மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களும்! மலிந்த அரசியல் செயல்களும்! முகுந்தமுரளி
ஐக்கிய நாடுகள் சபையின் பொறிமுறை நோக்கிய நெறிமுறை அரசியலை பரிந்துரைக்கும் அரசுகள் மூலோபாய அரசியலையே கடைப்பிடித்து வருவகின்றன. நாடுகளின் நலன்கருதிய ஐக்கிய நாடுகள் சபையானது, நாடற்ற இனமாகிய தமிழர்கள் நலன் கருதாது. ஏனெனில் இப்பொறிமுறையினால் நீதி மற்றும் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காலங்களைக் கடத்தும் பொழுதே ஈழத் தமிழினத்தின் இருப்பு திட்டமிட்டபடி அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. 2031 ஆம் ஆண்டளவில் இலங்கையில் தமிழர்கள் மட்டுமே சிறுபான்மையினர் எனும் சமுதாய மருத்துவ நிபுணர் வல்லிபுரநாதனின் எச்சரிக்கையை நாமிங்கு கருத்தில் கொள்ளவேண்டும்.UNHRCயினைத் தளமாகப் பயன்படுத்தும் அதேவேளை எமக்கென்று ஓர் தெளிவான பாதையை நாம் வகுக்கவேண்டும். பூகோள அரசியல் நிலைகளுக்கேற்ப தமக்கென்று ஒரு மூலோபாயக் கொள்கையை வகுத்து பொதுஎதிரி செயற்படும் பொழுது ஈழத்தமிழர் எங்களுக்கான மூலோபாயக் கொள்கையை உருவாக்கி நாடுகளுடன் ராஜதந்திர உறவுகளை வளர்த்துக் கொள்ளாவிட்டால் பலமிழந்தவர்களாக அழிந்துவிடுவோம்.
தமிழ் மக்கள் அரசியல் விடுதலை அடைய, உரிமையை மீட்க எரிக் சொல்ஹெய்ம் தமிழர்களுக்குக் கொடுத்த ஆலோசனைகள் மூன்று. 1. தமிழ் மக்கள் ஐக்கியப்பட்டுப் போராட வேண்டும். 2. அகிம்சை வழியிலேயே போராடவேண்டும். 3. இந்தியாவை அணுகவேண்டும். இப்பரிந்துரை ஊடாகப் புரிந்துகொள்ள வேண்டியது தமிழ் மக்களினுடைய போராட்டம் இந்திய-மேற்குலகின் ராஜதந்திரத் தேவையாக இருக்கின்றது. இலங்கை தங்களுடைய கட்டுப்பாடுகளை மீறி நடக்கின்ற பொழுது இலங்கையினுடைய அரசியலைக் கட்டுப்படுத்த தமிழ் மக்களுடைய வாழ்க்கையும், கண்ணீரும், இரத்தமும் தேவையாக இருக்கின்றது.
இருதரப்புப் பேச்சுவார்த்தை என்று தமிழர்களின் நிழல் அரசை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தமொன்றினூடவே யுத்தநிறுத்தமும் அதைத் தொடர்ந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஊடாக தமிழ்மக்களின் பிரச்சனைக்குத் தீர்வுகாணவென்று மேற்குலகம் உள்நுழைந்தது. இலங்கை அரசு ஒப்பந்தத்தை முறித்து வெளியேறியும் கண்டிக்காமல் விட்டது. மாறாக இருதரப்பும் சமவலுவுடன் இருந்த பொழுது தீர்க்கமுடியாத பிரச்சனையை, மனிதாபிமான யுத்தம் என்ற போர்வையூடாக தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடிய போராளிகளை பயங்கரவாதிகளென அழித்ததொழித்தது. யுத்தம் நடந்து முடிந்ததும் தமிழ் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வு என்று சொன்னவர்கள் இன்றுவரை அரசியல் தீர்வுபற்றி என்ன முடிவு செய்தார்கள்? யுத்தக்கண்காணிப்புக் குழுவொன்றை அமைத்து ஒரு மனிதப்பேரவலத்திற்கே வழிவகுத்த இந்த ஐக்கிய நாடுகள் சபை, ஒரு மிகப்பெரும் இனப்படுகொலையை சிறீலங்கா அரசு நடத்திய பின்னரும்; மென்போக்கு அணுகுமுறை கடைப்பிடிப்பதன் மர்மம் என்ன? இலங்கை ருNர்சுஊ தீர்மானங்களை ஏற்பதும் விலகுவதுமாகக் காலங்கடத்தும் தந்திரங்கள் சொல்வது என்ன? போர்க்குற்றம், மனித உரிமை மீறல் போன்றவற்றிற்கு மேற்குலகநாடுகளிடம் போதிய ஆதாரங்கள் கைவசம் இருந்தும் இழுத்தடிப்புச் செய்வதன் சூழ்ச்சிகளைப் புரிந்தவர்களாகவே சாமன்ய தமிழ் மக்கள் இன்று தெளிவாக இருக்கின்றார்கள்.
தன்னார்வப் போரட்டங்களுக்கு மக்கள் கொடுத்த பேராதரவும் எழுச்சியும் கண்டு விழிப்படைந்த இந்திய-மேற்குலகம் காந்தி வழியிலேயே போராடவேண்டும் என்பதை ஊக்குவிக்கும் முகமாகவும், மிகத் தத்ரூபமாக அண்மையில் இலண்டனில் நடந்த அகிம்சை வழிப்போராட்டமும் இலண்டன்-இந்திய உளவுத்துறைகளின் தூண்டுதலின் பின்னணியில் கையாளப்பட்டது.
“போராடும் உரிமை அனைவருக்கும் உண்டு. அதை தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை.” இவ்வாறு கூறிக் கொண்டு போராட்டத்தையே சீரழிக்க முற்படும் மலிந்த துரோக அரசியல் செயல்பாட்டாளர்களும் நம்மத்தியில் இருந்து வர்த்தக ஊடகங்களினூடாக ஆய்வாளாராகவும், அறிஞர்களாகவும் கருத்துச் சிதறடிப்பில் கவனம் செலுத்துகின்றனர். விமர்சனத்தை விமர்சிப்பது மரபும் அழகும் கூட. ஆனால் மாறாக விமர்சகரையே குறிவைத்து சினங்கொண்டு தாக்குவதன் உள்நோக்கம் என்ன? தன்னினஉண்ணி போன்ற தகாத வார்த்தைகளைக் கொண்டு தனிமனிதர்களைத் தாக்கும் இந்த விமர்சனங்களின் அறமற்ற சீற்றமானது, உண்மையை மக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்துபவர்கள் மேல் கொண்டுள்ள காட்டத்தையே காட்டுகின்றது. அதிலும் பிரபலமான ஒரு ஊடகவியலாளரின் சீடர் இவ்வாறு தரக்குறைவான விமர்சனத்தில் ஈடுபடுவதும், ஒரு முற்போக்குச் சிந்தனையாளர் மேல் இவ்வாறன பிற்போக்குத்தனமான தாக்குதல்கள் மேற்கொள்வதும் எதனால்?
இலட்ச நோக்குக் கொண்ட வியாபாரிகளின் ஊடகங்களால் நிரப்பப்படும் தமிழ் ஊடகப்பரப்பில் இலட்சிய நோக்குக் கொண்ட ஊடகங்களோ விரல்கொண்டு எண்ணும் அளவிற்கே காணப்படுகின்றது. புலிகள் செய்த மடமை வேலையால்தான் தமிழ் மக்களுக்கே விடிவுகிடைக்கவில்லை என்றும், விடுதலைப் புலிகள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டார்கள் என்றும்; சொல்லும் நபர்களைத்தான் “முட்டாள் கூட்ட புத்தி ஜீவிகளாக” வைத்துக்கொண்டுள்ள சர்வதேச சமூகமும், இந்த வியாபார ஊடகங்கள் ஊடாக சட்டப்பையை நிரப்பும் அரசியல் விமர்சகர்களினூடாகவும் குழப்ப முற்படுகிறார்கள்.
கடந்த சிலவருடங்களுக்கு முன்பு “ராஜீவ் காந்தி கொலைக்கும், புலிகளுக்கும் தொடர்பில்லை என விடுதலைப்புலிகள் என்று அறிக்கை விட்டு இதே வர்த்தக ஊடகங்களினூடாக பிரபலமான ஒருவர் இன்று தமிழர் இயக்கம் என்று ஐ.நாவை நோக்கிய செயற்பாடுகளுக்கு அறிவுரை கூறுவதாவது இவர்கள் ஒரு மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் செயல்படுத்தப்படும மலிந்த அரசியல் செயற்பாட்டாளர்கள் என்பதையே காட்டுகின்றது. இயக்கம், நடுவம் என்று பல பல புதிய அமைப்புக்கள் தற்சமயம் புலம் பெயர் தேசத்தில் உருவாகுவதன் பின்னணிகள் பற்றி மக்கள் ஆய்ந்துணர வேண்டும்.
நாடுகடந்த தமிழீழ அரசின் போக்கும் செயலும் மூலோபாயக் கொள்கையுடன் கூடிய ராஜதந்திர உறவுகளினூடான அரசியல் செயல்பாட்டினை பிரதமர் உருத்திரகுமார் அவர்களின் அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. ஆயினும் அவரைக் கூட கடும்போக்காளர் என்று விமர்சிப்போரும் நம்மத்தியில் இல்லாமல் இல்லை. கனடியத் தமிழர் தேசிய அவையினரும் கொள்கையில் உறுதியும் தெளிவுடனும் செயற்பட்டுக் கொண்டிருந்தாலும் கடும் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டே வருகின்றனர். இவை யாவும் தாண்டி நாம் பலங்கொள்ள, கொள்கையில் ஒற்றுமையுள்ள அமைப்புக்கள் ஒன்றிணைந்த தேசியம் எனும் ஒரே கூரையும் காலத்தின் அவசியம்.
கனடாவில் எம்மினத்தின் விடிவுக்காக நாம் போராடத் தடையில்லை என்றபோதிலும் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலினூடாக தமிழர்களின் அரசியல் உரிமைகள் மீதான தடையாகவே எங்கள் முதுகில் பெரும் பாறங்கல்லாக வைக்கப்பட்டுள்ள “விடுதலைப் புலிகள்” மீதான தடையானது காணப்படுகின்றது. தமிழினத்தின் மீதான இக்கருமுகிலானது பொது எதிரியின் பொய்ப்பரப்புரைகளுக்குக் கூட பதிலளிக்க முடியாத நிலையில் எங்கள் குரல்வளையை நசுக்குகிறது. சமூகவலைத் தளங்களில் கூட எம் உரிமைகளைப் புறந்தள்ளுகிறது. எமது தேசியக் கொடியை எங்கள் மக்கள், போராட்டங்களில் பயன்படுத்தினாலே மக்கள் போராட்டங்களை விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களால் நடத்தப்பட்டது என்று குறுக்குவதற்கும் வழிவகுக்கிறது. முதலில் இந்நிலையை தகர்த்து எமது அரசியல் உரிமையை வென்றெடுப்பது கனடாத் தமிழ் மக்கள் மற்றும் தமிழரசியல் அமைப்புக்களினதும் கடமையாகும்.



No comments:
Post a Comment