Thursday, 4 March 2021

 தோல்விக்காட்டில் வெற்றிப்புதையல் !    முகுந்த முரளி 

ஈழத்தமிழினத்தின் விடியலுக்கான போராட்டமோ தோல்விக்காட்டில் வெற்றிப் புதையலைத் தேடிக் கடினமான பாதைகளில் பயணிக்கிறது. விடியாத இருளினிலே தொடர்ந்தும் துன்பத்திற்கும் ஏமாற்றத்திற்கும் ஆளாகுவது தாயக மக்களே. இந்நிலையில் தாயகம் மற்றும் புலம் பெயர் தேசத்தில் இருக்கும் சிந்தனையாளர்களினாலும், அரசியல் விமர்சகர்களினாலும்  புலம் பெயர் தமிழர்களின் போராட்டங்களும், எழுச்சிகளும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுவது தவிர்க்க முடியாததே!  

விமர்சனங்கள் காலத்தின் சாரளங்களே! அவை நம்மை நாமே சீர்திருத்த உதவி, உத்வேகம் அளிக்க வல்லவை. எதிர்ப்பு அரசியலையே நாம் இன்றும் நடத்துகின்றோம். அதனால் எம்மை அறியாது நாம் ஒரு நிகழ்ச்சிநிரலுக்குள் சிக்கிவிடுகின்றோம். எனவே இதைத் தவிர ஒரு சரியான அரசியல் அணுகுமுறையை நாங்கள் கையாளவில்லை என்பதனையே காலத்தின் சாரளங்கள் காட்டுகின்றன.  

இலங்கை தமிழ்மிரர் பத்திரிகையில் 19.08.2015 அன்று ஆசிரியர் தலையங்கம்; புலம்பெயர் வாழ் தமிழர்கள் கவனத்திற்கு என்று வெளிவந்தது. புலம்பெயர்ந்து வாழும் நம் சொந்தங்கள், கள யதார்த்தத்தினைப் புரிந்து கொள்ளாமல் தமக்குள் தாங்களே மண்ணை வாரிக் கொட்டும் நிலைப்பாட்டினால் ஏற்படும் பின்னடைவுகளையும், களத்திலிருக்கும் சொந்தங்களைச் சுயமாகச் சிந்திக்க விடவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி பத்திரிகாசிரியர் ப.மதனவாசன் எழுதியிருந்தார்.   

“புலம் பெயர்ந்த சொந்தங்களிடம் தாயக உணர்வு அதிகமாகக் காணப்படுவது சகஜமானதே. ஆனாலும் அந்த உணர்வு என்பது வெறித்தனமாக வெளிப்பட வேண்டும் என நினைப்பதனூடாக இராஜதந்திரச் சிக்கல்களில் மாட்டிக் கொள்கின்ற துர்ப்பாக்கிய நிலையும் ஏற்படுகின்றது என்பதை அனுபவ ரீதியாகப் பலரும் உணர்ந்திருக்கிறார்கள். எனவேதான் இந்நிலையினை மாற்றி, ஜனநாயக வழியில், இராஜதந்திரத்துடன் நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற சாணக்கியம் பற்றித் தாயக மக்கள்  கருத்திற்கொள்கிறார்கள். ஆகையால் தாயகத்தோடு ஒத்துப்போகும் சிந்தனைகளை, புலம்பெயர் தமிழர்கள் நிலை நாட்டுவதே காலத்தின் தேவையாக இருக்கின்றது என்பதனையே நன்குணரவேண்டும்.” இவ் வேண்டுகோளை நாம்  கருத்தில் கொள்ளவது அவசியமாகிறது. 

அனைத்துலக ஆட்சியாளர்களின் அறப் பிறழ்ச்சி 

வணிகம் செய்ய வந்த மேற்குதேசத்தவர்கள் ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றி சுரண்டிச் செல்வளம் கண்டும், சூழ்ச்சி வலைகளைப் பின்னிப் பிரித்தாளும் தந்திரங்கைளை உருவாக்கி இன்றுவரை அதைத் தங்களது மூலோபயமாக வைத்து வர்த்தக நலன் பேணி அதிகார-ஆதிக்கம் புரிகின்றனர். மக்கள் நலன்களைப் பற்றிச் சிறிதளவும் அக்கறையற்ற நகர்வாகவே கூட்டுக்கொள்(ளை)கை நாடுகள் நாடகமாடுகின்றன. பூகோள அரசியலில் நாடுகள் அனைத்தும் தமது நலன்களை மையமாக வைத்தே  நிகழ்வுகளை கையாள்கின்றன. 

இதில்; கனடாவும் விதி விலக்கல்ல. அருகிலுள்ள வல்லாதிக்க அரசின் உற்ற நண்பனே கனடா. எங்கள் கண்மூடித்தனமான போராட்டங்களும்,  விண்ணப்பங்களும் கனடாவின் வெளியுறவுக் கொள்கையில் எந்தவிதமான மாற்றங்களையும் கொண்டுவரப்போவதில்லை. மாறாக எங்கள் போராட்ட அணுகுமுறைகள் சரியான முறையில் கலந்தாலோசிக்கப்பட்டு அரசியல் ராசதந்திர நகர்வாக முன்னெடுக்கப்படல் வேண்டும். ஆனால் நாமோ எதிர்ப்பரசியல் செய்வதன் மூலம் ஐ.நாவை நோக்கிய நாடகத்தில் ஓரங்கமாக, விiளாயாடப்படும் பந்தாக சர்வதேச களத்தில் அடிபட்டு போய் தோல்வி காண்கிறோம். 

உலகபயங்கரவாதமும் அதன் சூட்சமங்களும்









“உலக வர்த்தக மையம் மீது தொடுக்கப்பட்ட 9ஃ11 தாக்குதலின் பின்னணியில்இருந்தது இஸ்ரேல்தான். அமெரிக்க மக்களுக்கு இது ஐயமின்றித் தெரியவரும் பொழுது இஸ்ரேல் இருந்த இடம் தெரியாமல் நிர்மூலமாகிவிடும்”;.  இவ்வாறாக அமெரிக்கக் கடற்படைத் துறை நிபுணரும், அமெரிக்க தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான நிபுணத்துவம் பெற்ற ஆய்வாளரும், பிரபல எழுத்தாளரும் ஆகிய அலன் சப்ரோஸ்கி 100 விகிதம் இஸ்ரேலிய மொசாட் இதன் பின்னணியில் இருப்பதை தான் உறுதிப்படுத்திக் கொண்டதாக 2010 ஆம் ஆண்டு கூறியுள்ளார். 

இவ்வாறான பின்னணியில் கொண்டுவரப்பட்ட உலக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் விடுதலைக்காகப் போராடிய ஒரு இனமும், விலைபோகாத அதன் தலைமையும் அழித்தொழிக்கப்பட்டது. அமெரிக்காவும், ரஷ்யாவும், சீனா-இந்தியா-பாகிஸ்தான் என எதிரிகள் எல்லாம் ஒருங்கிணைந்து தங்கள் வர்த்தக மேலாதிக்கப் போட்டியின் தடைக்கற்கள் என்று தாம் கருதிய நேர்மை மிகு தர்மத்தின் தலைமையை அழித்தொழித்தன. இத்தருணத்தில் இலங்கையின் இனவெறியரசு தங்கள் ராசதந்திர நகர்வைச் சரிவரப் பயன்படுத்தியமையும் கருத்திற் கொள்ளவேண்டும். 

  வணிக சமூகம் எவ்வாறு சுயலாப நோக்கோடு செயல்படுமோ, அதேபோல்தான் பூகோள அரசியலானதும் வர்த்தக இலாப நோக்கோடு செயற்படுகிறது. அதன் விளைவாக  சுயலாபநோக்க வல்லாதிக்க அரசுகளின் மோதல்களாகவே இருக்கின்றது. ஐ.நா என்பதும் மனித உரிமைகள் என்பதும், இனப்படுகொலைப் பாதுகாப்பு என்பதும் அடக்குவதற்கும், ஆளுவதற்கும், ஒப்பந்தங்களுக்குள் இலங்கை போன்ற நாடுகளை மசியவைப்பதற்குமான ஆயுதங்களாக பயன்படுகின்றனவே தவிர இனப்படுகொலையில் மக்களைப் பாதுகாக்கவுமில்லை, ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படும் மக்களுக்கான தீர்வு எதையுமே தந்துவிடப் போவதுமில்லை. 

இவ் 46 ஆவது கூட்டத்தொடரில்   இனப்பாகுபாடு கொண்ட தேசம் என்பதை மனித உரிமை சபை முற்று முழுதாக ஏற்று கொண்டுள்ளாலும், கூட்டுநாடுகளின் அறிக்கை தொடர்ச்சியாக இலங்கை அரசினால் இது வரை செய்யப்பட்டவற்றிற்கு நன்றியும் வாழ்த்துக்களும் சொல்வதுடன்  இன்னும் செய்ய வேண்டியவற்றிற்கு பரிந்துரைகளும் கேட்டுக் கால இழுத்தடிப்பு நாடகம் நடத்துகின்றன. கூட்டத் தொடர் நேரங்களில் தமிழர்களின் ஐ.நாவை நோக்கிய போராட்டக் கலாச்சாரக் காய்ச்சல்களும் குறைவின்றித் தொடரும். இதற்கு மாறாக தோல்விகளில்  இருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டுள்ள நம் மக்களினதும் செயற்பாட்டாளர்களதும் சிந்தனைகளில் மாற்றம் வேண்டும். வெறும் கண்டன ஆர்ப்பாட்டங்களும், பெட்டிசன்களுமல்ல போராட்டம். அதற்கும் அப்பால் அறிவுபூர்வமாகச் செயல்படல் வேண்டும். 



இலங்கையைக் கடன் பொறிக்குள் தள்ளிக் கபட நாடகமாடும் சீனா அதை மறுதலித்திருந்தாலும், கோட்டபாய தாங்கள் இப்பொறியில் சிக்கவில்லை என்று கூறினாலும் உண்மை அதுவல்ல. சீனா இலங்கையை ராசதந்திரமாக ஏதோ ஒரு வகையில் தனது பொருளாதார வலைக்குள் வீழ்த்துவதையே இலக்காகக் கொண்டிருப்பது வெள்ளிடைமலை.  அதேவேளை இந்தியாவுக்கு எதிரான இலங்கையின் போக்கினால் ராசதந்திரரீதியாக அவமானப்படும் இந்தியா ஒரு புறமும்,(SIS) இலங்கைத் தேசியப் புலனாய்வுத்துறையின் பின்னணியில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிய கால்நடைப் பயண ஆரம்பத்தில்  இந்தியாவையும், “றோ”வையும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி இந்திய எதிர்ப்பு வாதத்தின் மூலம் சிங்கள மக்களுக்கு உற்சாகமூட்டிய கோடாரிக் காம்பு “ஆவா” அருண் சித்தார்த்தின் ஆகாப் பேச்சு மறுபுறமுமாக காலம் கரைகிறது. 
  இவ்வாறான புறச் சூழ்நிலைகளைக் கணிப்பில் கொண்டு தமிழர் தரப்பு ஒன்றுபட்டு நமக்கென்று ஒரு வெளியுறவுக் கொள்கையை வகுத்து சரியான அரசியல் அணுகுமுறையை கடைப்பிடிப்பதே காலத்தின் தேவையாகும். இதற்கான தார்மீகப் பொறுப்பு நாடுகடந்து வாழும்  தமிழீழக் குடிமக்கள் அனைவருக்கும் உரியதே! 

No comments:

      முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்லர்..!             முகுந்தமுரளி உலகப் பொதுப் புத்தாண்டு வாழ்த்து உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும். 1.1....