முடிந்த போரும், முடியாத போராட்டமும்!
----------------------------- முகுந்தமுரளி ---------------------------
உலகின் வரைபடத்தை மூன்று வழிகளில் பரவலாக புரிந்து கொள்ள முடியும். நிலம் மற்றும் நீர், பீடபூமிகள் மற்றும் தீபகற்பங்கள், கடல்கள் மற்றும் சமுத்திரங்கள், அதன் புவியியல் எல்லைகள் மூலம் உலகைப் புரிந்து கொள்ள முடியும்.
உலகைப் புரிந்துகொள்வதற்கான மற்றுமொரு வழி அதன் அரசியல் எல்லைகள் - கண்டங்கள் மற்றும் மாநிலங்கள், தீவுகள் மற்றும் பிராந்திய கடல்கள், கண்ட திட்டுகள் மற்றும் பிரத்யேக பொருளாதார மண்டலங்கள் வழியாகும்.
வரைபடத்தை விளக்கும் மூன்றாவது வழி மேலே உள்ள இரண்டையும் மீறும் ஒரு இடத்தின் கற்பனை மூலம், எளிமையான சொற்களில், மன வரைபடம் ஒன்று ஒரு இடத்திலிருந்து செதுக்கப்பட்டுள்ளது.
இந்தோ-பசிபிக் என்பது சமீபத்திய காலங்களில் மதிப்புப்பெற்ற ஒரு மன வரைபடமாகும். கற்பனை செய்யப்பட்ட ஒவ்வொரு இடத்தையும் போலவே, விண்வெளியின் தன்மை என்ன, அதை யார் கற்பனை செய்கிறார்கள், என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. புவி-இடஞ்சார்ந்த தன்மையைப் பொறுத்தவரை, இந்தோ-பசிபிக் என்பது இந்து சமுத்திரத்திற்கும், பசிபிக் சமுத்திரத்திற்கும் இடையில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இடமாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
ஒவ்வொரு செயற்பாட்டாளரையும் பொறுத்து வரையறைகளில் மாறுபாடுகள் இருந்தாலும், அதன் விரிவாக்கம் ஆப்பிரிக்காவின் கிழக்குக் கரையிலிருந்து அமெரிக்காவின் மேற்கு கடற்கரை வரை விவாதிக்கப்படுகிறது. பரந்த விரிவாக்கத்தில் அவர்களின் சொந்த புவியியல் நிலைப்படுத்தலானது, மிகவும் செயல்பாட்டு புரிதலின் அடிப்படையில், இரு சமுத்திரங்கள் ஒன்றோடொன்றுள்ள தொடர்பு மற்றும் ஒன்றுக்கொன்று சார்ந்திருத்தல் என்பது, உலகமயமாக்கல், வர்த்தகம் மற்றும் பல்வேறு செயற்பாட்டாளர்களிடையே மாறிவரும் சமன்பாடுகளின் சக்திகளின் விளைவாகும். இது பழைய எல்லைகளை உடைத்து புதிய வழிகளைத் திறந்துள்ளது. சமுத்திரங்களில்; வளர்ந்து வரும் இயக்கமானது ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்க உதவியது. உலகின் மிக முக்கியமான கடல் வழித்தடங்கள், உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள், அதன் விளிம்புகளில் அதிக எரிசக்தி தேவைகளைத் தூண்டும் மற்றும் மிகச்சிறந்த உலகளாவிய பொதுநலன்களை உள்ளடக்கிய ஒரு நீட்டிப்பு ஆகியவற்றைக் கொண்டிருப்பதால், இந்தோ-பசிபிக் அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் அடிப்படையில் உலகின் மையமாக கருதப்படுகிறது.
இலங்கையில் சீனாவின் இந்தோ-பசிபிக் சமுத்திர மூலோபாயம்
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் சீன-இலங்கை பாதுகாப்பு உறவுகள் நிறுவப்பட்டன. பெய்ஜிங்கின் பார்வையில், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு இலங்கையில் சீனாவின் எதிர்கால முதலீடுகளுக்கு அச்சுறுத்தல் மற்றும் தடையாகவும் இருந்தது. அதுமட்டுல்லாது, புலிகளின் கடல் கட்டுப்பாட்டுத் திறன் சீனாவிற்கு எரிச்சலை ஊட்டியது.
ஏப்ரல் 2007 இல், ஜியான் போர் விமானங்கள், ஆன்டிஆர்கிராஃப்ட் துப்பாக்கிகள் மற்றும் 3 டி கண்காணிப்பு ரேடார்கள் உள்ளிட்ட 37.6 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை வாங்க இலங்கை சீனாவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. விடுதலைப்புலிகளை அழிப்பதே தன் எதிர்கால முதலீடுகளுக்குப் பாதுகாப்பு எனக் கருதியே சீன இப்போரை விரும்பியது. அதனால் அது சிங்கள அரசுக்குத் துணைநின்றது.
நியாயப்படி பார்ர்தால் சீனாவின் அரசியல் எதிரிகளான இந்தியாவும், அமெரிக்காவும் ஈழத் தமிழ்மக்களின் விடிவுக்காகப் போராடிய விடுதலைப்புலிகளின் பக்கம் இருந்திருக்கவேண்டும். சீனாவின் பிடியில் இலங்கை இறுகக் கூடாது என்று நினைத்த இந்தியாவும் இலங்கைக்குத் துணைபோனது. இந்தியா துணை நின்றதற்கு காரணம் புவிசார் அரசியல் மட்டுமே அன்றி இனப்பகை காரணமல்ல. இந்தியாவின் நடுவண் அரசில் எந்தக்கட்சி இருந்திருந்தாலும் இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் இவ்வாறே செயற்படுவார்கள். அமெரிக்காவோ ஆசியக் கண்டத்தில் இந்தியாவின் நட்புக்காக, இந்தியாவைப் பகைக்கக் கூடாது என்பதற்காக இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரித்தது. இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடர்ந்தபோது, புலிகளின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தவும், அதன் உலகளாவிய வலையமைப்பை நெரிக்கவும் திட்டமிட்டு, அமெரிக்கா விடுதலைப்புலிகளை ஒரு கொடிய பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது.
விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றுதான் அமெரிக்கா விரும்பியது. அவர்கள் அழித்தொழிக்கப்பட வேண்டுமென்பது இந்தியாவின் விருப்பமாக இருந்தது. ஏனெனில் புலிகளின் தனி ஈழக்கோரிக்கையை, அகண்ட தமிழ்த் தேசப் பேரரசிற்கான கோரிக்கையாக பார்த்தது. அதனால் அது விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க அதுவும் ஒரு காரணமாகக் கருதப்படுகின்றது.
இவ்வாறாக சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து ஆடிய ராசதந்திர சூதாட்டத்தில் ஈழம் சிக்கிச் சின்னாபின்னமானது. புலிகளின் ராஜதந்திர தோல்வியே முள்ளிவாய்க்கால் பேரழிவு என்பவர்கள், முள்ளிவாய்க்கால் பேரழிவு என்பது, அனைத்து நாகரீக சமூகத்தின் தோல்வி என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
போரில், போர் குற்றம் நடந்ததாக இன்று சொல்கிறார்கள். ஆனால் இப்போரே குற்றம்தான் என்பதே பேருண்மை. அமைதி உடன்பாட்டில் இருக்கும் பொழுதே ஒருதலைப்படசமாக உடன்பாட்டை விட்டு வெளியேறிய சிறீலங்காவை ஆதரித்து, விடுதலைக்காகப் போராடிய ஒரு சமூகத்தின் மீது போரை திணித்து இன்றுவரை தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாகவே கருதாமல் அரசியல், போர்க்குற்றம், மனித உரிமை மீறல் எனத் தங்கள் பொருளாதார வர்த்தக லாப நலன்களுக்காக ஆடுகின்ற ராசதந்திர இழுபறிகள் அதர்மமே!போர் எதிரி. அரசியல் எதிரியாக இருக்கவேண்டியது இல்லை. இதற்கு நம் கண் முன்னால் இருக்கும் உதாரணங்கள் ஜப்பான். இரண்டாம் உலகப்போர் முடிந்ததும், அவர்கள் கூட்டு சேர்ந்தது, அவர்கள் மீது அணுகுண்டு வீசிய அமெரிக்காவுடன். இந்தியா சில வருடங்களின் முன் அமெரிக்காவைப் பிரதான எதிரியாகக் கொண்டு ரஷ்யாவுடன் தனது நட்பைக் கொண்டிருந்தது. அன்று பாகிஸ்தானுக்கு நண்பனான அமெரிக்கா இன்று இந்தியாவின் நண்பன். இவ்வளவும் ஏன் இந்தியப் படைகளை வெளியேற்ற தமிழர்களின் பிரதான எதிரயான சிறீலங்கா அரசானது விடுதலைப்புலிகளுடன் கூட்டுச்சேரவில்லையா? அதன் அடிப்படையில் தமிழர்கள் நாம் நம் பிரதான எதிரி சிங்கள இனவெறி அரசு என்னபதைத் தெளிவாகப் புரிந்து செயல்படுதலும், சர்வதேச அரங்கில் ராசதந்திர உறவுகளை வளர்ப்பதும் காலத்தின் அவசியம். அவ்வகையில் நாடற்ற மக்களுக்கான வலுவான அமைப்பாக நாடுகடந்த தமிழீழ அரசை நாம் காண்கிறோம். அதன் பிரதமர் உருத்திரகுமாரின் நேர்மையும், நேர்த்தியான அரசியல் முன்னெடுப்புக்களும் இன்று பல அரசியல் ஆய்வாளர்களால் பாராட்டுப்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஒன்று மட்டும் உண்மை ஆயுதப் போர் மட்டுமே முள்ளிவாய்க்காலுடன் முடிந்துவிட்டது. போராட்டங்கள் முடியவில்லை. தன்னாட்சி உரிமைக்கான அரசியல் போராட்டங்கள் தொடரும் என்தையே பொத்துவில் முதல் பொலிகண்டிவரை திரண்ட மக்களின் அச்சம் இன்றிய எழுச்சியாகட்டும், இன்று புலம் பெயர்ந்த தமிழர்களால் முன்னெடுக்கப்படும் பொதுசன வாக்கெடுப்பின் முன்னெடுப்பானதும் காட்டி நிற்கின்றன. இப் பொதுசன வாக்கெடுப்புப் போராட்டமானது அறநெறி அரசியல் பேசும் சர்வதேச அரசுகள் உண்மையில் சனநாயகத்தை மதிக்கின்றனவா? இல்லையா என்பதைக் காட்டித் தரத்தான் போகின்றன.
இந்தியா-ஈழத்தமிழர் பாதுகாப்பும் ஒரே நேர்கோட்டிலேயே இருக்கின்றன. இந்தியா இல்லாமல் தமிழர்களுக்கு ஓர் தீர்வு இல்லை என்பதைத் தமிழர்கள் நாம் அறிந்து கொண்டுள்ளோம். ஈழத் தமிழர்கள் தான் இந்தியாவின் உற்ற நண்பர்கள் என்பதை இந்தியாவும், மேற்குலகமும் புரிந்து கொள்ளும் காலம் வெகுதொலைவில் இல்லை. சீனாவின் முக்கோண ஆக்கிரமிப்பினுள் முழுமையாகச் இந்தியா சிக்காது இருக்கவும், உலக அமைதிக்கும் இலங்கையின் வடக்கும், கிழக்கும் தமிழர்கள் தன்னாட்சிக்குள் வரவகை செய்வதே இந்தியாவும், மேற்குலகமும் தர்மத்திற்கு செய்யும் தலையாய கடமையாக இருக்கும். அவ்வாறில்லையேல் இயற்கை தன் தர்மத் தீர்ப்பைத் தானே வழங்கும்!




No comments:
Post a Comment