நாமார்க்கும் குடியல்லோம்!
நமனை அஞ்சோம்!
----------------------------------------------------------------------------------------------------------------------------- முகுந்தமுரளி
தமிழ் இனத்தை வைத்துப் பந்தாடி தங்கள் காரியங்களைச் சாதிக்க முற்படும் வல்லாதிக்க அசுரர்கள் மத்தியில் அடங்காத் தமிழ் இனமாக 73 ஆண்டுகளுக்கு முன்னும், பின்னும் போராடி வருகின்றோம்! இலங்கையில் இருந்த மூன்று பகுதிகளையும் தனித்தனியாக யாழ்ப்பாணம், கண்டி, கோட்டை எனப் பிரித்து ஆண்டு வந்த பிரித்தானியர் 1833 இல் நிர்வாக வசதிக்காக ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தனர். 1948 இல் இலங்கைக்கு ஆங்கிலேயர் சுதந்திரம் வழங்கிய போது தந்திரமாகப் பூசி மெழுகி ஐக்கியப் படுத்திய இலங்கைத் தீவைப் பெரும்பான்மை சிங்களவர்கள் கையில் வழங்கிவிட்டு வெளியேறினார்கள். இங்குதான் ஆங்கிலேயரின் “வணிகாதிக்க ராஜதந்திரச் சிந்தனை” சிறப்பாகச் செயற்பட்டது. ஏனென்றால் பிரிட்டிசாரை எதிர்த்துப் போராடிய தமிழினத்தின் வீரம் மற்றும் விவேகம் கண்டு முற்கூட்டியே திட்டமிட்டு அடங்காத் தமிழினத்தை தொடர்ந்து போராடும் சூழநிலையில்; தள்ளி அதன் மூலம் நாட்டை விட்டு வெளியேறிய பின்னரும் இலங்கை அரசைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே பிரித்தானியாவின் பிரித்தாளும் தந்திரோபாயத்தின்;; மூலோபாயமாக இருந்தது. சிங்களருக்குச் சுதந்திர ஒளியையும் தமிழருக்கு விடியா இருளையும் 73 வருடங்களுக்கு முதல் வழங்கிய நாள் பெப்ரவரி 4. உலகெமெல்லாம் சுதந்திரம் ஒளி வழங்கிய பிரித்தானிய சம்ராச்சியம் செந்தமிழ் இனம் தலையெடுக்காமல் இருக்கத் தமிழர்களை திறந்த இருளில் தள்ளியது. அன்றும், இன்றும் பூகோள அரசியலில், பேரரசுகளின் வல்லாதிக்கப் போட்டியில் பந்தாடப்படும் இனமாக தமிழினம் இழிநிலை அடைந்தது.
வரலாற்றுத் தவறுகளையே பேசிக் கொண்டிருப்பதில் பொருளில்லை. ஆயினும் வரலாற்றையும் அதன் பின்னால் மறைந்து இருக்கும் சூட்சுமங்கள்; மற்றும் சூட்சும நிகழ்ச்சிநிரல்களையும் அறிந்து கொள்ளாவிட்டால் நம் இனத்திற்கு விடிவில்லை. அறியவேண்டிய விடயங்களை அறியாமல் மேலோட்டமாக அதாவது நுனிப்புல் மேய்ந்துவிட்டு எல்லாம் அறிந்தவர்கள் போல் எங்களையும் ஆய்வாளர்களாகவும், அரசியல் விமர்சகளாகவும் காண்பித்துக் கொண்டு மக்களையும் அறியாமை இருளில் வைத்திருப்பது உண்மையான சமூக இழிவு நிலை ஆகும்! உடனடியாக அகற்ற வேண்டிய சமூக இழிவு என்று பொதுப்படப் பேசும் பொழுது ஒற்றுமை இன்மையே என்போரும், பிரதேசவாதம் என்போரும், சாதிமத பேதம் என்போரும், ஊழல் மோசடி மற்றும் கையூட்டும், தேசியச்;சொத்து அபகரிப்பு என்போரும் எம்மத்தியில்; அவரவர் கருத்துக்களாகப் பொதுப் புத்தியாக ஒலிக்கிறது. ஆனால் இத்தனை இழிவுகளுக்கும் மேல் எம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் பேரிழிவு அறியவேண்டிய விடயங்களை அறியாமல் இருக்கும் அறியாமையே! அதனை நிவர்த்தி செய்யும் விதமாக அறிவூட்டும் சிந்தனையாளர்கள், ஆய்வாளர்கள் எம்மினத்தின் வழிகாட்டியாக சூட்சுமங்களையும், அதனைப் புரிய வைக்கக் களம் கொடுத்து மக்கள் மத்தியில் பிரச்சாரப்பணியினை மேற்கொள்ள தேசியப்பத்திரிகைகள் காலத்தின் தேவையாக வெளிவருகின்றன. அப்படியான உன்னதமான பணியினையே கனடா ஈழமுரசு தன்பணியாக உயிர் நாடியாக கொண்டு வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆதிக்கப்போட்டிகளின் மத்தியில் நடைபெறும் வீண்பழிகளுக்கும், அவதூறுகளுக்கும் மத்தியிலும் விளம்பர ஆதரவினைக் கடந்தகாலங்களிலும், நடைமுறையிலும் வழங்கிக்கொண்டிருக்கும் வர்த்தக நிறுவனங்களுக்கும், அதன் உரிமையாளர்களுக்கும் ஈழமுரசு சார்பாக அடியேன் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். இப்பேரிடர் காலத்திலும் தேசியத் தலைவர் அகவை தினத்தையொட்டி 120 பக்கங்களில் சிறப்பிதழ் வெளிவரக் காரணம் எம் தமிழ் மக்கள் தன்னிகரில்லாத் தலைவர் மேல் கொண்ட பெருமதிப்பும் அன்புமே ஆதரவாகத்திரண்டது கண்கூடு. அதேவேளை தனிமனிதர்களாக ஈழமுரசின் பணிக்குப் பண உதவி மற்றும் தொண்டாற்றிய அன்பு உறவுகளையும் மறக்காமல் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன். காரணம் இவர்களால் நிமிர்ந்து வளர்ந்து நின்று இன்று காலத்தின் தேவைகருதி பிரச்சாரக் களம் தந்து நிற்கிறது ஈழமுரசு. தேசம் இருண்டு கிடந்தாலும் விடியலை நோக்கிய பயணத்தில்; அறிவு முரசறைந்து தமிழின விடுதலைக்கு கலங்கரை விளக்கமாக வாராவாரம் ஒளியூட்டி வழிகாட்டும் பணியில், பெருந்தொற்று நோய்க்காலத்திலும் தடங்கல் இல்லாது கடமையாற்றி ஈழமுரசு ஒலிப்பது வர்த்தகப் பெருமக்களின் ஆதரவால் என்பதே பேருண்மை.
எதற்கு எடுத்தாலும் கண்மூடிக்கொண்டு அறிக்கைகளை வெளியிட்டு அறிக்கைகளாலேயே அரசியல் செய்யும் அமைப்புக்கள் ஒருபுறம், திரள்கின்ற மக்களை வைத்து திறன்படச் செய்ய வழிகாட்டியாக யாரும் இல்லாத நிலையில் நம் பயணம். இத்தகைய பயணத்தின் பாதையில் மக்களாகவே உண்மையின் விளக்கம் கிடைக்கப்பெற்று ஓரிடஞ்சேரத் தொடங்கியுள்ளனர். ஆம் யூரியூப் காணொளியினூடு அரசியல் அறிவு இயக்கத்தின் ஆய்வாளர் குணாகவியழகனின் அறிவூட்டலும், அவருடைய முப்பது வருட தேசியப்பயணத்தின் அனுபவப்பட்டறிவும் எங்கள் முன் அவரை வழிகாட்டியாக அடையாளங்காட்டி நிற்கின்றது. (kuna kaviyalahan - YouTube) . இவரது அரசியல் அறிவு இயக்கத்தின் வெளிப்பாடு மக்கள் மத்தியிலும் ஊடகவியலாளர்கள் மத்தியிலும்; வரவேற்புப் பெற்று அறிவூட்டி வலுவாக்கி நிற்கின்றது என்றால் மிகையாகாது.தாயகப் போராட்டத்தினைத் தமக்குச் சாதகமாக்க முற்படும் ஆதிக்க சக்திகளினால் உருவாக்கப்பட்ட சில தலைமைகளும், களத்தில் வேசமிட்டு நிற்கின்றன. கொடுக்கப்படும் அறிக்கைகள் இந்திய- மேற்குலக சக்திகளுக்கே வலுச்சேர்க்கின்றன என்று ஆய்வாளர்கள் தெளிவாகத் தெரிவிக்கின்றனர். ஆயினும் மக்களோ சத்தியத்தின் தீப்பிளம்பாய் ஆவேசம் கொண்டு திரள்கின்றார்கள். அநீதிக்கு உள்ளாகி அடக்குமுறைக்குள் வாழும் தமிழினம் நீதிகேட்டு வீதிவழி சரித்திரம் படைக்கிறது. புலத்தில் இருந்து தேசப்பற்றாளர்கள் பொருளாதார ரீதியாகவும், ஆத்மரீதியாகவும் தாயகப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். தாயகத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. வன்முறை எப்போது எப்படிக் கட்டவிழ்த்து விடப்படும் என்பதும் தெரியாது. ஆயினும் அச்சம் என்பது மடமை, அடங்கோம் நாம் தமிழர் என இஸ்லாமியத் தமிழர்களும் கரங்கோர்த்து உரிமைக்குரல் ஒலிக்கிறது. நீதிக்காகப் போராடுகின்றது. இலங்கையின் பூர்வீகத் தமிழ் குடிமக்கள் சமூகத்தின் நீதிக்கான போராட்டத்தை நீதிமன்ற சட்டங்களைக் கொண்டே மடக்கிப்போட முனைகிறது அரசாங்கம். சனநாயகத்தையே மதிக்காமல் சட்டத்தைக் கொண்டும் அரச படையினரைக் கொண்டும் மக்களின் போராட்டத்தை ஒடுக்க முற்படுகின்றது ஸ்ரீலங்கா பேரினவாத அரசு.
ஆற்றுவெள்ளத்தை எதிர்த்து நீச்சலடிப்பது மூடத்தனம் என்பர். ஆயினும் ஓட்டம் அதிகரிக்கும் பொழுது எதிர்நீச்சல் அடித்துத்தான் ஆகவேண்டும். இவ்வாறான சூழுந்நிலையிலேயே இனவழிப்பின் அங்கமான நினைவழிப்பும், கலாச்சாரப் படுகொலைகளும் துரிதகதியில் அரங்கேறிக் கொண்டிருக்கையில் மனந்தளராது ஒற்றுமையுடன் தமக்கெனத் தனிவழிவகுத்து பூமிப்பந்தில் ஒன்றுதிரள்கின்றது தமிழினம். அறவழியில் எதிர்நீச்சல் அடிக்கின்றது தமிழினம். பொத்துவில் முதல் பொலிகண்டி வரை தடைபல கடந்து நடைபயண போராட்டமானது உலகிற்குக் கூறுஞ்செய்தியும், புலம் பெயர்தேசங்களில் ஒன்றுபட்டு திரண்டு எழும் மக்களும் கொண்டுள்ள உரமான சிந்தனையும் கூறும் செய்தியும் ஒன்றுதான். நாம் ஓர் தேசிய இனம்! தாயகத்தில் எம்மினம் திட்டமிடப்பட்ட இனப்படுகொலைக்குள் இருந்து காக்கப்படவேண்டும். மனித உரிமைச்சட்டங்களை மதிப்பதாகச் சொல்லும் அனைத்துலக நாடுகளே எம்மையும் மக்கள் சமூகமாக, மனித இனமாக ஒரு தேசிய இனமாக நீங்கள் அணுகிட வேண்டும். நாங்கள் இலங்கையரல்லர். தமிழர் என்பதே எங்கள் அடையாளம்! எம்மினத்திற்கான நியாமான அரசியல் தீர்வை நாம் பெறும் வரை ஒடுக்கப்பட்ட தேசிய இனமாகிய எங்கள் குரல்கள் ஓங்கி ஒலித்து கொண்டே இருக்கும்! ஒடுக்கப்படும் மக்களே ஒடுக்கு முறைக்கு எதிராகப் போரட வேண்டும். அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே அநீதியை ஒழித்துக்கட்ட முன்வரவேண்டும் என்ற தேசியத் தலைவரின் சிந்தனை வழியில், “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்.” என தமிழரின் நீதிக்கான அறவழிப் போராட்டங்கள் விடியலை நோக்கி வேகமாகுமே தவிர ஓயாது! தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!



No comments:
Post a Comment