Thursday, 22 April 2021


             =  முகுந்தமுரளி =

சர்வதேச அரசுகளின் வல்லாதிக்கப் போட்டிகளின் அடிப்படையில் நிகழ்ந்த தந்திரோபாய நடவடிக்கைளின் விளைவுகள் பூகோள அரசியல் களச்சூழ்நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தின. இதனைத் தமக்கு  சாதகமாக்கி,; சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பெயரால் ராஜபக்ச சகோதரர்கள்; இறுதி யுத்தத்தில் மாபெரும் இனப்படுகொலையை நடத்தி முடித்தனர். இவர்கள்; அரங்கேற்றிய யுத்த தர்மங்களை மீறிய ஈனச்செயல்களையே கண்டுகொள்ளாத ஐக்கிய நாடுகள் சபை இன்று போர்க்குற்றம், மனித உரிமை மீறல் என்று பட்டியலிட்டு இலங்கை அரசை தம் வழிக்குக்கொண்டுவர முனைகிறது. 

வெல்ல முடியாத வேங்கைகளை வென்றவர்கள் நாங்கள் தான் என மார்தட்டிக் கொண்டு குடும்ப ஆட்சி மீண்டும் அரங்கேறியது. அப்பொழுது, ஒரு முறைதான் கோத்தபாய ஜனாதிபதி என்று கையொப்பமிட்டு மலர்ந்த “மொட்டு ஆட்சிபீடம்”, இன்று சகோதரர்கள் ஆதிக்கப்போட்டியில் முட்டிமோதுகிறது. இந்நிலையில் மேற்குலகின் சூழ்ச்சி வலையின் பின்னணியில் ஏற்படப்போகும் ஆட்சிக் கவிழ்ப்பா? அல்லது  சர்வதேச நாடுகளின் அணுகுமுறை நெருக்கடிகளைச் சமாளிக்கவும், வம்ச ஆட்சியை நிலைநிறுத்தவும், கோத்தாவின் தலைமையில் இராணுவ ஆட்சி ஆரம்பமாகுமா? இவையே பேசுபொருளாக இன்றைய களச் சூழ்நிலையும் அதன் போக்கும் காணப்படுகிறது. 

அதேவேளை தமிழீழ நிழல் அரசு அழிவதற்குக் காரணமாகிய சர்வதேச சமூகம், இன்றும் சட்டம் போட்டு தமிழர்களின் அரசியல் உரிமைகளை நசுக்கியே வைத்துள்ளன. இலண்டனில் விடுதலைப்புலிகளின் மீதான தடை நியாயமற்றது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னரும் கூட பிரித்தானிய அரசானது தடையைத் தொடரவே செய்கிறது. கனடாவிலும்; தொடரும் தடையினால் மக்கள் பாதிக்கப்பட்டும், இன்றும்  தடை நீக்க போராடும்  முயற்சியின்மையால் அல்லது அக்கறையின்மையால் அதேதடை தொடர்கின்றது. அதேவேளை இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட தமிழர் அமைப்புக்களுடன் தொடர்பு பேணுவோம் என அறிக்கை விடும் அமெரிக்கா தனது  கீச்சகத்தில் (Twitter) பரஸ்பரம் லாபம் காணுவோம் வாருங்கள் என்று உத்தியோக பூர்வமாக தமிழ் அமைப்புக்களுக்கு அழைப்புவிடுகிறது. 

இவ்வாறாக தமிழர்களின் எழுச்சியை சட்டம் போட்டுக் கட்டுப்படுத்தும் அதேவேளை தங்கள் சுயலாப நலன்களுக்காக தமிழரைப் பயன்படுத்த முற்படும்  இந்த வல்லாதிக்க “விலாங்கு”களின் தலையும், வாலும் காட்டும் வில்லங்கப் போக்கை உணர்ந்து கொண்டால் நாமும் ஆட்டத்தில் எம்மைப் பலப்படுத்தி ஆடலாம். தமிழர் தரப்பு பேரம் பேசும் வலுவை ஒன்றுபட்டு உருவாக்குதல் என்பது எம் மக்களுக்கான விடியல் உருவாக பலமான அத்திவாரமாக அமையும். எம் தேசத்தில் போராடும் எம் மக்களின் கோரிக்கைளுக்கு வலுச்சேர்க்கும் வழிவகைகளில் புலம்பெயர் தமிழர் நாம்;; செயல்படல் வேண்டும். 

இன்று அமெரிக்க – சீனா வல்லாதிக்கப் போட்டியில் பிரிந்து அணிசேரும் நாடுகள் அன்று தமிழரின் நியாயமான “போரட்டப் பலமான  போராளிகளின்”; தியாகத்தால் நிமிர்ந்து நின்ற தமிழீழ நிழல் அரசை, அதனால் விளைந்த அரசியல் பலத்தையும், ஒட்டுமொத்த தமிழர்களின் விலைபோகத் தலைமையையும், தங்கள் நலன்களுக்கு வில்லங்கம் என எண்ணி அழிக்கக் காரணமான ஆதிக்கப்போட்டியாளர்களின்; இணைவுகள், விரிசல்கள் என்பனவற்றைப் பார்ப்போம்.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியும், விளாமிடிர் புடினின் கனவும் 

1999 இல் விளாடிமிர் புடின் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, நேட்டோவில் (அட்லாண்டிக் கூட்டணியில்) சேர ரஷ்யா தனது விருப்பத்திலிருந்து ஒரு ரு-திருப்பத்தை எவ்வாறு மேற்கொண்டது என்பது கவனத்திற்குரியது. நேட்டோவில் இணையும் நோக்கம் 1990 களில் பெரும்பாலும் ரஷ்ய வெளியுறவுக் கொள்கையை நிர்வகித்தது, மேலும் நேட்டோவிற்கு ரஷ்யாவின் அணுகல் சாத்தியம் குறித்து 2000 ஆம் ஆண்டில் விளாடிமிர் புடினின் புகழ்பெற்ற அறிக்கைகளில் கூட விளைந்தது - இது சோவியத் யூனியனின் வெடிப்புக்கு முன்னர் இருந்ததைப் போல இப்போது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. 

2000 ஆம் ஆண்டு நவம்பரில், விளாடிமிர் புடின் எழுதி வெளியிட்ட ஒரு நிரல் கட்டுரையின்  கருத்தானது, “ரஷ்யா எப்போதும் தன்னை ஒரு யூரேசியநாடு என்று உணர்ந்திருக்கிறது. ரஷ்ய பிரதேசத்தின் முக்கிய பகுதி ஆசியாவில் உள்ளது என்பதை நாம் ஒருபோதும் மறக்கவில்லை. வெளிப்படையாக, நாங்கள் எப்போதும் அந்த நன்மையை நன்கு பயன்படுத்தவில்லை. ஆசிய-பசிபிக் நாடுகளுடன் சேர்ந்து, வார்த்தைகளிலிருந்து செயல்களுக்கு முன்னேறவும், பொருளாதார, அரசியல் மற்றும் பிற உறவுகளை கட்டியெழுப்பவும் நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். ரஷ்யா இன்று இதற்கு ஒவ்வொரு வாய்ப்பையும் கொண்டுள்ளது.”

இக்கருத்து சந்தேகத்திற்கு இடமின்றி ரஷ்யா மேற்கத்திய சனநாயக அமைப்புடன் அதன் தசாப்த கால சிக்கலின் முடிவுகளில் எவ்வளவு ஆழமாக ஏமாற்றமடைந்தது என்பதைப் பிரதிபலித்தது. ரஷ்ய பொருளாதாரத்திற்கு மேற்கு நாடுகளிலிருந்து உண்மையான ஆதரவு இல்லாத நிலையில்  “முதல் அடுக்கு நாடு" என்ற நிலையை மீண்டும் பெற ரஷ்யாவுக்கு ஒரு பாதையை வழங்குவதாக மொஸ்கோ இத்தருணத்தில் ஆசியாவைக் கண்டது. கிழக்கு ஜேர்மனிய நகரமான டிரெஸ்டனில் கேஜிபி(KGP)யின் லெப்டினன்ட் கேர்ணலாக, சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியைக் கண்ட புட்டினின் கனவு இதுதான்.

சீன-ரஷ்ய மூலோபாயக் கூட்டு 

இச்சந்தர்ப்பத்தில் சீனா தன்னை ஒரு உண்மையான உலகளாவிய வல்லரசாக மாற்ற, இப்பகுதியில் காணாமல் போன ஒரு ஆக்கக்கூறாகக் காணப்படும் ஆதரவற்ற ரஷ்யா அனுமதிக்கும் என்று பெய்ஜிங் சரியாகக் கண்டறிந்து செயற்பட்டது. சீனாவுடன் பல பில்லியன் டாலர் இராணுவ ஒப்பந்தங்கள்  அனுமதித்தன் மூலம் “போருக்குப் பிந்தைய இரண்டாவது தலைமுறை ஆயுதங்களை நான்காவதாக உயர்த்த, சோவியத் ஒன்றியம் சிதைந்ததைத் தொடர்ந்து ரஷ்யா தனது இராணுவ-தொழில்துறை வளாகத்தை பாதுகாக்க முடிந்தது." என்பதை “சீனாவும் உலகமும்” வெளியீட்டில் சீன-ரஷ்ய உறவு பற்றிய அத்தியாயத்தில் அலெக்ஸி டி. வோஸ்கிரெசென்ஸ்கி ஆவணப்படுத்தியுள்ளார்.

இம்முதல் இராணுவ இணைப்பு ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையில் பன்முக பொருளாதார மற்றும் அரசியல் ஒத்துழைப்பை உருவாக்க உதவியது. 1996 மற்றும் 2008 க்கு இடையில், அரை நூற்றாண்டு காலமாக சீன-ரஷ்ய எல்லை தகராறு படிப்படியாக தீர்க்கப்பட்டது மட்டுமல்லாமல், வர்த்தக பரிமாற்றம் மற்றும் ரஷ்யாவில் சீன முதலீடுகளும் அதிவேகமாக வளர்ந்தன. இந்த செயல்முறையே ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் (Shanghai Cooperation
Organisation
)
உருவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது. இது 2017 ஆம் ஆண்டளவில் இந்தியா மற்றும் பாகிஸ்தானையும் கூட உறுப்பினர்களாக ஏற்றுக்கொண்டமையும், சீனாவின் ராஜதந்திரப் பாதையாகிய “பட்டுப்பாதை” எனும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவில் செல்வாக்கு செலுத்த பெய்ஜிங்கின் கருவித்தொகுப்புகளை மறுகட்டமைக்கும் திட்டமும்  கவனத்திற்குரியது.       (தொடரும்)             

           


No comments:

      முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்லர்..!             முகுந்தமுரளி உலகப் பொதுப் புத்தாண்டு வாழ்த்து உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும். 1.1....