசாப்பொருள் பேசப்படவேண்டும்! நிகழ்காலத்தின் செயல்களே எதிர்காலத்தின் படிக்கட்டுக்கள்! ஒன்றுபட்டு குரல் கொடுப்போம்! எம் உரிமைகளை நாமே வென்றெடுப்போம்!



No comments:
Post a Comment