Thursday, 25 February 2021

 விடாக் கண்டனும், கொடாக் கண்டனும்!

முகுந்தமுரளி

இலங்கைத் தமிழர்கள்; விடயத்தில் இந்தியாவின் வகிபாகம் மிகவும் பிரதானமானது. 1983 ஆடிக் கலவரத்தைத் தொடர்ந்து  5 இலட்சம் தமிழர்கள் புலம்பெயர்ந்தனர். இந்தியாவிலும், மேற்குலகம் நோக்கியும் அகதிகளாகச் சென்று தஞ்சம் புகுந்தனர். இனக்கலவரத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள்  கொல்லப்பட எஞ்சியோர் “தாய்நாட்டு அகதிகளாக” வடக்குக்கும் கிழக்குக்கும்  அனுப்பப்பட்டனர். தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொப்புள்கொடி உறவுகளான தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் பெரும் எழுச்சியை உருவாக்கி ஆர்ப்பாட்டங்களும், மறியல் போராட்டங்களும் கட்சி வேறுபாடுகள் இன்றி தொடர்ந்து நடந்தன. இதன் விளைவாக இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியா தலையிட நிர்பந்திக்கப்பட்டது. எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் உடனடியாகத் இந்தியாவைத்  தலையிடும் படியும், இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க ஐ.நா. அமைதிப்படை அனுப்பட இந்தியா அரசு வலியுறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வற்புறுத்தி நின்றார்.  

       தமழிர்கள் மீதான பௌத்த சிங்கள இனவெறியர்களின் வன்முறையின் கொடுமை இந்திராகாந்தி அவர்களை மிக ஆழமாகப் பாதித்தது. இந்திரா காந்தி முதன்முறையாக “இலங்கையில் நடப்பது இனப்படுகொலை (Genocide) அதைப்பார்த்துக் கொண்டு இந்தியா சும்மாயிராது.” என எச்சரித்தார். வரலாற்றில் மிக முக்கியமான இக்கட்டத்தில்  இந்திரா காந்தி அவர்கள் இருவகையில் தலையிடுவதற்கு முடிவெடுத்துச் செயற்பட்டார். ஒன்று வெளிப்படையாக இலங்கை அரசுடன் இராசதந்திர முயற்சிகளை மேற்கொள்வது மற்றையது மறைமுகமாகத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு பயிற்சிகளும், உதவிகளும் கொடுத்து வலுப்படுத்துவது. ஆயுதப்போராளிகளின் மூலம்  இராணுவரீதியான அழுத்தத்தை இலங்கை அரசுக்கு ஏற்படுத்தி இனப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வு காண்பது என்பதாகும். 

                      வங்காளதேசம் பாகிஸ்தானிடம் இருந்து பிரிந்து தனியரசாக இந்திராகாந்தி எப்படிக் காரணமாயிருந்தாரோ அதேபோல் தமிழர்களுக்கு தனியரசை ஏற்படுத்திக் கொடுத்துவிடுவார் எனும் அச்சம் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவிற்கு இருந்தது. ஜெயவர்த்தனாவின் இந்த அச்சம் பற்றி இந்தியத் தூதுவர் திக்சீத் குறிப்பிடுகையில் “இந்திராகாந்தி உயிரோடு இருந்திருப்பாராயின் 1985 இலேயே இலங்கையை இருநாடுகளாகப் பிரித்து இருப்பார்” என  ஜெயவர்த்தனா அச்சம் தெரிவித்தார் எனக் கூறியுள்ளார். 

 1984.10.31  “ஈழத் தமிழ் மக்கள் தாயாகப் பார்த்த அன்னை இந்திரா காந்தி”யின் மறைவைத் தாங்கமுடியாது துடித்த காட்சிகளும் ஈழத்தில் தான் மரணவீடு நடப்பது போன்ற களச் சூழந்நிலையுமாகக் காட்சியளித்தன. அன்னை இந்திராகாந்தியின் மறைவுக்குப் பின்னரான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைளில் ஏற்பட்ட மாற்றங்களினால் சிறீலங்கா அரசுடனான இந்தியாவின் மென்போக்கு இராசதந்திர நகர்வுகளும் தொடர்ந்தும் தோல்விகளையே சந்தித்துக்கொண்டிருக்கின்றது. 

கொவிட்-19 இற்குரிய தடுப்பு மருந்தை இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட பின்பு, கொழும்புத் துறைமுக கிழக்கு முனையத்திற்கான உடன்படிக்கையை இலங்கை இரத்து செய்துள்ளமை, அவ்வாறே இலங்கை மத்திய வங்கி இந்தியா வழங்கிய சலுகைக்கடனை மீளவழங்கியமை அதேநேரம் சீனாவிடமிருந்து மேலும், அதிக கடனைப் பெற்றுக் கொண்டமை, திருகோணமலை எண்ணைக்களஞ்சிய விவகாரம்; , வடக்கின் முத்தீவுகள் விவகாரம் என இவை அனைத்துமே இந்தியாவின் தோல்விகளாகவே அமைகின்றன. இவ்வாறாக  தற்பொழுது தம்மைப் பலவான் மனோநிலையில் கருதும் வம்ச ஆட்சியை வலுப்படுத்த உறுதிபூண்ட ராஜபக்ச குடும்பம்  கடைப்பிடிக்கும் இந்தியாவுடனான கடும்போக்கானது விடாக்கண்டன், கொடக்கண்டன் கதையாகவே நகர்கிறது. சீனாவிலுள்ள ஏககட்சி ஆட்சிபோல எதிர்காலத்தில் ஒரு ஏககட்சி ஏக குடும்ப ஆட்சியை, சீனாவின் உதவியுடன் இலங்கையில் உருவாக்க  இலங்கையை இராணுவ மயமாக்கி வரும் அதேவேளை இறுமாப்புடனும் இக்குடும்பம் நடந்துவருகின்றது.  


இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் பிராந்திய ரீதியில் சகார் SAGAR (Security And Growth for All in the Region) எனும் திட்டமானது தெற்காசிய நாடுகளுடனான உறவு இந்தியாவின் பாதுகாப்பை பொறுத்து முதலிடம் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தியது.  ஆனால், தெற்காசியப் பிராந்திய நாடுகள் சீனாவுடனான நட்புறவைப் பலப்படுத்தியதுடன், இந்தியாவின் சகார் திட்டத்திற்கு முன்னும் பின்னும் சீன நட்பைப் பலப்படுத்திக் கொண்டுள்ளதை அவதானிக்கும் போது இந்தியாவின் பிராந்திய ரீதியான இராசதந்திரம் தொடர் தோல்வியடைவதாகவே  ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். 

அன்றைய பிரிட்டிஷ் - இந்தியாவின் பாதுகாப்பு வலயங்கள் அனைத்தையும் இன்றைய சுதந்திர இந்தியா பறிகொடுத்துள்ளது. இந்தியாவுக்கு ஆபத்தான பகுதிகளான இந்தியாவின் வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளாகும். இவையாவும் சுற்றிவளைக்கப்பட்டு மிஞ்சியிருந்த தென்பகுதியையும் தற்போது முழுமையாக இந்தியா இழந்துள்ளது. இதில் இலங்கையில், இந்தியாவுக்கு ஏற்பட்டுவரும் நெருக்கடியானது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஒரே வாய்ப்பாக இருந்த தென்பகுதியும் சீனாவின் அச்சுறுத்தலுக்குள் தள்ளப்பட்டுள்ளது. ஏறக்குறைய சீனாவின் உபாயங்களால் இந்தியா முழுமையாக சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் பாதுகாப்புக்கான எல்லையாகக் காணப்படும் “இலங்கை” இந்தியாவுக்கு எதிரான சக்திகளிடம் சென்றுவிடும் என்பதற்காகவே உருவானதே இலங்கை - இந்திய உடன்படிக்கை. அப்போது அமெரிக்காவிடம் சென்றுவிடும் என்ற அச்சம் இந்திய ஆளும் வர்க்கத்திடம் காணப்பட்டது. ஆனால், இன்று இந்தியாவுடனான மேற்குல உறவில் ஏற்பட்ட மாற்றத்தினால் அதற்கான சூழல் ஒன்றுக்கான வாய்ப்பு தென்படுவதாகவோ அல்லது இலங்கை - இந்திய உடன்படிக்கையை மீள உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்போ தென்படுவதாகத் தெரியவில்லை. 

அன்று  அமெரிக்கா திருகோணமலையைத் தான் இலக்கு வைத்திருந்தது. இன்று சீனா இந்தியாவுக்கு அருகிலுள்ள தீவுகளை இலக்கு வைத்துவிட்டது. ஏறக்குறைய இந்தியாவின் வாசலை சீனா எட்டிவிட்டது எனக் கருதலாம். தெற்காசிய நாடுகள் அனைத்துமே இந்தியாவின் நெருக்கமான நட்புறவிலிருந்து விலகியுள்ளன. அதிலும் இலங்கை முழுமையாகவிலகியுள்ளதானது  இந்தியாவின் இருப்பை பாரியளவில் பாதிப்பதாகவே தெரிகிறது. 

 கடந்தகால இந்திய வெளியுறவுக் கொள்கைகளின் அடிப்படையில் இலங்கைத் தமிழ் இளைஞர்கள் கரங்களில் ஆயுதத்தைக் கொடுத்து பயிற்சிகளையும் வழங்கிய இந்திரா காந்தி அம்மையாரின் ராஜதந்திரக் கொள்கைகள் போல் இன்று  இந்திய அரசு இலங்கைத் தமிழரை மீளவும் அகிம்சை வழியாக பயன்படுத்துவதற்கான சூழலை உருவாக்கி ஆட்டத்தை நகர்த்துவதாகத் தெரிகிறது. இதையே யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்பு மற்றும் பொத்துவில் முதல் பொலிகண்டிவரையான போராட்டங்கள் பிரதிபலிக்கின்றன. யாருடையதோ நிகழ்ச்சிநிரல் ஆனால் எம்மால்தான் அது நடத்தப்படுகின்றது என நாம் நம்புகின்றோம். யதார்த்தமானது சூட்சும நிகழ்ச்சி நிரல்களை வெளிப்படுத்துகிறது. ஆனால் உண்மையைச் சொன்னால் வெகுசன விரோதியாகவே கருதப்படுவோம் எனும் அச்சத்தில் பலர் எழுதுமுனைகள் மழுங்கிவிடுகின்றன. போராட்டங்களில் பங்கெடுக்கும் மக்களின் உண்மையான சத்தியமான எழுச்சி, சூழ்ச்சி வலைகளின் சூத்திரதாரிகளுக்கு ஆதாயம் தரும் நிகழ்ச்சி நிரல்களாகவே மாற்றி அமைக்கப்படுகின்றன. போலித் தலைமைகளும் பொங்கி எழுகின்றன. வக்கற்ற தலைமைகளால் போராடும் மக்களுக்குத் தெரியாமலே அவர்கள் சார்பில் மனுக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இலங்கை உளவுத்துறையின் நிகழ்ச்சி நிரலில்  ஆவா குழுவின் ஆர்ப்பாட்டமானது யாழில் நடைபெற்றது. சூழ்நிலை வரம்பு மீறினால் மீண்டும் வன்முறை கட்டவிழ்த்து விடப்படலாம். தமிழர்கள் மீது தமிழர்களை வைத்தே வன்முறை நிகழ்த்தப்படலாம், எனும் எச்சரிக்கையாகவே உற்றுநோக்க வேண்டியுள்ளது.    

தென்னிலங்கை எப்பொழுதோ சீனாவின் கைப்பிடிக்குள் சிக்கிவிட்டது. வட இலங்கையும் சிக்கமுன் தமிழினப் படுகொலைத் தவிர்ப்பு என்பதும் ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பதும் இந்தியாவின் பாதுகாப்பு என்பதும் வடக்குக் கிழக்கு இணைப்பல்லாமல் மாறாக வடக்கு கிழக்கை நிரந்தரமாகச் சிறீலங்காவில் இருந்து பிரித்து தமிழர்களுக்கான தனி அரசை உருவாக்குவதே என்பதை இந்திய மேற்குலக கொள்கை வகுப்பாளர்களும், இந்திய- மேற்குலக அரசியல் தலைவர்களும் புரிந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை. 





No comments:

      முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்லர்..!             முகுந்தமுரளி உலகப் பொதுப் புத்தாண்டு வாழ்த்து உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும். 1.1....