கேள்வியின் நாயகரே….. முகுந்தமுரளி
ஆளும்; கட்சி (லிபரல்) பாராளுமன்ற பிரதிநிதி கரி. ஆனந்தசங்கரி அவர்களுக்கு ஓர் திறந்த மடல்…
அன்பின் தம்பி உங்கள் மேல்; நம்பிக்கையும், மதிப்பும் கொண்டே இக்கடிதத்தை வரைகின்றேன். உங்கள் மேல் குற்றப்பத்திரிகை சுமத்துவதல்ல இம்மடலின் நோக்கம். ஏக்கத்துடன் எம் தேசிய இனத்திற்கான விடிவு கிடைக்காதா என ஏங்கும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்தேசத்து தமிழர்களில் ஒருவனாகவே நான் எழுதுகிறேன்.
2015 இல் செப்ரம்பர் இரண்டாம் வாரம் வெள்ளிக்கிழமை கனடா லிபரல் கட்சியினரால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், “இலங்கையில் நீதி தேடுவதில் கனடா தனது பங்கைச் செய்கிறது என்பதை உறுதிப்படுத்த சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்ற உறுதிபூண்டுள்ளது. மேலும் போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றில் ஈடுபட்ட குற்றவாளிகளை விசாரிக்கவும், வழக்குத் தொடரவும் உலகளாவிய அதிகார வரம்பைப் பயன்படுத்துவதும் இதில் அடங்கும். இலங்கை ஆயுதப்படைகளுக்குள் கட்டளை சங்கிலியின் ஒரு பகுதியாக இருந்தவர்களுக்கு எதிராக பயண தடையை நாங்கள் செயல்படுத்துவோம்.” எனத் தெரிவித்து இருந்தனர்.
“போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இலங்கையில் இனப்படுகொலை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பதில்களுக்காக நீண்ட நேரம் காத்திருக்கிறார்கள்" என்று இன்று தற்பொழுது கனடா வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ (Notre-Dame-de-Grace – Westmount பாராளுமன்ற உறுப்பினர்) அன்று லிபரல் வேட்பாளர்களில் ஒருவராக கூறினார். அவர் மேலும் “இந்த அறிக்கை, முதன்முறையாக, இலங்கையில் பொறுப்புணர்வு மற்றும் அமைதிக்கான பாதையில் சில நம்பிக்கையை அளிக்கிறது. சாட்சிகளின் கதைகளுடன்- மற்றும் அனைத்து முரண்பாடுகளையும் துணிச்சலுடன் முன்வைத்தற்காகவும், சில சமயங்களில் அசாதாரணமான அபாயங்களைக் கேட்கவும், அதனால் நீதி கிடைக்க முடியும் என்பதற்காக நாங்கள் பாராட்டுகிறோம். ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் லிபரல் கட்சியானது, நீண்ட காலமாக பொறுப்புக்கூறல் என்பது இலங்கையில் நீடித்த அமைதிக்கு ஒரு முன்னோடி என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உயிர் பிழைத்தவர்களுக்கும் நீதி வழங்கப்படுவதற்கான ஒரு முக்கிய தொடக்க புள்ளியாகவும் உள்ளது, ஐ.நா. அறிக்கையால் நாங்கள் ஊக்குவிக்கப்படுகிறோம், இது இலங்கை அரசிலிருந்து சுயாதீனமாக இருக்கும் சர்வதேச அளவில் கட்டாயப்படுத்தப்பட்ட பொறுப்புக்கூறல் பொறிமுறையின் அடிப்படையாக இருக்க முடியும் என்று நம்புகிறோம்." என தெரிவித்திருந்தார்கள்.

ஒக்டோபர் 3, 2015 கேரி ஆனந்தசங்கரி, (ஸ்கார்பாரோ-ரூஜ் பார்க் கனடா லிபரல் கட்சி வேட்பாளர்) ஆகிய நீங்கள் சக வேட்பாளர்களுடன், மார்க் ஹாலண்ட் - அஜாக்ஸ், நவ்தீப் பெய்ன்ஸ் - மிசிசாகா மால்டன், ஜான் மெக்கல்லம் - மார்க்கம்-தோர்ன்ஹில், மற்றும் பிக்கரிங் ஒக்ஸ்பிரிட்ஜ் ஜெனிபர் கோனெல் ஆகியோருடன் அஜாக்ஸில்; தமிழ் சமூக கூட்டத்தை நடத்தினீர்கள். அங்கு பேசுபொருளாக இலங்கையில் நீண்டகால அரசியல் தீர்வின் ஒரு பகுதியாக தமிழ் தேசியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்ததுடன், இலங்கை ஆயுதப் படைகளில் போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை, மீதான ஒரு தீர்மானத்தை எய்துவதற்காக அழைப்பு விடுத்திருந்தது. இலங்கையுடனான கனடாவின் ஈடுபாட்டின் மூன்று தூண்களை லிபரல் கட்சி அறிவித்து, பொறுப்புக்கூறல் குறித்து கூறியதாவது “போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் கனடாவில் வசிக்கும், இனப்படுகொலை ஆகியவற்றில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை மற்றும் வழக்குத் தொடர உலகளாவிய அதிகார வரம்பைப் பயன்படுத்தலும் மேலும் அது இலங்கை ஆயுதப்படைகளுக்குள் கட்டளை சங்கிலியின் ஒரு பகுதியாக இருந்தவர்களுக்கு எதிராக பயணத் தடையை நடைமுறைப்படுத்தும். அதேவேளை 1948 முதல் இன்றுவரை நடைபெற்ற இனக்கொலைகள், போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை உள்ளிட்ட கடுமையான சர்வதேச குற்றங்கள் குறித்து ஒரு குற்றவியல், சர்வதேச, சுயாதீனமான விசாரணையைத் தொடர்ந்து விசாரிப்போம்" என்றும் இலங்கையில் நீண்டகால அரசியல் தீர்வில், தமிழர்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் நியாயமான குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். தமிழ் தேசிய இனமும் பிற சிறுபான்மையினரும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம், என்றும் ஈடுபாட்டின் மற்றுமோர் தூணாக உள்ளூர் மற்றும் கனேடிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பது மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிர்ச்சி ஆலோசனை, பெண்கள் அதிகாரம் அளித்தல் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுடன் பரிமாற்றங்கள் மற்றும் கூட்டாண்மைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிப்பதாகும்.” என உறுதிபடக் கூறி நின்றது. இதனை 2015 ஒக்ரோபர் 5ம் திகதி; “லிபரல் கட்சி இலங்கையில் கனடாவின் ஈடுபாட்டின் மூன்று தூண்களைக் கோடிட்டுக் காட்டுகிறது" எனும் தலையங்கத்துடன் ஓர் அறிக்கையாக நீங்கள் வெளியிட்டீர்கள். அவ்வறிக்கையின் பிரதி இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
“இலங்கையில் எங்கள் மூன்று தூண்கள் நிச்சயதார்த்தம் என்பது, பொறுப்புக்கூறல், ஒரு அரசியல் தீர்வு, மற்றும் தீவில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதில் தேவையான கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அங்கீகரிக்கின்றன. இலங்கையில் கனடாவின் ஈடுபாடு திறந்த, வெளிப்படையான மற்றும் நமது சர்வதேச கடமைகளுக்கு இசைவானதாக இருப்பதை உறுதி செய்வதில் இது ஒரு முக்கியமான படியாகும் என்றும் கூட்டாட்சித் துறையில் கனடா எங்கள் நிபுணத்துவத்தை வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு ஸ்கார்பாரோ-ரூஜ் பார்க் லிபரல் கட்சி வேட்பாளரான நீங்கள் (கரி. ஆனந்தசங்கரி) உங்கள் கடிதத் தலைப்பில் (LETTERHEAD) வெளியிட்டிருந்தீர்கள்.
இந்த அறிக்கை என்ன ஆயிற்று? இவ்வழைப்பை தமிழர் நாங்கள் சரியாகப் பயன்படுத்தவில்லையா? அல்லது வெறும் தேர்தல் வாக்குறுதி மட்டும்தானா? என்பதே எங்கள் மன உளைச்சல். இலங்கையில் பொறுப்புக்கூறல், நீண்டகால அரசியல் தீர்வு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பது இந்த மூன்று தூண்களும் எங்கள் தமிழனத்தை பாதுகாக்கும் என்று அன்று நம்பியுரைத்த லிபரல் கட்சி, நாங்கள் ஒரு தேசிய இனம் என்றும் அன்று எங்களுக்கு நடந்தது இனப்படுகொலைதான் என்றும் கூறிய லிபரல் கட்சியின் தலைமைகள் சீனாவின் மேற்கு மாநிலமான சின்-ஜியாங் பிராந்தியத்தை சேர்ந்த உய்குர் இஸ்லாமிய மக்கள் மீதான இனப்படுகொலைகளுக்காக குரல் கொடுக்கும் அதேவேளை எங்கள் விடயத்தில் கண்டும் காணமல் போவதன் மர்மம் என்ன? நாங்கள் செய்யத் தவறியது என்ன? ஏன் இந்தத் தூண்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக பலமாக நிர்மாணிக்கப்;படவில்லை? தமிழ் மக்களின் வாக்குகளுக்காக மட்டும் இந்த அறிக்கைகள் அன்று எம்முன் வழங்கப்பட்டனவா? இந்த அறிக்கை கிடப்பில் போடப்பட்டுவிட்டதா? அல்லது வலுப்பெறுமா? இதற்கான பதிலையே லிபரல் கட்சியின் நாயகர்களான உங்கள் அனைவரிடமிருந்து எதிர்பார்க்கிறோம். அதேவேளை இத்தூண்களை நடைமுறைப்படுத்த உங்களுடன் கரங்கோர்த்து ஆதரவு நல்க விரும்புகின்றோம்.
உண்மையுடன் மக்களின் குரலாக முகுந்தமுரளி.
This Article Published On Canada Eeelamurasu 18th of February 2021
No comments:
Post a Comment