Thursday, 28 January 2021



 கீச்சு கீச்சு தம்பலம், 

கீயோ மாயோத் தம்பலம்… !  

முகுந்தமுரளி                                                                                                 

'நான் தான் எல்லாம் ” 'நான் இல்லையேல் ஒன்றும் நடக்காது”  என்ற மனோநிலையில் தாயகத்திலோ, புலத்திலோ உள்ளோர்களின் கவனத்திற்கு...

நீங்கள் இல்லையென்றாலும் நீங்கள் சார்ந்த நிறுவனம், அமைப்பு சங்கம், கட்சி, இயங்கும். நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் இயங்கும். நீங்கள் இல்லையென்றாலும் உங்கள் குடும்பம் இயங்கும்.

நான் இல்லையென்றால் 'இது நடக்காது" 'நான் தான் எல்லாம்” என்று நீங்கள் பெருமிதம் கொள்ளும் 'ஒன்று” நீங்கள் இல்லையென்றாலும் நடக்கும். நீங்கள் இல்லையென்றாலும் இவை அனைத்தும் இயங்கும்.

உங்கள் ஆடம்பரமான வீடு ஆடம்பரமான கார், செல்வச்செழிப்பு,  பதவி, பொறுப்பு,  புகழ்,  உங்கள் அதிகாரம், சுயநலம் எதுவும் உங்களுடன் வரப்போவதில்லை. ஆகையால் 'நான்” என்று அகந்தை கொள்ளாதீர்கள். பூமிப்பந்தில் நீங்களோ, நானோ  கண்ணுக்குத் தெரியாத சிறிய  நுண்ணங்கியை விட ஒரு எளிய, சிறிய உயிரே.

கீச்சு கீச்சு தம்பலம்                                                                                                                      கீயோ மாயோத் தம்பலம்                                                                                                                மாச்சு மாச்சு தம்பலம்                                                                                                                   
மாய மாயத்  தம்பலம்   

    இச்சிறிய பாட்டு சிறுவயதில் 'எவடம் எவடம் புளியடி புளியடி" என்று மணலைக் குவித்து குச்சியை மணலில் ஒழித்து வைத்து கண்டுபிடிக்க பாடிப்பாடி விiளாயடிய பாட்டு. இதனூடாக ஒரு குச்சியை உவமானமாக உபயோகித்து, சிறுபராயத்திலேயே மிக உயர்ந்த தத்துவமாகிய உட்பொருள் தத்துவத்தை உணர்த்தி வளர்த்தது தமிழினம். இப்பாடல் கூறும் பொருளானாது உருவம் அற்ற நிலையில் இருந்த ஆத்மா (உயிர்)  கீச்சு மூச்சு  எனும் நாதத்தோடு ஆரம்பித்த உயிர் மூச்சு உருவ நிலை அடைந்து, கீயோ, மாயோ எனச் சத்தமிட்டு வாழ்ந்து மாச்சு மாச்சு என சேடம் இழுத்து மறைந்துவிடும். யாவும் மாயை என்பதனை நிரூபித்து உடல் நீத்து மாயா மாயாமாய்  மறைந்து உயிர் மீண்டும் அருவநிலை அடைந்துவிடும். 

 திருமூலரும் திருமந்திரத்தில் “ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை நீக்கிப் பிணம் என்று பேர் இட்டுசூரை அங்காட்டிடை கொண்டு போய்க் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே." என்கிறார். 

"உடல் விழுந்த பின் ஊரெல்லாம் கூடி ஓலம் இடும், அழும். அவன் பேரை மாற்றி விட்டுப் பிணம் என்று அழைப்பர். முட்செடிகள் நிறைந்த சுடுகாட்டில் கொண்டு உடலை எரித்து விட்டு பிறகு நீராடி எழுந்ததும் அந்த மனிதனைப் பற்றி மறந்தே போவார்கள்." என்பதே இதன் பொருளாகும்.  

ஆகையால் 'நான்" 'நான் தான்"; 'நான் இல்லையென்றால் " 'என்னால் தான் இது நடந்தது போன்ற" அகக் குப்பைகளை அகங்கார அறிவீனங்களை தூக்கிக்கொண்டு சுற்றாதீர்கள். உங்கள் இந்த அகந்தையினால் எங்கள் இனத்தின் விடுதலை கூடப் பாதிப்பு அடைகின்றது. ஓற்றுமையைக் குலைப்போராக இருக்காதீர்கள். 

   

பூகோள அரசியற்களப்  புறச்சூழ் நிலை தமிழர்களுக்குச் சாதகமாக கனிந்துவரும் இக்காலகட்டத்தில் அவ்வாய்ப்பைத் தவறவிடின் எத்தகைய அபாயம் உள்ளது என்று சிந்திக்கவேண்டிய கட்டாயம் ஒவ்வொரு தமிழருக்கும் உள்ளது. இத்தருணத்தில் உலகமெங்கும்  பிரிந்து கிடக்கும் தமிழர்களின் ஒற்றுமையே காலத்தின் அவசியம்.  தமிழர்கள் நாம் ஒன்றிணைதல் மட்டுமே ஈழத்தில் எம் உறவுகளின் சிக்கல்களுக்கு அரசியற் தீர்வை வென்று தரும். புலத்திலோ தாயகத்திலோ சுயநல தேர்தல் அரசியலை விட்டு தேசிய அரசியலை நோக்கியே செயற்பட வேண்டிய கட்டாயம் உண்மைத் தமிழர் ஒவ்வொருவருக்கும் உண்டு. 


அமைப்புக்கள் என்பவை மக்களுக்காகவே அன்றி மக்கள் அமைப்புக்களுக்காக அல்ல. இதனை ஒவ்வொரு செயற்பாட்டாளர்களும் கருத்தில் கொள்ளவேண்டும். அகப்பார்வை, புறப்பார்வை, விமர்சனப்பார்வை என்பவற்றை ஓரங்கட்டி வைத்துவிட்டு தமிழர்கள் ஐக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.  கனடா அமைப்புக்களின் நீதிக்கான கூட்டமைப்பில் முப்பதிற்கும் மேற்பட்ட அமைப்புக்கள் இணைந்து உள்ளன. ‘‘தமிழர்களுக்கு நடைபெற்றது இனப்படுகொலையே அதற்கு நீதி வேண்டி நிற்கும் அமைப்புக்களின் கூட்டே நாங்கள். அதற்கு உடன்பட்டால் மட்டும் சேர்ந்து கொள்ளவும் என்ற கொள்கையுடன் பயணிக்கும் அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைகின்றன.’’  நமக்கு நடைபெற்றது இனப்படுகொலை இல்லை. இனப்படுகொலை என நிரூபிக்கச் சாட்சியம் இல்லை என நிலைப்பாடு கொண்டிருக்கும்  அமைப்புக்களை நீதிக்கான கூட்டமைப்பில் சேர்ப்பதில்லை எனும் கொள்கைப் பற்றோடு இந்த ஐக்கியம் மலர்ந்து கொண்டிருக்கிறது.  ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் உன்னதமான உயிர்த் தியாகங்கள் தர்ம ஒளி பாச்சி வழிகாட்டுகின்றது. 

இருளில் தமிழர் தேசம் அழுகிறது!                                                                              இருண்ட கண்டம் விடியல் தேடி விரைகிறது!

இலங்கை ஒரே நாடு அது ஒரே தேசம் என்றும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு, இனப்படுகொலை என்று சொல்வதால் வெற்றிகொள்ள முடியாது எனும்  சுயதந்திர தமிழ்  குள்ள நரிகள் வேண்டுமெனில் கொண்டாடலாம் சிறீலங்காவின் சுதந்திர தினத்தை! ஆனால் நெஞ்சிலே விடுதலை நெருப்பினை சுமந்துகொண்டு தன்மானத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு தமிழனுக்கும் பெப்பரவரி 04 கரிநாளே!

மனிதர்களாக வாழ்ந்த எம்மை சர்வதேசத்தின் உதவியுடன் வீழ்த்தி பல்லாயிரம் உயிர்களைப்பறித்து மனிதகுலத்துக்கெதிரான ஒரு கோழைத்தனமான இன அழிப்பினை திட்டமிட்டு செய்து எத்தனையோ பெண்களை விதவைகளாக்கி எத்தனையோ பிள்ளைகளை அனாதைகளாக்கி எங்கள் மண்ணையும் மக்களையும் ஆக்கிரமித்துள்ள சிங்கள தேசம் தமிழர்களை நாடற்றவர்களாக்கி அகதிகளாக உலகெங்குமே அலைய வைத்துவிட்டது. காணாமல் போன உறவுகளைக் கண்ணீரில் தேட வைத்துவிட்டது.

முள்ளிவாய்க்காலில் இறந்த எம் உறவுகளை நினைவு கூரத்தடை! எமக்காக உயிர்நீத்த தியாகிகளை நினைவுகூரத்தடை! தொன்மையான ஆலயத்திற்கு வழிபடச்செல்லத் தடை! வடக்கு, கிழக்கில் உள்ள கடற்றொழிலாளர்களுக்குத் மீன் பிடிக்க கட்டுப்பாடு! அட்டை எடுக்கத் தடை! ஆனால் தென்னிலங்கை கடற்றொழிலாளர்கள் வடகிழக்கு கடல்களில் மீன் பிடிக்க, அட்டை எடுக்கத் தடையில்லை. கடலில் கூட தமிழர்கள் இறைமை பறிபோன நிலையில் தமிழர்கள்.   

நாற்பதுகள் முதல் நடாத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் முதல் இன்றுவரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிங்களக் குடியிருத்தல்கள் வரை எங்கள் இருப்பைக் குறைத்து தமிழர்  பிரதேசங்களை தங்கள் வசப்படுத்தும் திட்டமிட்ட குடியேற்றங்கள் மட்டுமல்லாது 1956 கல்லோயாப் படுகொலைமுதல் காலம் காலமாய் அரங்கேற்றி வந்த 200ற்கும் மேற்பட்ட (Ethnic Slaughter)    இனப்படுகொலைகள்,  இனக்கலவரங்கள், இறுதி முள்ளிவாய்க்கால் (Genocide) இனப்படுகொலையைத் தொடர்ந்து   நடைபெற்றுவரும் (Cultural Genocide) ஆலய அபகரிப்புக்கள், (Memocide) நினைவழிப்பு முயற்சிகள் என சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் முற்றுகையிடப்பட்டு தேசம் இன்னும் இருளில்  நந்திக்கடல் விடியலுக்காகக் காத்திருக்கிறது. 


 சுதந்திரம் என்பது இரங்கிகொடுப்பதோ அல்லது இரந்து கேட்பதோ அல்ல அது எல்லோருக்கும் பொதுவானது சமனானது. ‘‘எமது கோரிக்கைகளும் எமது விடுதலைப்போராட்டமும் எப்போது வெற்றிபெறுகிறதோ அதுவே எமது சுதந்திர நாள். எமது மன்ணை ஆக்கிரமித்துள்ள சிறீலங்கா எப்போது நிரந்தரமாக வெளியேறுகின்றதோ எப்போது வடக்கு கிழக்கு இணைந்து எமக்கென்று ஒரு தனியரசு உருவாக்கப்படுகின்றதோ எப்போது எமது தியாகங்களும் விடுதலைப்போராட்டமும் வெற்றிபெறுகின்றதோ அப்போது தமிழினத்தின் தேசியக்கொடியினை ஏற்றி சுதந்திர நாளினை கொண்டாடுவோம் அதுவரை எமக்கு பெப்பரவரி 04 கரிநாளே!’’ எனத் தாயகத்தில் எழுச்சி கொள்ளும் போராட்டத்திற்கு ஆதரவாக எங்கள் இல்லங்கள்;, வாகனங்கள், வியாபார நிலையங்கள், ஆலயங்கள் அனைத்திலும் கறுத்தக் கொடியைப் பறக்கவிட்டு, சிங்களத்தின் தமிழின படுகொலைகளையும், சர்வதேச சக்திகளின் துணையுடன் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையையும்,  நில ஆக்கிரமிப்பையும், நினைவழிப்பையும், சர்வதேசத்திற்கு தொடர்ந்தும் வலியுறுத்துவோம்.  தமிழர்களுக்கு FEB 4 கரிநாளே என்று உரக்கச் சொல்வோம் உலகுக்கு!

No comments:

      முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்லர்..!             முகுந்தமுரளி உலகப் பொதுப் புத்தாண்டு வாழ்த்து உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும். 1.1....