Thursday, 11 February 2021

 “ஆல் போல் தழைத்து, அறுகு போல் வேரோடி”  -                              ------------முகுந்தமுரளி---------------

இன்று தாயகத்திலும் புலத்திலும் வாழும் தமிழர்கள் வேண்டி நிற்பது ஒன்றிணைவையே. தமிழ்த் தேசியத்தின் வெற்றி என்பது ஐக்கியத்திலேயே தங்கியுள்ளது எனப் பல ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். அந்த ஒற்றுமை மற்றும் செழுமையை உருவாக்க பொறுப்பு ஏற்பவர்கள் செய்ய வேண்டிய  விடயங்களை அறிந்து கொள்வது காலத்தின் அவசியம். ஈழத்தமிழர் தேசிய ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்கு ஊடுருவி இருப்பவர்களும், பல்வேறு கொள்கைகள்,  தன்னிச்சையான கருத்துக்களைக் கொண்ட தனிநபர்களும் குழுக்களும் வந்து  நம்மிடையே இணைந்து இருப்பார்கள். எனவே  எல்லோரும் விசுவாசிகளாக இருக்க மாட்டார்கள், இதுவும் ஐக்கியத்திற்கு ஆபத்துக்குரியதாக்குகிறது. இவையாவையும் தாண்டி தேசியம் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றில் வலுவான நம்பிக்கையை ஏற்படுத்த, ஐக்கியத்தை வலுவாக்க வலுவான கலாச்சாரங்களை உருவாக்கவேண்டியது காலத்தின் தேவை. 

வலுவான கலாச்சாரங்களை உருவாக்கல்


மக்களின் தேவையறிந்து, அவர்களைப் பின்பற்றி அவர்களுக்கான சேவையில் தன்னை அர்ப்பணிக்கும் நேர்மையான தலைவரையே மக்கள் பின்பற்றுகிறார்கள். இந்நூற்றாண்டில் தமிழருக்குக் கிடைத்த விலைபோகாத தனித்துவமான தலைவராக இன்றும் மக்கள் பின்பற்றும் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் மட்டுமே விளங்குகிறார். அவர் தலைவராக உருவாகிய பொழுது வயதில் மிகவும் இளையவரே!  உண்மையான தலைவர்கள் விரல் சுட்டுவதையும் குற்றம் சொல்வதையும் தவிர்க்கிறார்கள். எல்லோருடனும்  வெற்றிகள் மற்றும் தோல்விகள் இரண்டையும் பகிர்ந்து கொள்கிறார்கள். இது தேசியத்திலும் ஒற்றுமையிலும் அந்த நம்பிக்கையை மேலும் மேலும் தூண்டி ஐக்கியத்தை மேலும் வலுப்படுத்தும். 

ஒரு பொறுப்பினைச் சரியான நபர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஓற்றுமையின்; முக்கிய மதிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் நபர்கள் பொதுவான பிணைப்பை உருவாக்குகிறார்கள். அணி இலக்குகளுக்கு முதலிடம் கொடுக்கும் நபர்களைத் தேர்ந்து எடுக்கவேண்டும். தலைவர் மட்டும் அல்ல தனிநபர்கள் பார்வை மற்றும் பணிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். கூட்டமைப்பானது பலமாக இருக்க கீழ் காணப்படும் மூன்று அணிகள் முதலில் உருவாக்கப்படல் வேண்டும். இங்கு வெளிப்படைத் தன்மை மிக அவசியமாகும். 

1. மேலாண்மை அணி

2. ஆலோசனை அணி

3. முன்னணிச் செயலணி 

அமைப்பின் பார்வை மற்றும் பணியை தொடர்ந்து தொடர்பு கொண்டு செயற்படுவதற்கு ஒரு மேலாண்மை அணி அவசியமானது. மேலாண்மை அணியானது, உருவாகும் சிக்கல்கள்  கை மீறிப்போனாலும் கையாண்டு ஒற்றுமையை வலுப்படுத்தல் வேண்டும். ஒருபொழுதும் இவர்கள் பதவி, புகழ் போன்றவற்றிற்கு ஆசைப்படாதவர்களாயும்,  நேர்மையான ஒரணியாக தேசியத்திற்கு வலுச் சேர்ப்பவர்களாகவும் மக்கள் மத்தியில் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும், அமைப்புக்கள் சாராத தனிமனிதர்களையும் உள்வாங்கலாம். அல்லது அமைப்புக்களினுள் காணப்படும் தேசியத்தை பலப்படுத்தும் உன்னத நோக்கத்தைக் கொண்ட செயற்பாட்டாளர்களையும் உள்வாங்கிக்கொள்ளலாம். 

இந்த மேலாண்மை அணிக்குச் சமாந்தரமாக “ஆலோசனை அணி” ஒன்றினை ஏற்படுத்தி காலத்திற்குத் தேவையான சாதுர்யமான வழிகாட்டல்கைளை உருவாக்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இவ் வழிகாட்டல்களில்; அறவழிப் போராட்டத்தை நகர்த்த ஒரு உள்ளக தேர்தல் மூலம் செயற்பாட்டு அணியை உருவாக்கிச் செயற்படலாம். 

பல அமைப்புக்கள் பல்வேறு நம்பிக்கைகளுடன் தனித்துவமாக தங்கள் பாதையில் பயணிக்கின்றார்கள். அவர்கள் தனித்துவங்கள் குறையாத வகையினிலேயே இணைந்து கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். இவ்வாறு இணைந்து செயற்படும் வேளையில் ஒருவர் மீதான அல்லது ஓர் அமைப்பின் மீதான விமர்சனங்களை அள்ளி எறிவதும், குற்றங்குறைகளைப் பகிரங்மாகப் பேசுவதும் ஐக்கியத்தை சீர் குலைக்கும். கையில் எழுதுகோல் இருப்பதற்காகவோ, ஒலிவாங்கி இருப்பதனாலேயோ இவ்வாறு செயற்படுபவர்களால் ஒற்றுமை சீர்குலையுமே தவிர, ஆரோக்கியமாக எதனையும் உருவாக்க முடியாது.   ஐக்கியத்தை விரும்பும் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் இது அழகல்ல. இத்தகைய சிக்கல்கள் எழாமல் இராது. ஆனால் எழும் சிக்கல்கள் மூலம் பணிபுரியும் சூழ்நிலையை நம்பகரமானதாக உருவாக்க வேண்டும். சிக்கல்களைத் தீர்க்க   களச்செயல்களில் கூட்டமைப்புக்கள் ஒன்றாக இணைந்திருக்கும் பொழுது ஒவ்வொரு வருடமும்  உள்ளகத் தேர்தலின் மூலம் ஒரு செயற்பாட்டு அணியை ஏற்படுத்தி அவர்களின் தலைமையில் அக்கூட்டமைப்பின் நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம். 

சிக்கல்களைச் சமாளிப்பது என்பது இதய சுத்தி மற்றும் வெளிப்படைத் தன்மையுடன்,  “நேர்மை”யாக அணுகி, “பொறுமை”யாகக் கையாண்டு,   “தாய்மை” போன்று அரவணைத்து கருத்து வேற்றுமைகளைக் களைந்து செயல்படுதல் ஆனது  “ஒற்றுமை” மற்றும் பிணைப்பை பலப்படுத்துகிறது. வெற்றிகளை விட எங்கள் இழப்புகளிலிருந்து தான் நாங்கள் அதிகம் கற்றுக்கொள்ள முடிகின்றது. 

சிறந்த தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள்  வேகத்தைப் புரிந்துகொண்டு ஐக்கியத்தினை வலுப்படுத்துவார்கள். கருத்து வேறுபாடுகளைக் களைதல்  மற்றும் அர்ப்பணிப்பு திறன் அவர்களுக்கே உரிய விசேட தன்மையாக விளங்கவேணடும். ஐக்கியத்தை உடைக்க முற்படுபவர்களை இனங்கண்டு சாதுர்யமாக கையாளும் திறன் உடையவராக வழிகாட்டியாக, முன்னோடியாக திகழவேண்டும். இது தமிழ்த்தேசிய விசுவாசத்தை வலுப்படுத்தி, நம்பிக்கையை உருவாக்கும். 

சாளரமும், கண்ணாடியும்

விடயங்கள் சரியாக நடக்கும்போது தலைவர்கள் சாளரத்தை சுட்டிக்காட்டி மற்ற அனைவருக்கும் வாய்ப்புக்களை வழங்குவார்கள். விஷயங்கள் தவறாக நடக்கும்போது, அவர்கள் கண்ணாடியில் தங்களைத் தாங்களே பார்த்து முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறார்கள். தயவு செய்து பொறுப்பாளர்கள்  சர்வாதிகாரிகளைப் போல செயல்பட வேண்டாம். எந்தவொரு தனிநபரை விடவும் அமைப்பு பெரியது என்பதை நாம் உணர்ந்து நடக்கவேண்டும். 

தலைவர்கள் சிறந்த தொடர்பாளர்களாய் விளங்கவேண்டும். எல்லோரும் என்ன செய்கின்றார்கள் என்பது நிறுவனத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமன்றி,  மக்கள் எல்லோருக்கும் எல்லாம் தெரியவேண்டும். இவ்வாறு அமைப்பு வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடித்தால் மறைக்கப்படும் அல்லது மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் மறைந்துவிடும். 

வெளிப்படைத் தன்மையுடன் கூடிய உடன்படிக்கைகள் கூட்டமைப்பினுள் இணையும் ஒவ்வொரு அமைப்புக்களுடன் அவர்கள் தனித்துவம் பாதிக்காத வகையில் கைச்சாத்திடப்படல் வேண்டும். இது தீர்க்கப்படாத பிரச்சனைகள் என்று எதுவும் வராமல் பாதுகாப்பரணாக விளங்கும். ஒருங்கிணைப்பாளர்கள் சிறந்த தகவல்தொடர்பாளர்கள் என்பதால், என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும் என்பதால், தலைவர்கள் அல்லது ஒருங்கிணைப்பாளர்கள் பதற்றத்தையும் வதந்திகளையும் உருவாக்க அனுமதிக்க மாட்டார்கள். எனவே சிக்கல்கள் உடனடியாக தீர்க்கப்பட்டுவிடும். 

பகிரப்பட்ட நோக்கத்தை உருவாக்க வேண்டும். 

அமைப்பின் பார்வை மற்றும் குறிக்கோள்கள் ஆரம்பத்திலேயே தெளிவாக பொதுவாக கூறப்படல் வேண்டும். தனிநபர்களின் அர்ப்பணிப்பினாலும் திறமையினாலும் சிறந்த வழிகாட்டலினாலும் ஐக்கியம் தடைகளைத் தாண்டி தானாய் மலரும். சேற்றில் இருந்துதான் செந்தாமரை மலர்கின்றது. சிக்கல்களில் இருந்துதான் தீர்வு பிறக்கிறது. 

விளையாட்டுக் களத்தில் இது பொதுவானது. ஓர் அணியின் வெற்றிக்கு தலைமையின் வழிநடத்தலே காரணமாக இருந்தாலும் அவ்வணியிலுள்ள வீரர்களின் தனித்திறமை மற்றும் அர்ப்பணிப்பினாலேயே வெற்றியென்பது சாத்தியமாகின்றது. சரியான நெறியாள்கையில் ஒன்று திரண்ட அணியை உலகின் தலைசிறந்த வீரர்களைக் கொண்ட அணியால் கூட வீழ்த்த முடியாது. மிகவும் திறமையான அணியினால் கூட  மிகவும் அர்ப்பணிப்புடனும், இதய சுத்தியுடனும், நேர்மையுடனும் கொள்கையால் ஒருங்கிணைந்த அணியை வெல்லமுடியாது. 

ஐக்கியத்தை விரும்புவர்கள் ஒருபொழுதும் மற்றவர்களைத் துன்புறுத்த மாட்டார்கள். சர்வாதிகாரிகளைப் போல செயல்படுதல் ஆபத்தானது. நீங்கள் வழிநடத்தும் போது நீங்கள் சேவை செய்கிறீர்கள். மற்றவர்கள் தங்கள் சேவையைச் செய்யவும் வளரவும் உதவிட வேண்டும்.  போர்தான் தோற்கடிக்கப்பட்டதே தவிர போராட்டம் இன்றும் தொடர்கின்றது. ஆணிவேர் இற்று உயிரற்றுப் போனாலும்,  பக்கவேர்களும்,  சல்லி வேர்களும் பாதுகாத்துத் தாங்கும் மரவர்க்கத்தின் மாமன்னன் ஆலமரம்போல் பிரபாகரனியம் தொடரும்!





No comments:

      முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்லர்..!             முகுந்தமுரளி உலகப் பொதுப் புத்தாண்டு வாழ்த்து உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும். 1.1....