Saturday, 26 December 2020

 

"உந்தன் கீதையுரை நந்தலாலா !
வெறும் பேச்சளவில் உள்ளதடா நந்தலாலா!”
இன்று 25 ஆம் திகதி “கீதை ஜெயந்தி”தினம் . அதாவது முதன் முதலில் கிருஷ்ணரால் அர்ச்சுனனுக்கு கீதை உபதேசிக்கப்பட்ட தினம். மதங்களைக் கடப்பவர்க்கே புரியும் உயரிய தத்துவம். மானிட வாழ்க்கைக்கு அறப்பழக்கங்களையும், ஆதி,அந்தமற்ற உன்னத உண்மைகளைப்பற்றியும் எடுத்து இயம்பி வழிகாட்டும் அறிவியல் நூல். உண்மையிலேயே இந்தியா தனது தேசிய நூலாக மிக உயர்த்திப் பேசப்படும் பகவத் கீதையின் கோட்பாடுகளை வரவேற்று, வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட பின்னரும் ஏன் இந்தத் துயர நிலைக்கு ஆளாகியது? இப் புதிர் விடுவிக்கப்படாதவரை இந்திய வரலாறு தெளிவற்றதாகத் தான் இருக்கும். புதிருக்கான விடையின் தேடலாக இக்கட்டுரை. குருவே சரணம்! சுவாமி வெற்றிக்கொடி(ஜெயபதாக) பாதங்களே துணை!
நான் யார்? நான் எனது உடலா? அல்லது எனது மனமா? அல்லது அதைவிட உயர்ந்த ஒன்றா? நாம் யார் என்பது நமக்குத் தெரியுமா? அல்லது தெரிந்ததது போல் கருதிக் கொள்கின்றோமா? பொருள் நலன் கருதும் நம் சமுதாயத்தில் உண்மையான உயர்நிலையை உணர முற்படுவதற்கு எத்தனை தடைகள்? அழியாத உயிரைப்பற்றி(ஆத்மா) அறிவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு மாறாக நமது பொன்னான நேரத்தை அழிந்துபோகக் கூடிய உடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதைப்பேணுவதிலும், அழகுபடுத்துவதிலும், சீராட்டுவதிலும், சௌகரியங்களை, ஏற்படுத்துவதிலும் நேரத்தைச் செலவிடுகின்றோம். பொருள் நலன் தேடி ஓடி, ஆன்மீக அழிவை நோக்கி ஓடுகின்றோம்.
நாட்டின் கொள்கைகள் சட்டங்கள், மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டவை. நேரத்திற்கு நேரம் தமக்கு ஏற்றாற்போல் ஒவ்வொரு ஆட்சியாளர்களும் தமது கொள்கைக்கு வசதிக்கு ஏற்றபடி சட்டங்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். தர்மத்தின் கொள்கைகள் பரமபுருச பகவானின் அதாவது நித்திய நிரந்தரமான ஆட்சியாளர் ஆதிமூலத்தின் நேரடிக் கட்டளைகளாகும். (தர்மம் து சாக்ஷாத் பகவத்-பரணிதம்) எப்பொழுதெல்லாம் நிரந்தரமற்ற ஆட்சியாளர்களால் பூமியில் தர்மம் சீர்குலைகின்றதோ அப்பொழுது எல்லாம் தர்மத்தை மீண்டும் நிலைநாட்ட அவர் தாம் தோன்றுவதாக பகவத்கீதை 4ஆம் அத்தியாயம், ஏழாம் பதத்தில் கூறுகின்றார்.
தர்மம் என்பது பின்பற்றப்பட வேண்டியது. பற்றுவது தர்மம். விருட்சத்;திற்கு வேர் பற்றுதல் மிக அவசியம். வேரினால் விருட்சம் நிற்கின்றது, வளர்கின்றது, வாழ்கின்றது. அதேபோல் வாழ்க்கை எனும் விருட்சத்திற்கு வேர் தர்மம். மனித வாழ்வு உயர்வடைவதற்காக உய்வடைவதற்காக போதித்த நூல் பகவத்கீதை. அது ஆதி அந்தமற்ற தர்மம். “சநாதன தர்மம்”. வேதங்களைக் கற்று உணர்ந்து விரிவான தர்மத்தை வாழ்வில் கடைப்பிடித்து தன்னலமற்று வாழ்ந்தவர்கள் பல கோடி. ஆனால் இன்று தற்போதைய நமது மனித சமுதாயம் குருடான தலைவர்களால் தவறாக வழிநடத்திச் செல்லப்படுகின்றது. உன்னதமான ஆதி-அந்தமற்ற இறைவனின் கட்டளைகள் தர்மம். அந்தத் தர்ம-மார்க்கம் அதனைப் பற்றி வாழும் வாழ்க்கை பண்பட்ட வாழ்க்கை. தனிநபர் ஒழுக்கமே மானிட கலாச்சாரத்தின் அடிப்படை என்ற உயர்நாகரீகத்தின் வழிகாட்டும் மார்க்கம். இன்று அந்த மார்க்கம் தன்னல நோக்குக் கொண்டவர்களால் மதமாகத் திரிக்கப்பட்டு மக்கள் மதவெறியர்களாக, சாதி வெறியர்களாக உருவாக்கப்பட்டுக் கொண்டிருப்பதே கண்கூடு. மதங்களை அதாவது சகலவிதமான தர்மங்களையும் கடந்து தன்னைச் சரணடைபவர்களுக்கே சகலவிதமான பாவவிளைவுகளில் இருந்தும் காப்பதாக பகவான் உறுதியளிக்கின்றார். அதன் அடிப்படையில் சகல விதமான மதங்களையும் கடந்து நான் எந்த மதத்தையும் சேர்ந்தவனில்லை என மதங்களைக் கடந்து அனைத்து சீவராசிகளையும் நேசிக்கும் உன்னதமான பக்குவதிற்கு வந்தடைய முடியும்.
மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் கடவுளைப் பொறுத்த மட்டில் தன் உண்மையான ஆதார நிலை என்ன என்பதை உணர்ந்து அதன்படி நடக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். அதேபோல் பரதகண்டத்தில் “பாரத தேசத்தில் பிறந்த அனைவரும் உண்மையான தம் நிலையை அறிந்துணர்ந்து பகவத்கீதை பாரெங்கும் பரவும் வகையில் வாழ்வாங்கு வாழக் கடமைப்பட்டவர்கள். ஆனால் இன்று மதவெறியினாலும்;, போலி ஆத்மீகவாதிகள் மற்றும் தாமே கடவுள்கள் எனும் போலிச்சாமிகாளாலும், இதன் விளைவான முட்டாள் தனங்களின் அடிப்படையில் உருவான சாதி,மத, வர்க்க பேதங்களினாலும் அறிவற்ற ஞானக் குருட்டு வழிகாட்டிகளினாலும் சீரழிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றது.
இதனைத்தான்; ரவிப்பிரியனின் இசையமைப்பில், மறைந்த பிரபலபாடகர் பாலசுப்பிரமணியம் அவர்களின் குரலில் விஷ்ணுமுரளியின் தயாரிப்பில் 2008 இல் வெளிவந்த அடியேன் எழுதிய பாடலில் உந்தன் கீதையுரை நந்தலாலா வெறும் பேச்சளவில் உள்ளதடா நந்தலாலா” என எழுதியிருந்தேன்!
இந்தியாவின் இந்துத்துவக் கொள்கையால் இந்திய தேசம் இன்று அல்லாடுகின்றது. அன்று ஆதிமூலம் பரம கிருஷ்ணர் கோபாலனாக வந்து கோமாதக்களை அரவணைத்து முழுச் சமூகத்திற்குமே உணவு வழங்கும் உயிர்நாடியான விவசாயிகளுடனேயே வாழ்ந்து பெரும் தத்துவத்தையே போதித்தார். இன்று இந்தியாவின் உயிர் நாடியான விவசாயிகளே சொந்த அரசினால் நசுக்கப்படுகின்றார்கள். உண்மையான தர்மமானது, மதங்களைக்கடந்து தர்மத்தின் பாதையில் ஆட்சிபுரிவதாகும். ஆனால் உண்மையான தர்மத்தை இந்தியா பின்பற்றாமல் அதர்மத்தையே புரிகின்றது. வெறும் சட்டப் புத்தகமாகவும், சத்தியப் பிரமாணத்திற்கு மட்டும் பயன்படுத்தும் ஏடாகவும், பகவத் கீதை வெறும் பேச்சளவிலேயே உள்ளது. உண்மை உணரப்படாமலேயே ஆட்சி தள்ளாடுகின்றது என்று தலைவர்கள் கீதை சொல்லும் தெளிவான தர்மத்தைப் பின்பற்றி மதங்களைக் கடந்து தர்மத்தின் பாதையில் பயணம் செய்யுமானால் அன்று இந்திய நாடே சாந்தியும், சமாதானமும், அன்பும், அமைதியும் தவழும் புத்தம் புதிய பூமியாக மாறும்!
“பகவத்கீதை உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொள்ளப்பட்டால் மனிதகுலத்திற்கு அது மாபெரும் வரப்பிரசாதமாகும். ஆனால் அதனைத்தத்துவக்கறங்பனைக் காவியமாகவோ அல்லது பெயரளவில் தேசிய நூலாகவோ மாற்றுவதன் மூலம் எந்தவிப்பயனும் ஏற்படப்போவதில்லை.”
மிருகங்களைவிடச் சிறப்பாக வாழும் தகுதி மனிதனுக்குரியது. முதலமைச்சர், மவாட்ட கலக்டர், மந்திரிகள் போன்ற உயர் பதவியிலுள்ள அதிகாரிகளுக்கு ஏன் அதிகமான வாழ்க்கை வசதிகள் தரப்பட்டுள்ளன? ஏனென்றால் சாதரண வேலையாளைவிட அவர்களுக்குப் பொறுப்புள்ள கடமைகளை நிiவேற்ற வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். அதுபோலவே எப்பொழுதுமே வயிற்றுப் பசிக்காக இரைதேடும் மிருகங்கைளவிட மனிதன் மிக உயர்ந்த கடமையைச் செய்ய வேண்டியவானாய் இருக்கின்றான்.
ஆனால் இன்றைய நாகரீகம் மிருக வாழ்வின் தரத்தையொட்டிக் காணப்படுவதால், இயற்கையின் விதிப்படி வயிற்றை நிரப்பும் பிரச்சனை மிகவும் தீவிரமாகி உள்ளது. பசிக்கு உணவு தேவை. உணவுக்கு வேலை தேவை. உழைக்க விரும்புவர்களுக்கு வேலையில்லை. இதனால் மிருகநிலையில் வாழ்வதால் ஆன்மீக நிலையை, இறைநிலையை நிராகிரிக்கன்ற தாழ்ந்த நிலை ஏற்படுகின்றது. நான் திருந்த நாம் திருந்துவோம்! நாம் திருந்த நாடு திருந்தும்!
இரும்புகளால் ஆனால் இயந்திரங்களும், இயந்திரங்களாய் இயங்கும் மனிதர்களும் நிறைந்துள்ள இருண்ட யுகத்தில் தர்மத்தின் உன்னத அறிவை வழங்கி வழிகாட்டும் பகவத்கீதையின் ஒளி மட்டுமே விடியலைத் தரும்! இல்லையேல் நீதி தவறிய ஆட்சியினால் மதுரையே தீக்குப்பலியான கதைதான் இயற்கையின் விதியாக முடியும். நாட்டின் சட்டங்களை தம் விருப்பத்திற்கு வளைத்துப் போட்டு ஆட்சிசெய்பவர்கள் எல்லாம் புரிந்து கொள்ள வேண்டிய பேருண்மை “ இயற்கையின் (தர்மத்தின்) சட்டத்தை யாரும் தப்பவோ தாண்டவோ முடியாது!”


No comments:

      முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்லர்..!             முகுந்தமுரளி உலகப் பொதுப் புத்தாண்டு வாழ்த்து உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும். 1.1....